Sunday, October 1
Shadow

“வீரன்” – திரை விமர்சனம் (ரேங்க் 2.5/5)

 

 

சத்ய ஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் தயாரிப்பில் வெளியாகி உள்ளது வீரன் திரைப்படம். இப்படத்தை ‘மரகத நாணயம்’ மூலம் புகழ் பெற்ற இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவன் இயக்கியுள்ளார். ஹிப்ஹாப் தமிழா ஆதி,வினய், ஆதிரா ராஜ், முனீஸ் காந்த், காளி வெங்கட், சசி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் கதை பற்றி பார்க்கலாம்.

படத்தின் கதை
வீரனூரில் வாழ்ந்து வரும் ஹிப் ஹாப் ஆதிக்கு, தனது சிறு வயதில் மின்னல் தாக்கப்பட்டு சுய நினைவை இழக்கிறார். உடனடியாக ஆதியை மருத்துவமனையில் அனுமதிக்கின்றனர். மருத்துவர்களின் சிகிச்சையில் இருக்கும் ஆதி எப்போது வேண்டுமானாலும் சுய நினைவுக்கு வரலாம் என மருத்துவர் கூறிவிடுகிறார்.
சில நாட்கள் கழித்து ஆதிக்கு நினைவு திரும்புகிறது. அப்போது தனக்குள் மின்னல் சக்தி இருப்பதை ஆதி உணருகிறார்.

அதுமட்டுமின்றி தன்னால் வேறொருவரின் மூளையை கூட கட்டுப்படுத்த முடியும் என்பதை அறிந்து கொள்கிறார். உடல்நலம் சரியில்லாத ஆதியை அவரது அப்பா சிங்கப்பூரில் உள்ள அக்கா வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார். இதற்கிடையில் வில்லன் வினய் தனது ரூ. 2000 கோடி மதிப்புள்ள மிகவும் ஆபத்தான லேசர் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்தை வீரனூரில் செயல்படுத்த முயற்சிக்கிறார். இந்த திட்டத்தினால் ஏராளமான மக்கள் உயிர் பலியாகும் என ஆதிக்கு தெரியவருகிறது. இதன்பின் ஆதி என்ன செய்தார்? வில்லன் வினய்யை எப்படி எதிர்கொண்டார்? என்பதே படத்தின் மீதிக் கதை..

ஹாலிவுட்டில் உள்ள மார்வெல் படங்கள் போன்று தமிழிலும் ஒரு சூப்பர் ஹீரோ படத்தை கொடுக்க முயன்றுள்ளார் இயக்குனர். ஆனால் அது எதுவும் துளிகூட எடுபடாமல் போனது தான் சோகம். சிலந்தி கடித்ததால் ஸ்பைடர் மேன் ஆவதை போல் மின்னல் தாக்கியதால் மின்னல் வீரனாகும் ஆதி ஊரின் நன்மைக்காக எடுக்கும் சூப்பர் ஹீரோ அவதாரம் தான் படம். மலையாளத்தில் வந்த மின்னல் முரளிக்கும் இப்படத்திற்கு ம் மின்னல் தாக்குவது மட்டுமே ஒற்றுமை. மற்றபடி அப்படத்திற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. இதுபோன்ற ஃபேண்டஸி படங்களில் குழந்தைகளை கவரும் விதத்தில் சில காட்சிகள் இருந்தால் இன்னும் நன்றாக இருந்து இருக்கும். ஆனால் மருந்துக்கு கூட ஒரு சுவாரஸ்யமான காட்சிகள் இல்லை. இதனால் படம் தேமே என்று செல்கிறது.

முதல் பாதியில் ஆதிக்கு மின்னல் தாக்குவது அதன் தாக்கம் மற்றும் அதன் பவர் எப்படிப்பட்டது என்று காட்டுகிறார்கள். ஆனால் அது போதுமானதாக இல்லை. காமெடி காட்சிகளும் ரசிக்கும் படி இல்லை. நாயகனாக ஆதி வழக்கம் போல் தனது மற்ற படங்களில் என்ன செய்தாரோ அதையே இதிலும் செய்துள்ளார். நாயகியாக ஆதிரா பக்கத்து வீட்டு பெண் போல உள்ளார். ஆனால் கதையில் இவருக்கு எந்த பயனும் இல்லை.

முனீஷ்கந்த் மற்றும் காளி வெங்கட்-ன் காமெடி காம்போ ஒர்க்அவுட் ஆகவில்லை. வீரன் படத்திற்கு ஆதி தான் இசை அமைத்திருக்கிறார். படத்தில் பாடல்கள் மனதில் பதியவில்லை. பின்னணி இசை சுமார். வழக்கமாக தமிழ் சினிமாவில் வரும் கார்ப்பரேட் வில்லன் வேடம் இதில் வினய்க்கு. கொடுத்த வேலையை செய்துள்ளார்.

ஃபேண்டஸி படமாக இருந்தாலும் அதற்கான நியாயத்தை திரைக்கதையில் செய்ய மறந்துவிட்டார் இயக்குநர். சுவாரஸ்யமான கதையை வைத்துக் கொண்டு திரைக்கதையில் சொதப்பி தள்ளியுள்ளார். உயிரற்ற காட்சிகள் ரசிகனின் பொறுமையை ரொம்பவும் சொதிக்கிறது. மொத்தத்தில் வீரன் சோதனைக்காரன்.