Monday, May 20
Shadow

” யாதும் ஊரே யாவரும் கேளிர்” – திரை விமர்சனம்! Rank 3/5

விஜய் சேதுபதி நடித்துள்ள யாதும் ஊரே யாவரும் கேளிர் திரை விமர்சனம்!

விஜய் சேதுபதி நடிப்பில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற திரைப்படம் இந்த வாரம் வெளியாகி உள்ளது. இப்படத்தை வெங்கட கிருஷ்ண ரோகந்த் இயக்கியுள்ளார். படத்தின் கதை பற்றி பார்ப்போம்.

விஜய் சேதுபதி இலங்கை அகதி. இவருக்கு இசை கலைஞர் ஆக வேண்டும் என்பது ஆசை. லண்டன் சென்று இசைக் கல்லூரியில் படிக்க கிளம்பும் அவரை ராணுவம் பிடித்து சிறையில் அடைக்கிறது. சில வருடங்கள் கழித்து இளைஞனாக வெளியே வரும் விஜய் சேதுபதி கள்ளத்தோணி மூலம் கேரளா செல்கிறார். அங்கே இசை பயிலும் அவர் லண்டனில் நடக்கும் இசை போட்டியில் பங்கேற்க அப்ளிகேஷன் போடுகிறார். ஆனால் இவருக்கு எந்த நாட்டை சேர்ந்தவர் என்ற எந்தவித அடையாளமும் இல்லாததால் கிருபாநதி என்ற வேறொரு நபரின் பெயரை பெற்று இலங்கை அகதி என்ற அடையாளத்தை பெற கொடைக்கானல் செல்கிறார். இறுதியில் அவருக்கு அடையாளம் கிடைத்ததா? லண்டன் போட்டியில் பங்கேற்றாரா? என்பதே இப்படத்தின் கதை.

இப்படம் இலங்கை அகதிகள் பற்றியும் அவர்களுக்கும் திறமைகள் இருக்கிறது. அப்படி திறமைகள் இருந்தும் எந்தவித அடையாளமும் அங்கீகாரமும் இல்லாததால் அவர்கள் படும் அவஸ்தையை சொல்ல முயன்றுள்ளார் இயக்குனர். விஜய் சேதுபதி இலங்கை அகதியாக நடித்துள்ளார். நன்றாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ். மோதலில் தொடங்கி காதலில் முடிகிறது இவர்களது சந்திப்பு . மற்றபடி இவருக்கு வேலையில்லை. விஜய் சேதுபதி தோற்றம் சற்று ஏமாற்றத்தை அளிக்கிறது. இயக்குனர் மையக் கதையை விட்டுவிட்டு காதல், பகை என செல்கிறது. சிறு வயதில் தனது அப்பாவை கொன்றதற்காக போலீசாக இருக்கும் மகிழ் திருமேனி விஜய் சேதுபதியை கொலை செய்ய தேடி அலைகிறார். இது படத்துக்கு தேவையில்லாத ஒன்று. கனிகா , நடிகர் விவேக் ஆகியோர் நடிப்பு நன்று. விவேக்கை திரையில் பார்க்கும் போது கண் கலங்குகிறது.

புனிதனான விஜய் சேதுபதி கிருபாநதி என்னும் புதிய அடையாளத்தை தேடி கொடைக்கானல் வருகிறார். அதனை பெற விடாமல் தனது தனிப்பட்ட பகைக்காக மகிழ் திருமேனி தடுக்க நினைக்கிறார்.
கரு.பழனியப்பன், மோகன் ராஜா இருவருக்கும் குறைந்த அளவே காட்சிகள். நிவாஸ் கே பிரசன்னாவின் இசையில் பாடல்கள் கவரவில்லை. பின்னணி இசை ஓகே.

அகதிகள் படும் துயரத்தை இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாம். திரைக்கதை சில இடங்களில் தொய்வாக உள்ளது. வசனங்கள் நன்றாக உள்ளது.