Monday, May 20
Shadow

அதர்வாவுக்கு கை கொடுத்ததா “ட்ரிகர்” – விமர்சனம் (Rank 3.5/5)

அதர்வாவுக்கு கை கொடுத்ததா ட்ரிகர் – விமர்சனம்

அதர்வா நடிப்பில் சாம் ஆண்டன் இயக்கத்தில் இன்று திரையரங்கில் வெளியான படம் ட்ரிகர்.

100 திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இரண்டாவது முறையாக அதர்வா, சாம் ஆண்டன் கூட்டணி ட்ரிகர் படத்தில் இணைந்ததால் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இந்த படத்தில் தன்யா ரவிச்சந்திரன், அருண்பாண்டியன், சின்னிஜெயந்த், அறந்தாங்கி நிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். குழந்தை கடத்தலை மையமாக வைத்து கிரைம் திரில்லர் திரைப்படமாக இந்த படம் உருவாகியுள்ளது.

காவல்துறை அதிகாரியான அதர்வா ஒரு சிறிய பிரச்சினை காரணமாக சஸ்பென்ட் செய்யப்படுவார். பின்னர் தனது உயர் அதிகாரியால் undercover போலீஸாக காவல்துறை செய்யும் தவறுகளை கண்காணிக்கும் பணிக்கு மற்றப்படுவார். அப்படி கண்காணிப்பில் ஈடுபட்டு இருக்கும் போது குழந்தைகள் சிலரால் கடத்தப்படுவார்கள்.

ஆசிரமத்தில் வளரும் குழந்தைகளை நூதனமுறையில் ஒரு கும்பல் கடத்தி வருவது தெரியவரும். அந்த குழந்தைகளை undercover போலீசான அதர்வா எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் ட்ரிகர் படத்தின் கதை.

வழக்கமான போலீஸ், கடத்தல் கும்பல் இடையே நடக்கும் பிரச்சனைகளை சற்று வித்தியாசமான முறையில் ஆக்ஷன் காட்சிகளுடன் கொடுத்துள்ளார் இயக்குனர் சாம் ஆண்டன்.

100 படத்தை போலவே இந்த படத்திலும் காவல்துறை அதிகாரியாக அதர்வா நடித்துள்ளார். ஃபிட்டான உடலுடன் தனக்கே உரித்தான பாணியில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் அதர்வா. காதல் காட்சிகள், ஆக்ஷன் காட்சிகள் என காட்சிக்கு காட்சி தன்னால் முடிந்த அளவுக்கு இயலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அதர்வாவின் அப்பாவாக நடித்துள்ள அருண் பாண்டியன் முன்னாள் காவல்துறை அதிகாரியாகவும் அல்சைமர் என்ற ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளவராகவும் நடித்துள்ளார். இல்லை இல்லை அந்த கதாப்பாத்திரமாகவே வாழ்ந்துள்ளார்.

அதர்வா ஜோடியாக தன்யா நடித்துள்ளார். காதல் காட்சிகளோ, டூயட் பாடல்களோ இல்லாமல் ஒரு சில இடங்களில் மட்டுமே காதல் உள்ளது. தான்யாவிற்கு அதிகமான காட்சிகள் இல்லையென்றாலும் நிறைவாக வந்து போகிறார். சின்னி ஜெயந்த், முனிஷ்காந்த், நிஷா, அன்பு என பலர் இருந்தாலும் பெரிய அளவில் காமெடி காட்சிகள் இல்லை.

ஒரு த்ரில்லர் படத்திற்குரிய பின்னணி இசையைக் கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜிப்ரான்.

இடைவேளைக்கு முன்பு காட்சிகள் சற்று மெதுவாக நகர்ந்தாலும் இடைவேளைக்கு பிறகு ஆக்ஷன் காட்சிகளாக படம் நகர்கிறது. இயக்குனர் சொல்ல வந்த கதையை தன்னால் முடிந்த அளவு விரிவாக காட்சிப்படுத்தியுள்ளார்.

மொத்தத்தில் வித்தியாசமான கிரைம் திரில்லர் கதையாக உருவாகியுள்ள ட்ரிகர் படத்தை திரையரங்கில் பார்த்து ரசிக்கலாம்.