Saturday, May 30
Shadow

நடிகர் ஷோபன் பாபு பிறந்தநாள் பதிவு


தெலுங்கு திரைப்பட உலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்தவர் சோபன் பாபு. அவரது இயற்பெயர் உப்பு சோபன சலபதிராவ். 1937 ஆம் ஆண்டு ஜனவரி 14ந் தேதி அவர் பிறந்தார். அவருக்கு 3 சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரர் உண்டு.பள்ளிப் படிப்பை முடித்த பிறகு விஜயவாடாவில் மேற்படிப்பை தொடர்ந்த அவர் பின்னர் சென்னையில் சட்டக் கல்வி பயின்றார். ஆனால் சட்டப் படிப்பை முடிக்கவில்லை.1958ல் அவருக்கு திருமணம் நடைபெற்றது.

தெய்வ பலம் எனும் திரைப்படத்தின் மூலம் அவர் தெலுங்கு திரைப்பட உலகில் அடியெடுத்து வைத்தார். எனினும் பக்த சபரி எனும் திரைப்படமே முதலில் வெளியானது. இந்த படத்தில் அவர் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். அடுத்து வந்த பல படங்களில் அவர் சிறிய பாத்திரங்களில்தான் நடித்து கொண்டிருந்தார்.

முதல் முறையாக 1965 ஆம் ஆண்டு வீர அபிமன்யு படத்தில் கதாநாயகனாக அவர் நடித்தார். பின்னர் மனுசுலு மாரலி எனும் படத்தில் அவர் கதாநாயகனாக நடிக்க அந்த படம் பெறும் வெற்றி பெற்று அவரை முன்னணி நாயகனாக்கியது. அதன் பிறகு அவர் 30 ஆண்டுகளுக்கு மேலாக தெலுங்கு திரைப்பட உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்தார்.

சோபன் பாபு மிகவும் நேர்த்தியாக உடை அணிந்து அழகாக தோன்றக் கூடியவர். ஆந்திர திரைப்பட உலகிலேயே மிகவும் அழகான நடிகர் என்று அவர் பாராட்டப்பட்டார். அவர் எந்தவிதமான உடை அணிந்து வந்தாலும் அவருக்கு பொருத்தமாக இருக்கும். பல்வேறு விதமான பாத்திரங்களை ஏற்று நடித்த அவர் மிகவும் ஸ்டைலாக நடித்து ரசிகர்களின் அபிமானத்தை பெற்றார்.

பாடல் காட்சிகளில் அவர் குளிர் கண்ணாடி அணிந்து தோன்றுவதை தெலுங்கு ரசிகர்கள் மிகவும் விரும்பி வரவேற்றனர். பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ள அவர் பல்வேறு விருதுகளையும் வென்றுள்ளார்.

பிலிம்பேர் விருதுகளை நான்கு முறை வென்றுள்ள அவர் ஆந்திர மாநில அரசின் நந்தி விருதுகளை ஐந்து முறை வென்றிருக்கிறார். மேலும் பல விருதுகளை அவர் பெற்றிருக்கிறார்.

சாரதா, வாணிஸ்ரீ, ஜெயசுதா ஆகிய நடிகைகளோடு அவர் அதிக படங்களில் நடித்துள்ளார். ஜெயலலிதா உட்பட பல முன்னணி நடிகைகளோடும் அவர் நடித்திருக்கிறார். ஒரு சில தமிழ் படங்களிலும் அவர் நடித்துள்ளார். மொத்தம் 250 படங்களுக்கு மேல் அவர் நடித்துள்ளார்.

1997 ஆம் ஆண்டுக்கு பிறகு அவர் திரைப்பட உலகில் இருந்து ஒதுங்கி வாழ்ந்து வந்தார். தன்னுடைய வாரிசுகளை அவர் திரைப்பட துறையில் ஈடுபட அனுமதிக்கவில்லை.

அடிசினல் ரிப்போர்ட் (தகவல் உதவி: கட்டிங் கண்ணையா)💥

1979 ஆம் ஆண்டு ‘ஸ்டார் அண்ட் ஸ்டைல்’ என்ற பிரபல ஆங்கிலப் பத்திரிகையில், கிசுகிசு போல ஜெயலலிதா – சோபன் பாபு நட்பு குறித்த ஒரு செய்தி வெளியானது. கிசுகிசுவை உறுதிப்படுத்தும் வகையில், ஜெயலலிதா அந்தப் பத்திரிகைக்கு ஒரு கடிதமும் எழுதினார். !

கடிதாசில், ‘உங்கள் நிருபர் சரியாக குழம்பியிருக்கிறார் என்றே நினைக்கிறேன். திரு சோபன்பாபுவுடன் நான் கடந்த 7 வருடங்களாக கோயிங் ஸ்டடி. அவர் எளிமையான பண்பான மனிதர் என்பதால், இந்த நட்பு என் ஆயுள்வரை நீடிக்கவேண்டும் என்பதே என் விருப்பம். அவர் ஏற்கெனவே மணமானவர் என்பதால் தற்சயம் என்னை மணக்கவியலாதவராக இருக்கிறார். அதனால் என் இறுதிக்காலம் வரை ஜெயலலிதா ஜெயராம் என்றே கழிக்க விரும்புகிறேன். சோபன் பாபுவின் நட்பை நான் என்றைக்கும் மூடி மறைத்தது கிடையாது. தென்னிந்திய திரையுலகில் பலருக்கும் இது தெரியும். நடிகை என்ற இமேஜையோ மீண்டும் திரையுலகப்பிரவேசம் குறித்த எண்ணமும் இல்லாததால், இதுபற்றி நான் அலட்டிக்கொண்டு எதையும் மூடி மறைக்கவேண்டிய அவசியமில்லை’ எனக் காரசாரமாகப் போட்டுடைத்தார் தன் வாழ்க்கையை.

தமிழ் வார இதழ் ஒன்று இந்தக் கடிதத்தின் தமிழாக்கத்தை வெளியிட்டது. வழக்கமான கோபத்துடன் அதன் நிருபரை வரவழைத்த ஜெயலலிதா இன்னும் விரிவாக சோபன்பாபுவுடனான தன் நட்பு குறித்து பேட்டியளித்தார். அதில், “மாலைபோட்டு தாலி கட்டினால்தான் கணவன்-மனைவி என்ற உறவா? எந்தக் கன்னிப்பெண்ணும் திட்டமிட்டு ஏற்கெனவே திருமணமான ஒருவரை காதலிப்பதில்லை. தனக்கென ஒருவர் வேண்டும். அவர் தனக்கானவராக மட்டும் இருக்கவேண்டும் என்றுதான் விரும்புவார்கள். நானும் அப்படித்தான் கனவு கண்டேன். ஆனால், நான் சோபன்பாபுவை சந்தித்தபோது எதிர்பாராதவிதமாக அவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. இது திட்டமிட்டு செய்த காரியமல்ல. அவரையும் அதற்குப் பொறுப்பாக்க முடியாது. தவிர, நான் அவரைச் சந்தித்தபோதே அவருக்குத் திருமணம் ஆகியிருந்தது. அதேசமயம் ‘மனைவியை விவாகரத்து செய்துவிட்டு உங்களை மணக்கலாமே’ என பலர் என்னிடம் கேட்கின்றனர். அது தவறு. ஒரு குற்றமும் செய்யாத அவரை ஏன் நிராகரிக்கவேண்டும்? அவர் ஏற்கெனவே உடல்நிலை சரியில்லாதவர். தவிர அவருக்கு 3 பெண்களும் ஒரு பையனும் உள்ளார்கள். அவர்கள் வாழ்க்கைக்கு என்னால் ஒரு பாதகமும் வந்துவிடக்கூடாது என்றே இதுவரை எங்கள் உறவைப்பற்றிப் பேசாமல் இருந்தேன்” என பேட்டியளித்திருந்தார்.