Wednesday, December 24
Shadow

கென் கருணாஸ் இயக்கி, கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு

பார்வதா எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், நடிகர் கென் கருணாஸ் முதல் முறையாக இயக்குநராக களமிறங்கியுள்ள ‘புரொடக்ஷன் நம்பர் ஒன்’ படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்துள்ளது.

தேசிய விருது பெற்ற ‘அசுரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை உறுதியாக பிடித்த கென் கருணாஸ், இந்தப் படத்தில் இயக்குநராக மட்டுமல்லாமல் கதையின் நாயகனாகவும் நடித்திருக்கிறார். பெயர் இன்னும் அறிவிக்கப்படாத இந்தப் படம், பள்ளி மாணவ–மாணவிகளின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ளது.

இந்தப் படத்தில் கென் கருணாஸுடன் சேர்ந்து, சுராஜ் வெஞ்சாரமூடு, தேவதர்ஷினி, அனீஷ்மா அனில் குமார், மீனாட்சி தினேஷ், பிரியான்ஷி யாதவ், நளினி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும் சின்ன தமிழா, தாஜ்மோலா, கெட்டவன் மணிகண்டன், கேரன் வின்சென்ட் போன்ற டிஜிட்டல் திரை பிரபலங்களும் முக்கிய வேடங்களில் தோன்றுகிறார்கள்.


விக்கி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்திற்கு, ‘இசை அசுரன்’ ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். கருப்பையா சி. ராம் மற்றும் சுலோச்சனா குமார் இணைந்து, பார்வதா எண்டர்டெயின்மெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் தயாரித்துள்ளனர்.
செப்டம்பர் மாத இறுதியில் பூஜையுடன் தொடங்கிய இந்தப் படப்பிடிப்பு, சென்னையில் ஒரே கட்டமாக 60 நாட்கள் இடைவிடாமல் நடைபெற்றுள்ளது. பள்ளி மாணவர்களின் வாழ்க்கையை உண்மைத்தன்மையுடன் காட்ட வேண்டும் என்பதற்காக, சென்னை மையப் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி வளாகத்தில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. தினமும் குறைந்தது 100 துணை நடிகர்கள் கலந்து கொண்டனர். சில முக்கிய காட்சிகளில் 300 முதல் 450 பேர் வரை பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
படத்தின் முக்கிய பகுதிக்காக கேரளாவின் ஆலப்புழாவிற்கும் ஒரு வாரம் படக்குழு பயணம் செய்துள்ளது.

ஜி.வி. பிரகாஷ் இசையில் உருவான ஒரு பாடல் காட்சியை, நடன இயக்குநர் ஷோபி மாஸ்டர் பிரம்மாண்டமாக வடிவமைத்ததுடன், அந்த பாடல் காட்சியோடு படப்பிடிப்பு இனிதே நிறைவு பெற்றுள்ளது.

இந்தப் படத்தின் மூலம் மூத்த நடிகை நளினி மீண்டும் திரையுலகில் நடிக்க வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் படத்தின் டைட்டில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையிலேயே, வியாபார ஒப்பந்தங்கள் முடிவடைந்து வருவது படத்துக்கு கிடைத்துள்ள எதிர்பார்ப்பை வெளிப்படுத்துகிறது. அறிமுக கதாநாயகன், அறிமுக இயக்குநர், அறிமுக தயாரிப்பு நிறுவனம் என்ற கூட்டணிக்கு இது அரிதான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

இந்தப் படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக, கிறிஸ்துமஸ் நாளில் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.