
பேத்துப்பாறை மாரியம்மனை போற்றும் புதிய அம்மன் பாடல் – கவிஞர் வி.ஜே.பி ரகுபதி படைப்பு வெளியீடு
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டத்தில் இயற்கை எழில் சூழ்ந்து வரலாற்று பெருமை பெற்ற ஊராக விளங்கும் பேத்துப்பாறையில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலின் திருக்குடமுழுக்கு விழா அண்மையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பக்தர்கள் மற்றும் ஊர் மக்களின் பெரும் திரளுடன் நடந்த இந்த விழா ஆன்மிக உற்சாகத்தை ஏற்படுத்தியது.

இந்த விழாவை முன்னிட்டு, கவிஞர் வி.ஜே.பி ரகுபதி எழுதிய “பேத்துப்பாறை மாரியம்மன்” அம்மன் பாடலின் இசைக்கோப்பு வெளியிடப்பட்டது. பேத்துப்பாறை மகேந்திரன், கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த வெளியீட்டு நிகழ்வு அனைவரின் கவனத்தையும் பெற்றது.
வெளியிடப்பட்ட இந்த பாடலின் இசைக்கோப்பை புதுக்கோட்டை மாமன்னர் மகாஸ்ரீ இராஜகோபால தொண்டைமான் மற்றும் மகாராணி சாருபாலா தொண்டைமான் அவர்கள் பெற்றுக் கொண்டனர். இது நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பூட்டியது.
இந்த அம்மன் பாடலுக்கான வரிகளை கவிஞர் வி.ஜே.பி ரகுபதி எழுதியுள்ளார். ரசாந் அர்வின் இசையமைத்துள்ள இந்த பாடலை ராதிகா பாடியுள்ளார். ஒளிப்பதிவை R.V சிலம்பரசன் மேற்கொண்டுள்ளார். கார்னியா ஸ்டுடியோவில் படத் தொகுப்பு செய்யப்பட்டுள்ள இந்த பாடல், விரைவில் இணைய தளங்களில் வெளியிடப்பட உள்ளது.
பக்தி உணர்வையும் ஊரின் ஆன்மிக பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கும் இந்த “பேத்துப்பாறை மாரியம்மன்” பாடல், பக்தர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
