Wednesday, May 6
Shadow

சாந்தனு போல ஆர்வமுடன் நடிப்பவர்களை பார்ப்பது அரிது – நாயகன் ஷேன் நிகம்

‘பல்டி’ பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

மலையாளத்திலும் தமிழிலும் ஒரே நேரத்தில் வெளியாகவிருக்கும் “பல்டி” திரைப்படம் செப்டம்பர் 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் 19 செப்டம்பர் 2025 அன்று நடைபெற்றது. தயாரிப்பாளர்கள், இயக்குனர், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டு படத்துடன் சம்பந்தப்பட்ட தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.

சாந்தோஷ் T. குருவில்லா மற்றும் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தை, உன்னி சிவலிங்கம் தனது முதல் படமாக இயக்கியுள்ளார். ஷேன் நிகம் கதாநாயகனாகவும், சாந்தனு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ப்ரீதி நாயகியாக அறிமுகமாகிறார். மேலும், இப்படத்தின் மூலம் சாய் அபயங்கர் இசையமைப்பாளராக களமிறங்குகிறார்.

 

தயாரிப்பாளர் சாந்தோஷ் T. குருவில்லா:

“பல்டி’ படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களும் இளம் திறமையாளர்கள். ஷேன் நிகம், சாந்தனு, சாய் அபயங்கர், உன்னி ஆகியோர் மிகுந்த ஆற்றலுடன் உழைத்துள்ளனர். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் என நம்புகிறேன்,” என்றார்.

தயாரிப்பாளர் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர்:

“‘பல்டி’ எனது கனவு நனவாகியிருக்கிறது. சாய் அபயங்கர் செய்த இசையை விட வேறு யாராலும் இப்படத்திற்கு சிறப்பாக செய்ய முடியாது. ஷேன் நிகம் செய்திருக்கும் உதயன் கதாபாத்திரம், சாந்தனுவின் செல்வராகவன் கதாபாத்திரம் – இரண்டும் சிறப்பாக அமையும். நான் செல்வராகவன் சார் ரசிகன்; அவர் இந்த உலகிலேயே சிறந்த மனிதர் என நினைக்கிறேன். இப்படம் அனைவருக்கும் பிடிக்கும் என்பதில் நம்பிக்கை இருக்கிறது,” என்று உற்சாகமாகக் கூறினார்.

இசையமைப்பாளர் சாய் அபயங்கர்:

“முதல் முறையாக பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொள்கிறேன். படம் பார்த்தேன் – மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. இப்படத்திற்காக இசையமைத்ததில் பெருமை கொள்கிறேன். அனைவரின் உழைப்பும் திரையில் தெரிகிறது. இன்னும் நிறைய நல்ல வாய்ப்புகள் வரும் என்று நம்புகிறேன்,” என்றார்.

இயக்குனர் உன்னி சிவலிங்கம்:

“இது என்னுடைய முதல் படம், முதல் பத்திரிகையாளர் சந்திப்பு. 60% மலையாளம், 40% தமிழ் கலந்து உருவாக்கிய படம் இது. கபடியை மையமாகக் கொண்டு அதிரடி திரைப்படம் எடுக்க வேண்டும் என்பதே எண்ணம். கச்சிசேரா ஆல்பத்தைப் பார்த்த பிறகு சாய்யை இசையமைப்பாளராக தேர்ந்தெடுத்தேன்.

ஷேன், சாந்தனு, ப்ரீதி – அனைவரும் அர்ப்பணிப்புடன் நடித்திருக்கிறார்கள். படப்பிடிப்பில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், சாந்தனுவுடன் 25 நாட்கள் வேலை செய்த அனுபவம் மிகுந்த மகிழ்ச்சி. ப்ரீதியிடம் ‘அயோத்தி’ போல அழும் காட்சிகளே வேண்டாம், வசனங்களுடன் கூடிய கதாபாத்திரம் வேண்டும் எனக் கூறினேன்; அவர் அதனை சிறப்பாக செய்தார்.

பல்டியில் பல புதிய ஆக்ஷன் ட்ரிக்குகள், குறிப்பாக கபடியில் பயன்படுத்தப்படும் சண்டைக் காட்சிகள் இருக்கின்றன. அல்போன்ஸ் அண்ணா, பல தமிழ் கலைஞர்கள் நடித்துள்ளனர். மலையாளத்திலும், தமிழிலும் சரியான டப்பிங் செய்ய கவனம் செலுத்தியுள்ளோம்,” என இயக்குனர் பகிர்ந்தார்.

நடிகை ப்ரீதி:

“எனது முதல் படம் அயோத்தி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. இப்போது மலையாளத்தில் எனது முதல் படம் ‘பல்டி’. ஆனாலும் தமிழ் சினிமாவும் சென்னையும் எனக்கு தாயகம் போலத்தான். உன்னி சேட்டா இயக்குனராக மட்டுமல்லாமல் அண்ணனாகவும் இருந்தார்.

முன்னைய படங்களை விட ‘பல்டி’ மிகவும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். செல்வராகவன் சார், பூர்ணிமா மேடம் எனக்கு உறுதுணையாக இருந்தார்கள். ஜாலக்காரி பாடலால் மக்கள் என்னை அப்படித்தான் அழைக்கிறார்கள். இந்த படம் எனது வாழ்க்கையில் என்றும் சிறப்பாக நினைவில் நிற்கும்,” என்றார்.

நடிகர் சாந்தனு:

“ப்ளூ ஸ்டார் படத்திற்குப் பிறகு தான் மீண்டும் பத்திரிகையாளர்களை சந்திக்கிறேன். மலையாள சினிமாவில் 15 வருடங்களுக்குப் பிறகு ‘பல்டி’ மூலம் மீண்டும் இணைந்திருக்கிறேன். மலையாள வசனங்களை பேசுவதற்காக ஒரு மாதம் ஆன்லைன் டியூட்டர் மூலம் பயிற்சி எடுத்தேன்.

படத்தில் கபடி குழுவில் ஒருவர் காணாமல் போனால் என்ன நடக்கும் என்பதே முக்கியக் கதை. மூன்று மாதங்கள் கபடி பயிற்சி எடுத்தோம். ஷேன் நிகத்திடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். சாய்யின் இசை சிறப்பாக வந்துள்ளது.

மலையாளத்தில் நான் தானே டப்பிங் செய்தேன். தமிழ் டப்பிங்கிலும் உதடு அசைவுகளுக்கு ஏற்ப மிகுந்த அக்கறையுடன் வேலை செய்தோம். இப்படம் அனைவரையும் கவரும்,” என்று சாந்தனு உற்சாகமாகக் கூறினார்.

நடிகர் ஷேன் நிகம்:

“பல்டி’ ஒரு ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் டிராமா. நான்கு நண்பர்கள், அவர்களுடைய கபடி குழுவை மையமாகக் கொண்ட கதை. வில்லன் வரும் போது அவர்களின் வாழ்க்கையில் என்ன நிகழ்கிறது என்பதே கதை.

சாந்தனு போல ஆர்வமுடன் நடிப்பவர்களை பார்ப்பது அரிது. சாய் நன்றாக இசையமைத்திருக்கிறார். பினு சேட்டாவுக்கும் சாந்தோஷ் சேட்டாவுக்கும் நன்றி. செல்வராகவன் சார் எனக்கு மிகப் பெரிய இன்ஸ்பிரேஷன் – புதுப்பேட்டை படத்தை பலமுறை பார்த்திருக்கிறேன்,” என்று பகிர்ந்தார்.

 

பல்டி – ஒரு கபடி விளையாட்டு அடிப்படையிலான அதிரடி கதை

“பல்டி” படம் கபடியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருப்பது ரசிகர்களிடையே தனித்துவமான எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. மலையாளம் மற்றும் தமிழில் ஒரே நேரத்தில் வெளியாகும் இந்த படம், புதிய முகங்களின் ஆற்றலையும், சண்டைக் காட்சிகளின் புதிய பரிமாணத்தையும் திரையில் வெளிப்படுத்துகிறது.

இப்படம் வரும் செப்டம்பர் 26ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.