
இரவின் விழிகள் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா
மகேந்திரா ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில், சிக்கல் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இரவின் விழிகள் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் இயக்குநர்கள் ஆர்.வி. உதயகுமார், பேரரசு, மு.களஞ்சியம், நடிகர் போஸ் வெங்கட், நடிகை கோமல் சர்மா, பாடகர் விஷ்ணு சரண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
படத்தின் கதாநாயகனாக தயாரிப்பாளர் மகேந்திரன், இயக்குநர் ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில், தேசிய விருது பெற்ற நீமா ரே நாயகியாக நடித்துள்ளனர். மேலும் சேரன் ராஜ், சிசர் மனோகர், நிழல்கள் ரவி, கும்தாஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பு ஏ.எம். அசார்.
விழாவில் பேசிய இயக்குநர் சிக்கல் ராஜேஷ், “பெண்களைச் சுற்றியுள்ள அநீதிகளை வெளிப்படுத்துவதே இந்த படத்தின் நோக்கம். பல சிரமங்கள் இருந்தும் தயாரிப்பாளர் மகேந்திரன் ஆதரவால் படம் முடிந்தது” என்றார்.
நடிகை நீமா ரே இயக்குநரை “மிஸ்டர் பர்ஃபெக்க்ஷனிஸ்ட்” என்று புகழ்ந்தார்.
இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் “தமிழ் படைப்பாளர்களிடம் கிரியேட்டிவிட்டி குறைந்து வருகிறது. சிறிய படங்களுக்கு ஆதரவு தேவை” எனக் கூறினார்.
நடிகர் போஸ் வெங்கட் “சின்ன படங்களுக்கு தியேட்டர் கிடைக்காததற்கு ரெட் ஜெயண்ட் மட்டுமே காரணம் அல்ல. தயாரிப்பாளர்களே தங்கள் படங்களை சொந்தமாக வெளியிட கற்றுக்கொள்ள வேண்டும்” என்றார்.
இயக்குநர் பேரரசு “சின்ன படங்களை வாழவைக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போல சுயநலமில்லாத மனம் தேவை” என வலியுறுத்தினார்.
இசையமைப்பாளர் ஏ.எம். அசார், பாடலாசிரியர் அரவிந்த் அக்ரம், நடன இயக்குநர் எல்.கே அந்தோணி, நடிகர் சிசர் மனோகர், நடிகை கோமல் சர்மா உள்ளிட்ட பலரும் பட அனுபவங்களை பகிர்ந்தனர்.