
கடந்த 1950களில் புகழ்பெற்ற நடிகையாக விளங்கிய இவர் 80 இற்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். கமலா பரத நாட்டியத்தில் இணையற்ற நடன கலைஞர்கள் பாலசரஸ்வதி, ருக்மிணிதேவி ஆகியோர் வரிசையில் இணைந்தவர்.

இவர் ஸ்ரீராமுலு நாயுடுவின் இயக்கத்தில் 1944 இல் வெளிவந்த ஜகதலப் பிரதாபன் திரைப்படத்தில் பாம்பு நடனம் ஆடிப் புகழ் பெற்றார். அதன் பின்னர் இவருக்குப் பல திரைப்படங்களில் நடனம் ஆட வாய்ப்புக் கிடைத்தது. கடந்த 1947 ஆண்டில் வெளியான நாம் இருவர் திரைப்படத்தில் ஆடுவோமே பள்ளு பாடுவோமே என்ற பாடலை இரட்டை வேடத்தில் நடித்துப் பாடினார். ஏவிஎம் இன் பராசக்தி திரைப்படத்தில் ஓ… ரசிக்கும் சீமானே… என்ற பாடல், கொஞ்சும் சலங்கை படத்தில் இவரும் நடிகை குசலகுமாரியும் இணைந்து ஆடிய போட்டி நடனம் ஆகியவை இவருக்குப் புகழ் சேர்த்தன.
கடந்த 1960ல் வெளியான பாவை விளக்கு திரைப்படம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், தணிகாசலம் என்ற எழுத்தாளனாக நான்கு கதாநாயகிகளுடன் நடித்து வெளிவந்தது. இப்படத்தில் முதல் கதாநாயகியாக குமாரி கமலா செங்கமலம் என்ற பாத்திரத்தில் குமாரி கமலா நடித்திருந்தார். இப்படத்தில் வண்ணத்தமிழ்ப் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள் என்று கதாநாயகன் எழுதிப் பாடும் பாட்டிற்கு குமாரி கமலா நாட்டியமாடி இருந்தார்.
ஸ்ரீதேவி நடித்த தெய்வத் திருமணம், ஜெயசித்ரா நடித்த வருவான் வடிவேலன் போன்ற சில படங்களுக்கு நடன ஆசிரியையாகப் பணியாற்றியுள்ளார்.
பிரபல ஓவியர் ஆர். கே. லட்சுமணனை திருமணம் புரிந்த கமலா, அவருடன் 1960 இல் மணமுறிப்பு செய்த பின்னர், 1964-ல் ராணுவ வீரர் மேஜர் லெட்சுமிநாராயணன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு திரையுலகில் இருந்து விலகி குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டார்.

கடந்த 1980-ல் அமெரிக்காவில் உள்ள குயின்ஸ் என்ற இடத்தில் குடியேறி அங்கே “ஸ்ரீபரதகலாலயா’ என்கிற நாட்டியப் பள்ளி ஒன்றை ஆரம்பித்து ஏராளமானவர்களுக்கு பரதக் கலையைக் கற்றுக் கொடுக்க தொடங்கினார். கடந்த 1983-ல் கணவர் இறந்த பிறகு தன் மகனோடு அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் வசித்து வருகிறார்.
இவர் நடித்த திரைப்படங்கள்
ஸ்ரீ வள்ளி, பாலயோகினி, ஜகதலப்பிரதாபன், கொஞ்சும் சலங்கை, காத்தவராயன், பக்தமீரா, நாம் இருவர், வீரக்கனல், வேதாள உலகம், குல தெய்வம், பார்த்திபன் கனவு, சிவகங்கைச் சீமை, சிவகாமி, பராசக்தி, பாவை விளக்கு
