Friday, December 6
Shadow

இயக்குநர் பா.ரஞ்சித்தின் தயாரிப்பில் ‘ஜாதிகளிடம் ஜாக்கிரதை’ மற்றும் ‘டாக்டர். ஷூமேக்கர்’.!

இயக்குநர் பா.இரஞ்சித்தின் “நீலம்” அமைப்பின் ஒருங்கிணைப்பில் சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் திரையிடப்பட்டது இரண்டு ஆவணப்படங்கள். நீலம் அமைப்பின் சார்பில் இந்த ஆவணப்பட வெளியீடு நிகழ்வை ஒருங்கிணைத்திருந்தார், முத்தமிழ்.

வணிகப்படங்களின் தேவையையும் ஆவணப்படங்களின் தேவையையும் ஒப்பீடு செய்ய முடியாது என்றாலும், ஆவணப்படங்கள் வணிகப்படங்களுக்கு நிகராக தேவை என்பதையே திரையிட்ட “ஜாதிகளிடம் ஜாக்கிரதை” மற்றும் “டாக்டர். ஷூமேக்கர்”… ஆகிய இரண்டு ஆவணப்படங்களும் முன்மொழிந்தன. ஓவியர் சந்துரு, இயக்குநர்கள், ராம், சுசீந்திரன், பாண்டிராஜ், மற்றும் எழுத்தாளர்கள் ஆதவன் தீட்சண்யா, எஸ்.வி.ஆர், வெங்கடேஷ் சக்கரவர்த்தி, கவிஞர். உமாதேவி, எடிட்டர் லெனின் உள்பட பலர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் மிர்ச்புர் கிராமத்தை சேர்ந்த ஒரு அப்பாவும் மகளும் கலந்துகொண்டனர். நிற்க இடம் இல்லாமல் அரங்கம் நிரம்பி வழிந்தது நிகழ்வின் சிறப்பு.

“டாக்டர். ஷூ மேக்கர்”

இந்திய தேசமே கிரிக்கெட்டின் பின்னால் அலைந்தாலும் வடசென்னை மக்கள், எப்போதும் கால் பந்து விளையாட்டின் மீது தான் ஆர்வமாக இருந்திருக்கிறார்கள் என்பது நீண்ட நெடிய வரலாறு. அப்படி சிறுவயதில் கால் பந்து விளையாட்டின் மீது தீராத ஆர்வம் கொண்டிருந்த, இம்மானுவேல், பிய்ந்து போன தன் ஷூவை தைப்பதற்காக, ஷூ தைத்துக்கொடுப்பவர் ஒருவரை நாடியபோது, அவர் வாரக்கணக்கில் இம்மானுவேலை அலையவிட்டிருக்கிறார். கோபத்தில் தன் ஷூவை தானே, தைக்க முயன்றார் இம்மானுவேல். அதன்பின் முறையாக ஷூ தைப்பவர் ஒருவர் உதவியோடு மிக நேர்த்தியாக ஷூ தைப்பதைக்கற்றுக்கொண்டார். வியாசர்பாடியில் ரயில் நிலையத்திற்கு அருகில் இருக்கிறது, டாக்டர். இம்மானுவேலின் அந்த ஷூ தைக்கிற குட்டி ராஜாங்கம். கால் பந்து மீது தீராத ஆர்வம் கொண்ட, ஆனால் பெரிய அளவில் பணம் செலவு செய்து ஷூ வாங்க முடியாத, சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் கனவுகளுக்காக, ஓயாது இயங்கிக்கொண்டிருக்கிறது, இம்மானுவேலின் கண்களும் விரல்களும். தமிழர்கள் யாரும் ஷூ தைப்பதில்லை, தெலுங்கர்களே தைத்தார்கள் என்கிற ஆய்வு செய்ய வரலாற்றிற்கும் புள்ளி வைக்கிறது, இம்மானுவேலின் வாழ்க்கை. இவ்வளவு காசு வேண்டும் என்று எப்போதும், தன்னிடம் வரும் ஏழை சிறுவர்களை நிர்ப்பந்திப்பதில்லை இம்மானுவேல். மிகச்சிறிய தொகைக்கு, அல்லது அவர்களால் தர முடிந்த்தை வாங்கிக்கொண்டு… பல ஆண்டுகளாக இந்த சேவையை செய்து வரும் இம்மானுவேல் மிகப்பெரிய ஆளுமையாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கிறார். அந்தச்சிறிய அறை முழுக்க ஷூக்களால் நிரம்பியிருக்கிறது. இம்மானுவேலின் இதயம் முழுவதும் அன்பாலும் தன்னம்பிக்கையாலும் நிறைந்திருக்கிறது. திரும்ப வாங்கப்படாத நூற்றுக்கணக்கான ஷூக்களை தூக்கி எறிந்து விடாமல் பாதுகாக்கிற இம்மானுவேலிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் வேலை செய்வதில்லை, இம்மானுவேல். காலை சர்ச்சுக்கு சென்றுவிட்டு வந்தபின் தன் குடும்பத்தினரோடு பேரப்பிள்ளைகளோடு நேரம் செலவிடுகிறார். பின் இன்றும் கால்பந்து மைதானங்களில் சிறுவர்களோடு விளையாடுகிறார்.

டாக்டர் இம்மானுவேல் என்று இவரை அழைக்கத்தொடங்கியது, இவரிடம் ஷூ தைத்துச்சென்ற சிறுவர்கள் தான். எப்பேர்ப்பட்ட ஷூ வை கொண்டு சென்றாலும், அது எவ்வளவு கிழிந்திருந்தாலும் அதை அறுவை சிகிச்சை செய்து மிக அழகாக, தரமாக தைத்துக்கொடுக்கிற வல்லமை படைத்தவர் இம்மானுவேல். அதனால் தான் அவரை டாக்டர் இம்மானுவேல் என்று அழைக்க ஆரம்பித்தோம் என்கிறார்கள். இப்படி பல ஆச்சர்யங்கள் நிறைந்த டாக்டர். ஷூமேக்கர் ஆகிய டாக்டர். இம்மானுவேல் ஆவணப்படம் ஆச்சர்யம் மட்டுமல்ல இதயத்தின் அடி ஆழம் வரை நெகிழவைத்த நெகிழ்ச்சி.

கால் பந்து “விளையாட்டில் “ஷூ” எவ்வளவு முக்கிய அங்கம் வகிக்கிறது என்பதை இந்தப்படம் தெளிவாக குறிப்பிட்டதோடு, பெயருக்கு முன்னே டாக்டர் என்று போட்டுக்கொண்டால் இம்மானுவேல் போல வாழத்தெரிய வேண்டும் என்பதையும் கோடிட்டுக்காட்டுகிறது. இந்த படத்தை இயக்கி இருக்கிறார்கள், டி.ஜே.பாண்டியராஜ் மற்றும் வினோத்.

“ஜாதிகளிடம் ஜாக்கிரதை” – “BEWARE OF CASTES- MIRCHPUR”

முதல் படம் நெகிழ வைத்தது என்றால், இரண்டாவது படம் நெளிய வைத்தது என்று தான் சொல்லவேண்டும். ஆம், இப்படி என் தேசத்தில் தினந்தோறும் நடப்பதை பார்த்துக்கொண்டு, கேட்டுக்கொண்டு மட்டுமே நான் இருக்கிறேன், என்ற குற்ற உணர்ச்சி, இதயத்தின் உள்ளே ஆயிரமாயிரம் புழுக்களாய் நெளிவதை சகித்துக்கொண்டு தான் மிர்ச்புர் ஆவணப்படத்தை பார்க்க முடிந்த்து.

தலைநகர் டெல்லி அருகே உள்ள ஹரியானா மாநிலத்தின் ஹிஸார் மாவட்டத்தில் உள்ள மிர்ச்புர் என்கிற தலித்துகளின் கிராமத்தின் தெருவில், ஆதிக்க சாதி என்று குறிப்பிடப்படும் ஜாட் இனத்தைச்சேர்ந்த இருவர் நடந்து சென்றபோது, அங்கே இருந்த ஒரு நாய் அவர்களைப் பார்த்து குரைத்த்து என்பதற்காக, அந்த கிராமத்தை தீக்கிரையாக்கி, அவர்களது உடைமைகளை சூறையாடி, வீடுகளை அடித்து நொறுக்கி, அவர்களை அந்த ஊரை விட்டே துரத்தி அடித்திருக்கின்றனர் ஜாட்கள். அந்த வன்முறையில் மாற்றுத்திறனாளியான ஒரு பெண்ணும் அவரது அப்பாவும் ஜாட்டுகள் கொளுத்திய தீயில் பலியானார்கள். இப்படி ஒரு சம்பவம் நடந்த்து, 2010 ஆம் ஆண்டு. ஆனால், இன்று வரை அந்த கிராம மக்கள், தங்கள் கிராமத்திற்குள் போக முடியவில்லை. அங்கிருந்து வெளியேறி, வெளியேற்றப்பட்டு தன்வீர் என்கிற ஒருவரின் பண்ணை வீட்டில் 6 வருடங்களாக, தற்காலிகமாக குடிசைகள் அமைத்து தங்கி இருக்கின்றனர். அவர்களை ஜாட்டுகள் மீண்டும் தாக்க்க்கூடாது என்பதற்காக CRPF காவல்படையை சேர்ந்த 70 துப்பாக்கி ஏந்திய காவலர்கள் 2 வருடங்களாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று அந்த ஆவணப்படம் குறிப்பிடுகிறது. உச்ச நீதிமன்றம் வரை சென்ற பின்னும் மிர்ச்புர் மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை. அவர்களுக்காக வாதாடுகிற வழக்கறிஞர்களை வன்மையான தாக்கும் சம்பவங்களும் நடந்தேறியுள்ளது. உச்ச நீதிமன்றம் வழக்கை ஹரியானா உயர்நீதி மன்றத்திற்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளது.

இந்த ஆவணப்படத்தை ஜெயக்குமார் என்பவர் இயக்கி இருக்கிறார்.

நாங்களும் இந்தியர்கள் தானே, நாங்களும் இந்துக்கள் தானே என்று பரிதாபமாக்கேட்டு அதை உறுதி செய்யமுடியாத வலியை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள் மிர்ச்புர் மக்கள், தேவைப்படும் போதெல்லாம், தலித்துகளைப்பற்றி மேடைகளில் செண்டிமென்ட் பிழிகிற காங்கிரஸின் ராகுல்காந்தியும், பி.ஜே.பி.யின் நரேந்திரமோடியும் இந்த மிர்ச்புர் தலித் மக்களுக்காக என்ன செய்திருக்கின்றனர் என்பதையும் என்ன செய்யப்போகிறார்கள் என்பதையும் அவர்கள் தான் சொல்ல வேண்டும்.

காவல்துறையிலும் நீதித்துறையிலும் கூட ஜாதி மிகப்பெரிய அங்கமாக இருக்கிறது என்று குறிப்பிட்டார், என்கிறார் ஆதவன் தீட்சண்யா. சாலியமங்கம் தலித் சகோதரி, கலைச்செல்விக்கு என்ன நீதி கிடைத்துவிட்டது இங்கே? ஊரில் ஆடு, மாடுகள் முதல் மனிதர்கள் வரை இறந்து போனால் நாங்கள் தான் தூக்கி போடுவோம். ஆனால் என் மகளின் இழவுக்கு துக்கம் விசாரிக்க்க்கூட ஒருவரும் வரவில்லை என்று கலைச்செல்வியின் அப்பா கண்ணீர் வடிய குறிப்பிட்டதை நினைவூட்டுகிறேன் என்றார். தமிழகத்தில் தலித்துகளுக்காக 12 இலட்சம் ஏக்கர் பஞ்சமி நிலம் ஒதுக்கப்பட்டது. ஆனால் அது இன்று யார் கையில் இருக்கிறது என்பதை யார் கேட்பது? யார் சொல்வது என்றும் குறிப்பிட்டார், ஆதவன் தீட்சண்யா.

இயக்குநர் ராம் பேசுகையில், இதில் மிர்ச்புர் என்பதை எடுத்துவிட்டு, நத்தம் என்றோ, தர்மபுரி என்றோ அல்லது மாரி செல்வராஜின் புளியங்குளம் என்றோ நீங்கள் போட்டுக்கொள்ளலாம். ஹரியானாவில் நடந்த்தை சென்னையில் பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால் தமிழ்நாட்டில் அதற்கு சற்றும் குறைவில்லாத சம்பவங்கள் தினசரி நடந்துகொண்டே தான் இருக்கிறது என்று குறிப்பிட்டார். இனிமேல் உண்மையை உரக்கப்பேசுவோம் என்றார்.

இயக்குநர், பாண்டிராஜ் பேசுகையில், இரஞ்சித் எதைப்பற்றி பேசினாலும் அதற்குள் ஒரு அரசியல் இருக்கும். அதனால் எப்போதும் அவர் பேசும்போது நான் கவனமாகவே இருப்பேன். இந்த ஆவணப்பட முயற்சி மிகவும் சிறப்பான ஒன்று, இரஞ்சித்தும் நீலம் அமைப்பும் இதைத் தொடர்ந்து செய்ய வேண்டும். மெரினா படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் மீனவர்களைப்பற்றிய ஒரு ஆவணப்படம் எடுக்க வேண்டும் என்று தோன்றியது. அதற்காக மெரினா படப்பிடிப்பின் போதும், கதகளி படப்பிடிப்பின்போதும் கொஞ்சம் காட்சிகள் எடுத்து வைத்திருக்கிறேன். விரைவில் உங்களோடு நானும் வந்து இணைந்து கொள்கிறேன் என்றார்.

நடிகர் ஜான் விஜய், “இனி சிவப்பு மட்டுமல்ல, நீலமும் புரட்சி தான்” என்ற ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன் என்று சொல்லி, அதை மட்டுமே சொல்லி விடைபெற்றார்.

இறுதியாக பேசிய, இயக்குநர் பா.இரஞ்சித், ரொம்ப சந்தோசம், மகிழ்ச்சி. நீங்க இவ்வளவு பேர் கலந்துப்பீங்கன்னு எதிர்பார்க்கல. வந்திருந்த அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்தைப்போர்க்கும் போது, “பாவம்”னு உங்களுக்கு தோணிச்சுன்னா, அது இந்த ஆவணப்படத்தோட தோல்வி. அதுக்குப்பதிலா உங்களுக்கு கோபம் வரணும். ஏன் இந்தியாவில் இந்த நிலை, அப்டின்னு உங்களுக்கு கோபம் வந்தா, அது தான் இந்த ஆவணப்படத்தின் வெற்றி என்று குறிப்பிட்டார்.

Leave a Reply