Tuesday, April 28
Shadow

ட்ரிப் – திரைவிமர்சனம் (திகில் பயணம்) Rank 3.5/5

சுற்றுலாவுக்காக காட்டுக்குள் சென்ற நண்பர்கள் சந்திக்கும் பிரச்சினையை திகிலுடன் சொல்லியிருக்கும் படம்தான் ட்ரிப். ஆனால் அந்த பிரச்சினை சாதாரணமானதாக இருந்தால் சமாளித்துவிடலாம் உயிர் போகும் பிரச்சினை என்றால்?.

நாயகன் பிரவீன் மற்றும் சுனைனா இருவரும் தனது நண்பர்களுடன் சேர்ந்து காட்டுக்குள் சுற்றுலா செல்கிறார்கள். சென்ற இடத்தில் பங்களாவிற்கு பெயிண்ட் அடிக்க வந்த யோகிபாபையும் கருணாகரனையும் கொலைகாரர்கள் என நினைத்து பயப்படுகிறார்கள் நண்பர்கள் குழு. ஒருகட்டத்தில் காட்டில் மயங்கிவிழுந்த சுனைனாவை யோகிபாபு கருணாகரன் இருவரும் கடத்தி விட்டதாக நண்பர்கள் நினைத்து அவரை காப்பாற்ற சென்ற இடத்தில் இவர்களது நண்பர் ஒருவர் கொடூரமாக கொல்லப்படுகிறார். கொலை செய்தது மனித மாமிசம் சாப்பிடும் சிலர் என தெரிய வருகிறது. மனித மாமிசம் சாப்பிடுபவர்கள் யார் அவர்களிடமிருந்து அனைவரும் தப்பித்தார்களா என்பதை திகிலூட்டும் விதமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத்.

படத்திற்கு மிகப்பெரிய ஃப்ளஸ் யோகிபாபுவும் கருணாகரனும்தான். சுனைனாவை தவிர ஏனைய பேர் புதுமுகம். முதல்பாதியில் யோகிபாபு மற்றும் கருணாகரனின் காமெடி படத்தை கலகலப்பாக கொண்டு செல்கிறது. இரண்டாம்பாதியில் வேகமெடுக்கும் கதையில் அங்கங்கே பதற்றத்தை கூட்டியிருக்கிறார்கள். நண்பர்களாக நடித்திருக்கும் ஜெனிபர், லக்ஷ்மி பிரியா, விஜே சித்து, ராகேஷ், கல்லூரி வினோத் ஆகியோரும் நன்றாக நடித்துள்ளனர்.

ஹீரோ பிரவீன் புதுமுகமாக இருந்தாலும் எமோஷன் காட்சிகளில் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார். சுனைனாவின் நடிப்பை பொறுத்தவரை எந்தவித ஈகோவும் இல்லாமல் புதிய நடிகர்களுடன் இணைந்து காட்டுக்குள் சிரமப்பட்டு சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார். ஒளிப்பதிவாளர் உதய் சங்கர் காடுகளின் பசுமையையும் வீட்டிற்குள் நடக்கும் சண்டைக்காட்சிகளையும் சிறப்பாக கையாண்டுள்ளார். சித்துகுமாரின் இசையில் ஒரு பாடல் மட்டும்தான் பயன்படுத்தியுள்ளனர் பின்னணி இசையில் திகில் படத்திற்கு உண்டான படபடப்பை கண்முன் கொண்டு வந்துள்ளார். மொத்தத்தில் நீண்ட நாட்களுக்குபிறகு ஒரு வித்தியாசமான திகில் படத்தை திரையரங்குகளில் சென்று பார்க்கும்படி ட்ரிப் படம் உள்ளது.