
நடிகர் விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் நடிகர் விஜய் பயிற்சியாளராக நடிக்கிறார். தீபாவளிக்கு வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விஜய்யின் பிறந்தநாளன்று வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே நடிகர் விஜய் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தனது ரசிகர்களுக்கு மதிய உணவு மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கியுள்ளார். ஒவ்வொரு வருடமும் மே மாதத்தில் தனது சொந்த செலவில் இந்நிகழ்ச்சியை நடத்துவதை நடிகர் விஜய் வழக்கமாகக் கொண்டுள்ளார்.
ஆனால் இந்தமுறை அவர் படப்பிடிப்பில் இருந்த காரணத்தால், அவரது உத்தரவின் பேரில் விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் இந்நிகழ்வை நடத்தினார். நிகழ்வில் கலந்துகொண்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மதிய உணவுடன் பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டன.
