Saturday, January 28
Shadow

“வாரிசு” – திரைவிமர்சனம் (கலகலப்பு) Rank 3.5/5

 


வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் வாரிசு. தமன் இசை அமைத்துள்ள இப்படத்தை தில் ராஜூ தயாரித்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று (ஜன11). உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

படத்தின்‌ கதை. கதை என்ன என்பது ட்ரெய்லரை பார்த்தவுடனே தெரிந்துவிட்டது. அப்பாவுக்கு ஏற்பட்ட தொழில் போட்டியால் அப்பாவின் இடத்தை பிடித்து எப்படி எதிரியையும் குடும்பத்தையும் வென்று உண்மையான வாரிசானாரா என்பதே கதை. மிகப் பெரிய தொழிலதிபரான சரத்குமாருக்கு மூன்று மகன்கள். முதல் இரண்டு மகன்கள் அப்பாவின் சொல்பேச்சு கேட்டு அவருக்கு துணையாக தொழிலை பார்த்துக்கொள்கின்றனர்‌. ஆனால் மூன்றாவது பிள்ளையான விஜய் அப்பா பேச்சை கேட்காமல் தனியாக எனது சொந்த முயற்சியில் தொழில் செய்து காட்டுகிறேன் என்று சவால் விடுகிறார். இதனால் அப்பாவின் கோபத்திற்கு ஆளாகும் விஜய் வீட்டை விட்டு வெளியேறுகிறார். இது ஒருபுறம் இருக்க அப்பாவின் தொழில் எதிரியான பிரகாஷ் ராஜ் குடும்பத்தை பிரித்து சரத்குமாரை பழி வாங்க நினைக்கிறார். திடீரென சரத்குமாருக்கு உடல்நலம் பாதித்துவிட, சந்தர்ப்ப வசத்தால் அப்பாவின் நாற்காலியை கைப்பற்றுகிறார். இதனால் அண்ணன்கள் இருவருக்கும் பகையாளியாகிறார் விஜய். இறுதியில் பிரகாஷ்ராஜின் தந்திரத்தை வென்று குடும்பத்தை ஒன்றிணைத்தாரா என்பதே வாரிசு.

கதையாக பார்த்தால் ஏற்கனவே தமிழ் சினிமா துவைத்து எடுத்த கதைதான். இதுபோன்ற கதைக்கு திரைக்கதை எப்படி இருக்குமோ அப்படியேதான் இருக்கிறது. முதல் பகுதி சரத்குமார் குடும்பத்தின் அறிமுகம் அவருக்கு இருக்கும் தொழில் பிரச்சினை, விலக்கி வைக்கப்பட்ட மகன் என டெம்ப்ளேட்படியே நகர்கிறது. படத்தில் கதாநாயகி என்று ராஷ்மிகா வருகிறார். மொத்தமே ஐந்து காட்சிகள் கூட வந்திருக்க மாட்டார். படம் தொடங்கி கிட்டதட்ட முக்கால்மணி நேரம் கழித்து வருகிறார். படத்தை பார்த்து எந்த காட்சிக்கு எல்லாம் ரசிகர்கள் கலாய்ப்பார்களோ அங்கெல்லாம் இவர்களை தங்களை சுயபகடி செய்துகொண்டுள்ளனர். முதல் பாதியில் நீண்ட நாட்களுக்கு பிறகு மிகவும் இளமையான விஜயை பார்க்க நன்றாக இருக்கிறது. யோகி பாபு உடனான காமெடி ரசிக்க வைக்கிறது. இரண்டாம் பாதியில் விஜய்க்காகவே வைத்த சண்டைக் காட்சிகள் திணிக்கப்பட்டதாக உள்ளது. படம் இப்படித்தான் போகும், கிளைமாக்ஸ் இப்படித்தான் இருக்கும் என்று யூகித்த படியே படமும் சென்று முடிவடைகிறது. ரஞ்சிதமே பாடலில் விஜயின் துள்ளல் நடனம் ரசிகர்களை நிச்சயம் ஆட்டம் போட வைக்கும். விஜயின் சின்ன சின்ன மேனரிஸம் ரசிக்க வைக்கிறது. தமனின் இசையில் பாடல்கள் நன்றாக இருக்கிறது. பின்னணி இசையில் விஜய் ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

அங்கெங்கு வரும் சில வசனங்கள் ஈர்க்கின்றன. வம்சி விஜய்யை நம்பி இறங்கியுள்ளார். விஜய்யும் வம்சியை நம்பி தன்னை ஒப்படைத்துள்ளார். அதர பழசான கதைதான் என்றாலும் செக்க சிவந்த வானம் உள்பட பல்வேறு திரைப்படங்கள் வந்து போவதை தவிர்க்க முடியவில்லை. மொத்தத்தில் படத்தையும் வம்சியையும் சேர்த்து விஜய் காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால் அந்த முயற்சி வெற்றிபெற்றதா என்றால் இல்லை என்றே சொல்லலாம்.