Sunday, January 19
Shadow

‘யுஐ’ – திரைவிமர்சனம்

ஒரு காலத்தில் கன்னட படங்களை பலர் கிண்டல் செய்வார்கள் ஆனால் கே,ஜி,ஏப். திரைபடத்தின் வெற்றி கன்னட பட உலகையே மாற்றியமித்து விட்டது. என்று தான்சொல்லணும் பல உலக தரமான இனியான படங்கள் இப்போது வெளியாகிவிட்டது. அந்த வகையில் இந்த யு ஐ படமும் இணையுமா என்று எதிர்பார்ப்போம்

திரைப்பட இயக்குநரான உபேந்திரா இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஒன்றை திரையரங்குகளில் பார்க்கும் சிலர் பித்து பிடித்தது போல் ஆகிறார்கள். சிலர் தைரியமான சில முடிவுகளை எடுக்கிறார்கள். இதனால், அந்த படத்தை ஒரு தரப்பு கொண்டாட, மற்றொரு தரப்பினர் படத்தை தடை செய்ய வேண்டும் என்று போராடுகிறது. இது போதாது என்று முன்னணி திரைப்பட விமர்சகர் அந்த படத்தை நான்கு முறை பார்த்த பிறகும் விமர்சனம் எழுத முடியாமல் திணறுகிறார். இதனால், அந்த படம் குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொள்ள முயற்சிக்கும் அவர், படத்தை இயக்கிய உபேந்திராவை தேடி செல்ல, அவரது தேடலுக்கான விடை கிடைத்ததா?, உபேந்திரா இயக்கிய அந்த படத்தின் கதை என்ன? என்பது தான் ’யுஐ’ படத்தின் கதை.

யுனிவர்சல் இண்டலிஜன்ஸ் என்பதன் சுருக்கமான UI-மூலம் அரசியலை நையாண்டியாக மட்டும் இன்றி, ஃபேண்டஸியாகவும் பேசியிருக்கும் இயக்குநர் உபேந்திரா, நாட்டில் மதம் மற்றும் சாதியை வைத்து மக்களை பிரிவினை படுத்தும் சக்திகள் பற்றி பேசுவதோடு, இயற்கை வளங்களை சுரண்டுவதால் எதிர்காலத்தில் எத்தகைய ஆபத்து ஏற்படும் என்பதையும் தனது கற்பனை உலகத்தின் மூலம் பார்வையாளர்களுக்கு உணரச் செய்திருக்கிறார்.

சத்யா மற்றும் கல்கி பகவான் என இரண்டு வேடங்களில் நடித்திருக்கும் உபேந்திரா, சத்யாவாக மென்மையாகவும், கல்கியாக மிரட்டலாகவும் நடித்திருக்கிறார். ஆரம்பக்காட்சியில் இரத்தம் தெறிக்க எண்ட்ரி கொடுப்பவர், எதிராளிகளை பந்தாடுவார் என்று எதிர்பார்க்கும் நேரத்தில், அவர்களிடம் தன் உடம்பை பஞ்சராக்கிக் கொண்டு மாஸ் காட்டி அசத்தியிருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் ரீஷ்மா நானய்யா, பாடல் காட்சிகளுக்காக பயன்படுத்தப்பட்டிருந்தாலும், ரசிகர்களுக்கான பொழுதுபோக்கு அம்சமாக படம் முழுவதும் வலம் வருகிறார்.

திரைப்பட விமர்சகராக நடித்திருக்கும் முரளி சர்மா, உபேந்திராவின் தந்தையாக நடித்திருக்கும் அச்யுத் குமார், ஓம் சாய் பிரகாஷ், சது கோகிலா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் பி.அஜனீஷ் லோக்நாத்தின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கமர்ஷியலாக இருக்கிறது.

ஒளிப்பதிவாளர் எச்.சி.வேணுகோபாலின் கேமராவை காட்டிலும், வி.எஃப்.எக்ஸ் கலைஞரும், கலை இயக்குநரும் அதிகம் உழைத்திருப்பது படம் முழுவதும் தெரிகிறது.

எழுதி இயக்கியிருக்கும் நடிகர் உபேந்திரா, உள்ளூர் அரசியல் தொடங்கி உலக அரசியல் வரை பேசியிருந்தாலும், எதையும் நேரடியாக பேசாமல் குறியீடாக காட்டி பேசியிருக்கிறார். அவரது இந்த முயற்சி வித்தியாசமானதாக இருந்தாலும் அதுவே விபரீதமாகவும் மாறியிருக்கிறது. இதனால், படத்தில் என்ன சொல்ல வருகிறார் என்று பார்வையாளர்கள் புரியாமல் புலம்புகிறார்கள்.

நாட்டில் ஒழுங்கான சாலைகள் இல்லை, ஆனால் விண்வெளி ஆய்வுக்கு முக்கியத்துவம் கொடுப்பது, மக்களுக்கு சரியான உணவு இல்லை என்றாலும் ஆயுதங்களை வாங்கி குவித்துக்கொள்வது, இயற்கை வளங்கள் பலரது சுயநலத்திற்காக சூரையாடப்படுவது ஆகியவற்றால் எதிர்காலத்தில் மக்களின் நிலை எப்படி இருக்கும்? என்ற தனது கற்பனைக்கு உயிர் கொடுத்தாலும், அதை சரியான முறையில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் இயக்குநராக உபேந்திரா சற்று தடுமாறியிருக்கிறார்.

மொத்தத்தில், ‘யுஐ’ தடுமாற்றம் ஏமாற்றம் மட்டுமே.