Wednesday, May 6
Shadow

‘வித் லவ்’ – திரை விமர்சனம் (முதல் காதலின் நினைவுகளை மென்மையாக வருடும் உணர்ச்சி பயணம்)

‘வித் லவ்’ – முதல் காதலின் நினைவுகளை மென்மையாக வருடும் உணர்ச்சி பயணம்

இன்றைய இளைஞர்களின் மனநிலையையும், காலத்தால் அழியாத முதல் காதல் நினைவுகளையும் மையமாக கொண்டு உருவாகியிருக்கும் படம் தான் ‘வித் லவ்’. இயக்குநர் மதன் எழுதி இயக்கியுள்ள இந்த படம், காதலை வெறும் காதல் கதையாக மட்டுமே அல்லாமல், மனித உணர்வுகளின் உள் உலகத்தை ஆராயும் முயற்சியாக உருவெடுத்துள்ளது.

கதையின் சாரம்
திருமணத்திற்கு முன் நாயகன் சத்யா (அபிஷன் ஜீவிந்த்), தனது அக்கா பரிந்துரைத்த மோனிஷா (அனஸ்வரா ராஜன்) என்பவரை சந்திக்கிறார். வாழ்க்கையை பற்றிய உரையாடல்களில் அவர்கள் தங்களின் முதல் காதல் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கிறார்கள். அந்த உரையாடல் ஒரு சுவாரஸ்யமான முடிவுக்கு வழிவகுக்கிறது. தங்கள் கடந்த கால முதல் காதலை மீண்டும் தேடி செல்லும் பயணத்தை இருவரும் தொடங்குகிறார்கள். அந்த பயணத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் உணர்ச்சி அனுபவங்களே படத்தின் மையக் கரு.

நடிப்பு
சத்யா கதாபாத்திரத்தில் அபிஷன் ஜீவிந்த் நம்பிக்கையூட்டும் நடிப்பை வழங்கியுள்ளார். குறிப்பாக பள்ளி பருவ மாணவனாகவும், பின்னர் முதிர்ந்த இளைஞனாகவும் இரண்டு வெவ்வேறு மனநிலைகளை இயல்பாக வெளிப்படுத்தியிருப்பது சிறப்பு. முதல் காதல் உருவாகும் வயதில் நிகழும் மன மாற்றங்களை அவர் அழுத்தமான நடிப்பால் உயிர்ப்பித்துள்ளார்.


மோனிஷா கதாபாத்திரத்தில் அனஸ்வரா ராஜன் இந்தப் படத்தின் முக்கிய பலமாகத் திகழ்கிறார். கடந்த கால காதல் நினைவுகளால் மனதளவில் சிக்கித் தவிக்கும் பெண்ணின் உளவியல் நிலையை மிகவும் நுட்பமாக வெளிப்படுத்தியுள்ளார். அவரது நடிப்பில் உணர்ச்சி ஆழம் தெளிவாகத் தெரிகிறது. டப்பிங் பகுதியில் இன்னும் சிறு கவனம் இருந்திருக்கலாம் என்றாலும், மொத்தத்தில் அவர் திரைபடத்திற்கு வலு சேர்த்துள்ளார்.

அனிஷா கதாபாத்திரத்தில் காவ்யா அனில் பார்வையாளர்களின் மனதில் நீங்கா இடம் பிடிக்கிறார். குறிப்பாக காபி ஷாப்பில் நடைபெறும் உரையாடல் காட்சிகள் கவிதை நயத்துடன் அமைந்துள்ளன. தேனி முருகன், “கலைமாமணி” சரவணன், ஆர்ஜே ஆனந்தி, ஹரிஷ் குமார், சித்தார்த் உள்ளிட்ட துணை நடிகர்களும் தங்களுக்கான பங்களிப்பை நியாயப்படுத்தியுள்ளனர்.


தொழில்நுட்ப அம்சங்கள்
ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு படத்திற்கு உயிரூட்டுகிறது. பள்ளி பருவ நினைவுகளை திரையில் உணர்த்தும் விதமாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஷான் ரோல்டனின் இசை படத்தின் உணர்ச்சி நயத்தை உயர்த்துகிறது. பாடல்களும் பின்னணி இசையும் காட்சிகளுடன் இயல்பாக கலந்துள்ளன. எடிட்டிங் மற்றும் கலை இயக்கமும் கதையின் ஓட்டத்துடன் இணைந்து செயல்பட்டுள்ளன.
இயக்கம் மற்றும் திரைக்கதை
பள்ளி பருவ காதல் கதைகள் தமிழ் சினிமாவில் பல முறை வந்திருந்தாலும், இயக்குநர் மதன் இந்த கதையை நினைவுகளைத் தூண்டும் உணர்ச்சி அனுபவமாக மாற்றியுள்ளார். முதல் காதல் என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் அழியாத அடையாளமாக இருக்கும் என்பதை நகைச்சுவை, மென்மையான உணர்ச்சி மற்றும் வாழ்க்கை உண்மைகளுடன் இணைத்து சொல்லியிருப்பது படத்தின் சிறப்பு.

மொத்தத்தில்
‘வித் லவ்’ ஒரு சத்தமில்லாத, மென்மையான உணர்ச்சி அனுபவமாக அமைகிறது. கடந்த கால நினைவுகளை மீண்டும் மனதில் வரவழைத்து, பார்வையாளர்களுக்கு நெகிழ்ச்சியூட்டும் ஒரு ‘ஃபீல் குட்’ காதல் திரைப்படமாக இந்த படம் திகழ்கிறது. முதல் காதல் நினைவுகளை மீண்டும் உணர விரும்புவோருக்கு இந்த படம் ஒரு இனிய அனுபவமாக இருக்கும்.

 

Rank 4.5/5