
‘ப்ராமிஸ்’ திரைப்பட ட்ரெய்லர் & பாடல்கள் வெளியீட்டு விழா – சின்ன படங்களின் சவால்கள், ரீ-ரிலீஸ் கலாசாரம், ‘ஜனநாயகன்’ விவகாரம் குறித்து கருத்தரங்கம் போல் மாறிய மேடை
சங்கமித்ரன் ப்ரொடக்ஷன் – அம்மன் ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள ‘ப்ராமிஸ்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் இன்று நடைபெற்றது. அருண்குமார் சேகரன் இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் நதியா கதாநாயகியாக நடித்துள்ளார். தயாரிப்பாளர் N. நாகராஜ்.
இந்த விழாவில் இயக்குநர் பேரரசு, தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் சங்கத் தலைவர் கே. ராஜன்,த யாரிப்பாளர் சங்க (கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம், நடிகர் காதல் சுகுமார் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். படக்குழுவினர் அனைவரும் பாரம்பரிய உடையான வேட்டி – சட்டையில் பங்கேற்றது விழாவுக்கு தனிச்சிறப்பை வழங்கியது.
தயாரிப்பாளர் N. நாகராஜ் பேசுகையில், “ஒரு நம்பிக்கையோடு தொடங்கிய இந்தப் பயணம் இன்று வெளியீட்டு நிலைக்கு வந்துள்ளது. இயக்குநர் அருண்குமார் சேகரன் கடின உழைப்பும் நேர்மையும் கொண்டவர். ‘ப்ராமிஸ்’ மக்கள் மனதில் இடம் பெறும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.
பாடலாசிரியர் பாலா, “பாடல்கள் ஸ்பீட் பிரேக்கர் அல்ல, படங்களுக்கு மைலேஜ். நல்ல வாய்ப்பு கிடைத்தால் இன்னும் அர்த்தமுள்ள பாடல்கள் தமிழ்சினிமாவில் உருவாகும்” என்று கூறினார்.

இயக்குநர் அருண்குமார் சேகரன், “எங்களுக்கு பெரிய பின்னணி இல்லை. சின்ன குழுவாக இணைந்து இந்தப் படத்தை உருவாக்கியுள்ளோம். கடின காலத்தில் கதாநாயகி நதியா அளித்த ஆதரவை மறக்க முடியாது. இந்தப் படம் நிச்சயம் ஒரு நம்பிக்கையை தரும்” என்றார்.
இயக்குநர் பேரரசு தனது உரையில், சின்ன படங்களின் நிலை, ரீ-ரிலீஸ் கலாசாரம், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் சென்சார் பிரச்சினை ஆகியவற்றை தீவிரமாக எடுத்துரைத்தார்.
“ரீ-ரிலீஸ் படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு, புதிய நேரடிப் படங்களுக்கு கிடைக்கவில்லை. இதனால் சின்ன படங்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. இதற்கு கட்டுப்பாடுகள் தேவை. ‘ஜனநாயகன்’ போன்ற படங்கள் மாதக்கணக்கில் தணிக்கையில் சிக்கி நிற்பது சரியல்ல. தயாரிப்பாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. உண்மை வெளியில் வர வேண்டும், படம் விரைவில் வெளியிடப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

தயாரிப்பாளர் கே. ராஜன் பேசும்போது,
“சினிமாவில் அரசியல் பழிவாங்குதல் கூடாது. ‘ஜனநாயகன்’ படம் சென்சார் சிக்கலில் இழுத்தடிக்கப்படுவது நியாயமல்ல. தயாரிப்பாளர் பாதுகாக்கப்பட வேண்டும். அரசியல் காரணங்களுக்காக ஒரு படத்தை முடக்குவது தவறு” எனக் கூறினார்.
விழாவில் வெளியிடப்பட்ட ‘ப்ராமிஸ்’ படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. சத்தியம், நம்பிக்கை, மனித உறவுகள் ஆகியவற்றை மையமாகக் கொண்ட இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
