Tuesday, July 23
Shadow

ஏலே – திரை விமர்சனம் (Rank 3.5/5)

தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான உறவை காமெடி கலந்துசொல்லியுள்ள படம்தான் ஏலே.

சென்னையில் வேலை செய்துவரும் பார்த்தி தனது தந்தை இறந்துவிட்ட செய்திகேட்டு பழனிக்கு அருகே உள்ள தனது சொந்த ஊருக்கு வருகிறான். வீட்டிற்கு வந்து பார்க்கும்போது தனது தந்தை ஐஸ் வியாபாரி முத்துக்குட்டியின் உடலை சுற்றி தனது அக்கா உள்ளிட்ட ஊர்க்காரர்கள் எல்லோரும் அழுகிறார்கள் ஆனால் அவனுக்கு அழுகை வரவேயில்லை. இந்நிலையில் தந்தையின் சடலம் திடீரென காணாமல் போகிறது. சடலத்தை யார் எடுத்தது? எதற்காக எடுத்தனர் என்பதை சொல்லும்படம்தான் ஏலே திரைப்படம்.

ஊருக்குள் ஐஸ் விற்கும் முத்துக்குட்டியாக நடித்திருக்கும் சமுத்திரக்கனி கலகலப்பான மனிதராகவும் ஊருக்குள் அடாவடி செய்யும் நபராகவும் பிரமாதப்படுத்தியுள்ளார். சேட்டைக்காரனாக அவர் செய்யும் லூட்டிகள் திரையில் வெடிச்சத்தத்தை ஏற்படுத்துகிறது. மகன் பார்த்தியாக நடித்திருக்கும் மணிகண்டன் அருமையான நடிப்பை வழங்கியுள்ளார். சிறுவயதில் இருந்து தந்தை தனக்கு எதுவுமே செய்யாததை எண்ணி கலங்குவது. குழந்தையில்லாத தம்பதிக்கு தன்னை லீசுக்கு விட்டதை நினைத்து கலங்குவதும் காதல் செய்வதிலும் நான் கெட்டிக்காரன் என்று நிரூபித்துள்ளார். தந்தை இறந்த செய்தி கேட்டு ஊருக்கு வந்த இடத்தில் ஹோட்டலில் சென்று புரோட்டா சாப்பிடுவது என ரகளை செய்துள்ளார். ராச்சியாவாக நடித்திருக்கும் மதுமதி அழகாக இருக்கிறார். அழகாகவும் நடித்திருக்கிறார். தந்தை மகனுக்கு இடையேயான அழகிய உறவை காமெடி கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஹலிதா சமீம். தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு கதையை கண்முன் நிறுத்துகிறது. கேபர் வாசுகி மற்றும் அருள்தேவின் இசையும் பின்னணி இசையும் தேவையான இடங்களில் தனது பணியை செய்துள்ளது. சிறுவயது பார்த்தியாக நடித்த சிறுவனும் அவனது யாதார்த்த நடிப்பும் அருமை. பார்த்தியின் நண்பர்களின் நடிப்பு நன்று. திரைக்கதையில் சில சில முடிச்சுகளை போட்டு இறுதியில் அனைவரும் விரும்பும் முடிவை வழங்கி பார்வையாளர்களின் கைதட்டுக்களை பெறுகிறார் இயக்குனர்.