
இவர் கதாநாயகன், வில்லன், குணச்சித்திர நடிகராக தமிழ் திரையுலகில் கால் நூற்றாண்டுக்கு மேலாக நடித்து வந்தவர். படித்தால் மட்டும் போதுமா, பலே பாண்டியா உட்பட ஏராளமான தமிழ்ப் படங்களில் நடித்தவர். பல திரைப்படங்களை தயாரித்தும் இருக்கிறார்.

பாலாஜியின் பூர்வீகம் கேரளா. தொடக்க காலத்தில் அவர் சென்னை கிண்டியில் இருந்த நரசுஸ் ஸ்டூடியோவில், தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றினார். 1953 ஆம் ஆண்டில் வெளிவந்த ஔவையார் என்ற படத்தில் முதன் முதலாக நடித்தார். அதைத்தொடர்ந்து, சகோதரி, பலே பாண்டியா, படித்தால் மட்டும் போதுமா ஆகிய படங்களில் துணை நடிகராக நடித்துப் பிரபலமானார். மனமுள்ள மறுதாரம் (1958) படத்தில் கதாநாயகனாக நடித்தார்.
பாலாஜி தனது சுஜாதா சினி ஆர்ட்ஸ் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் மூலம் திரைப்படங்களைத் தயாரித்தார். ஜெமினி கணேசன் கதைத் தலைவனாக நடித்த அண்ணாவின் ஆசை என்ற படத்தை முதன் முதலாக சொந்தமாக தயாரித்தார். அதன்பிறகு சிவாஜி கணேசனை வைத்து, ராஜா, நீதி உள்பட 17 திரைப்படங்களை தயாரித்தார். சிவாஜியை வைத்து தொடர்ந்து அதிக படங்கள் தயாரித்த பட அதிபர் இவர்தான். இந்தி, தெலுங்கு, மலையாள படங்களை இவர் மறு தயாரிப்பு செய்து பல வெற்றிப் படங்களைக் கண்டவர். கமல், ரஜினிகாந்த் ஆகியோரை நடிக்க வைத்தும் வெற்றிப் படங்களை அளித்துள்ளார் பாலாஜி. மிகச் சிறந்த வகையில் குறித்த காலத்தில் படத்தை எடுத்து வெளியிடும் திறன் கொண்ட படத் தயாரிப்பாளராகவும் பாலாஜி திகழ்ந்தார்

கருப்பு வெள்ளை படங்கள் காலத்தில் இவரின் படங்கள் கலர்தான்.இவர் அந்த காலத்து ஐங்கரன் இன்டர் நேஷனல் அல்லது பிரமிட் சாய்மீரா.பணத்தை தண்ணீராக வாரியிரைப்பார். முக்கால்வாசி ஆகஷன் படங்கள்தான்.படத்தில் ரொம்ப richness இருக்கும்.வில்லன்கள் ஸ்டார் ஹோட்டலிதான் நடமாடுவார்கள்.நாயகி நாயகர்கள் உடை டிரெண்டியாக இருக்கும் கதைகள் எல்லாம் நகரம் சார்ந்ததாக இருக்கும். கவர்ச்சியான வில்லிகள் வருவார்கள் .இவர் படத்தில் வரும் கார்கள் தினுசு தினுசாக இருக்கும்.

இவரின் சுஜாதா சினி ஆர்ட்ஸ் ஜிகினா லோகோவுடன் அதிரடியாக பட டைட்டில் பட்டையை கிளப்பியபடி ஆரம்பிக்கும்.விசில் பறக்கும்.இப்போது வரும் படங்களில் கம்புயூட்டர் கிராபிக்ஸ் டைட்டிலின் “உஷ்….புஷ்…… கிஷ்கிஷ்” எப்படியோ அப்படி அந்த காலத்து சவுண்ட்.
இந்தியில் ஓடிய வெற்றி படங்களை தழுவி அப்படியே தமிழ் படுத்துவார்.ஈயடிச்சான் காப்பி என்றால் இவர் படங்களை சொல்லாம்.இந்தி பதிப்பில் ஒரு சீனில் “ஈ” இருந்தால் தமிழ் படத்திலும் அந்த சீனில் “ஈ” இருக்கும் என்று சொல்லுவார்கள். பக்கா கமர்ஷியல் சினிமா பிசினஸ்மேன்

பாலாஜியின் மனைவி பெயர் ஆனந்தவல்லி. இவர்களுக்கு சுரேஷ் பாலாஜி (கிரீடம் திரைப்படத்தைத் தயாரித்தவர்) என்ற மகனும், சுஜாதா, சுசித்ரா என்ற 2 மகள்களும் இருக்கிறார்கள். சுசித்ராவை பிரபல மலையாள நடிகர் மோகன்லால் மணந்து இருக்கிறார்.

2009, மே 2 மாலை 5 மணிக்கு உடல்நலக் குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் பாலாஜி இறந்தார். இறக்கும் போது அவருக்கு வயது 74.
