
விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி நடித்த சர்கார் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார். வருகிற 6-ம் தேதி படம் வெளிவருகிறது. இந்தப் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அதில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. அதன்பிறகு அந்த பர்ஸ்ட்லுக் போஸ்டர் நீக்கப்பட்டது.
தற்போது படம் வெளியாகும் நிலையில் தமிழ்நாடு முழுவதும் அவரது ரசிகர்களால் ஒட்டப்படும் போஸ்டர்கள், பேனர்களில் விஜய் புகைபிடிக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. இதனை விஜய் தடுத்து நிறுத்தாவிட்டால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புகையிலை கட்டுப்பாட்டுக்கான தமிழ்நாடு மக்கள் இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து இந்த இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழுகம் முழுவதும் சர்கார் பட போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அவற்றில் நடிகர் விஜய் புகைபிடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. ரசிகர்கள் மூலம் விஜய் புகையிலை கட்டுப்பாட்டு சட்ட விதிகளை மீறுகிறார். முதல் போஸ்டர் வெளியானபோதே அதை எதிர்த்து எங்கள் அமைப்பு சட்டத்தை மீறியவர்கள் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த நிலையில் விஜய்யின் ரசிகர்கள் அவர் புகைபிடிக்கும் போஸ்டரை பயன்படுத்தி வருகிறார்கள். இதனை நடிகர் விஜய் தடுக்க வேண்டும். இல்லாவிட்டால் விஜய் மற்றும் சர்கார் படத் தயாரிப்பாளர், இயக்குனர் ஆகியோர் மீது மீண்டும் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
