ஆர். எம். வி. – மூன்று எழுத்துகள்… ஒரு முழு காலம்
தமிழக அரசியல் வரலாற்றில் சில பெயர்கள் காலத்தைத் தாண்டி நிற்கும். அதில் ஆர். எம். வி. என்ற மூன்று எழுத்துகள் ஒரு தனி அடையாளம். அரசியல் மட்டுமல்ல… சினிமா, பொது வாழ்க்கை, இலக்கியம், ஆன்மிகம் என்று வாழ்க்கையை பல பரிமாணங்களில் அர்த்தமாய் வாழ்ந்த மனிதர் அவர்.
அவர் தொட்ட காரியங்கள் அனைத்தும் பாராட்டப்படக் கூடியதாக மட்டுமல்ல, மக்களுக்கு பயன் தரக்கூடியதாகவும் இருந்தது. எம்.ஜி.ஆர் என்ற மாபெரும் ஆளுமை தமிழகத்தில் உயர்ந்து நின்றதற்குப் பின்னால், முக்கியமான மூளைகளில் ஒன்று இந்த ஆர். எம். வீரப்பன்.
இன்றும் தமிழகத்தின் பல முக்கிய கோவில்கள் சீராக செயல்படுகின்றன என்றால், அதற்கான அடித்தளம் இவர் போட்டது. சிதிலமடைந்த கோவில்களை உயிர்ப்பித்தவர். அறநிலைத்துறை என்ற சொல்லுக்கு உண்மையான அர்த்தம் கொடுத்தவர். அதேபோல், இலக்கிய உலகில் கம்பன் கழகம் இன்று வரை தொடர்ந்து இயங்குகிறது என்றால், அதுவும் இவரின் தொலைநோக்கின் விளைவே. அரை நூற்றாண்டுக்கு மேலாக இயங்கும் அந்த அமைப்பு, அவர் விட்டுச் சென்ற பாரம்பரியத்தின் சான்று.
1996-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் மறைந்ததும், “அடுத்த முதலமைச்சர் ஆர். எம். வி.” என்ற எண்ணம் மக்கள் மனதில் இயல்பாக உருவானது. கட்சியிலும் அந்த நம்பிக்கை உறுதியாக இருந்தது. ஆனால் அந்த தருணத்தில் ஜானகி எம்.ஜி.ஆர் “அடுத்த முதல்வர் நான்தான்” என்று கூறியபோது, தன்னுடைய உரிமையை விடுத்துக் கொடுத்தவர் ஆர். எம். வீரப்பன். அரசியலில் அரிதாகக் காணக் கூடிய அந்த தியாக மனப்பான்மை, இன்றும் பேசப்படும் ஒன்று.

இன்றைய அ.தி.மு.க. இப்படி ஒரு வலுவான அரசியல் அமைப்பாக நிலைத்து நிற்கிறது என்றால், அதற்குப் பின்னால் இவர் போன்ற மனிதர்களின் பங்களிப்பு மறைக்க முடியாதது.
இந்தப் பெரும் ஆளுமையை நினைவுகூரும் வகையில், அவரது மகன் தங்கராஜ் வீரப்பன் தயாரித்துள்ள ஆவணப்படம் தான் ‘ஆர். எம். வி. – கிங் மேக்கர்’. இயக்குநர் பினு சுப்ரமணியம் இயக்கியுள்ள இந்த ஆவணப்படம், இரண்டு மணி நேரம் முழுக்க ஒரு மனிதரின் வாழ்க்கையை அல்ல… ஒரு காலகட்டத்தை நம் கண்முன் கொண்டு வருகிறது.
இந்த ஆவணப்படத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த், வைரமுத்து, சைதை துரைசாமி, செ.கு. தமிழரசன், தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட 36 முக்கிய ஆளுமைகள், ஆர். எம். வீரப்பனுடன் தங்களுக்கு இருந்த அனுபவங்களையும், அவரின் பண்புகளையும் மனமார பகிர்ந்து கொள்கிறார்கள்.
அதில் குறிப்பாக, ரஜினிகாந்த் பேசிய பகுதி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
‘பாட்ஷா’ படத்தின் தயாரிப்பாளர் ஆர். எம். வீரப்பன். அப்போது அவர் அதிமுக அமைச்சராகவும் இருந்தார். ‘பாட்ஷா’ வெற்றி விழா மேடையில், ஆர். எம். வீரப்பன் அருகில் இருக்க, “தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் இருக்கிறது” என்று ரஜினிகாந்த் பேசியது, அடுத்த நாளே பெரிய அரசியல் விளைவுகளை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக, ஆர். எம். வீரப்பன் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து ரஜினிகாந்த், ஆவணப்படத்தில் மிக நேர்மையாக பேசுகிறார்.

“அரசியல் புரிதல் இல்லாமல் நான் அப்படி பேசியிருக்கக் கூடாது” என்று அவர் ஒப்புக்கொள்கிறார்.
அந்த சம்பவத்திற்கு பிறகு, தொலைபேசியில் ஆர். எம். வீரப்பனிடம் பேசிய ரஜினிகாந்த், “முதல்வர் ஜெயலலிதாவிடம் பேசலாமா?” என்று கேட்டபோது,
“வேண்டாம்… அவர் வேறு மாதிரி புரிந்து கொள்வார்” என்று அமைதியாக மறுத்ததாகவும்,
“அந்த சம்பவமே நடக்காதது போல அவர் பேசினார்” என்றும் ரஜினிகாந்த் பகிர்ந்து கொள்கிறார்.
“அது எனக்கு பல நாட்கள் மனதை நெருடிய சம்பவம்” என்ற அவரது வார்த்தைகள், ஆர். எம். வீரப்பனின் பெருந்தன்மையையும் அரசியல் முதிர்ச்சியையும் அழகாக வெளிப்படுத்துகிறது.
‘ஆர். எம். வி – கிங் மேக்கர்’ என்பது ஒரு ஆவணப்படம் மட்டுமல்ல…
அதிகாரம் இல்லாமலேயே அரசியலை இயக்கிய ஒரு மனிதரின் வரலாறு.
அரசியல் இன்று இப்படியாக மாறிவிட்டது என்று பலர் புலம்பும் காலத்தில்,
“இப்படியும் மனிதர்கள் இருந்தார்கள்” என்று நினைவூட்டும் ஒரு முயற்சி
