Thursday, October 29
Shadow

வேட்டைநாய்- திரைவிமர்சனம் Rank 3/5

சிறு வயதிலேயே தாய் தந்தையை இழந்த ஹீரோ சேகர் தனது அத்தை மாமாவுடன் வாழ்ந்து வருகிறார். படிப்பில் விருப்பமின்றி கோபக்காரனாக வளரும் ஹீரோ சேகரை அப்பகுதியில் பணம்படைத்த தாதா கட்டப்பஞ்சாயத்து செய்யும் ரவுடியான போஸ் தன்னிடம் அடியாளாக வைத்துக்கொள்கிறார். ஹீரோவுக்கு ஹீரோயின் ராணியை பார்த்ததும் காதல் வருகிறது. திருமணமும் செய்துகொள்கிறார். இந்நிலையில் அப்பகுதியில் கறிக்கடை நடத்தும் பாய்க்கும் போஸ்க்கும் ஏற்படும் பிரச்சினையில் அவர்களை சேகர் அடித்து விடுகிறார். இதனிடையே பாயின் தம்பி உடல்நலக்குறைவால் இறந்துவிட தன்னுடைய தம்பியை கொன்றது சேகர் தான் என்று அவரை கொல்ல பாய் திட்டம்தீட்டுகிறார்.. கூடவே சேகரின் நண்பனும் அவனை கொலை செய்ய துடிக்கிறான். இறுதியில் சேகரின் நிலை என்ன ஆனது என்பதுதான் படம்.

சேகராக ஆர்கே சுரேஷ். அந்த முரட்டு உடம்புக்குள் இப்படி ஒரு நடிகன் இருக்கிறான் என்பதை இப்போதுதான் பார்க்க முடிகிறது. அருமையாக நடித்துள்ளார். கோபம் தெறிக்கும் கண்களில் அடியாள்களை அடித்து துவைப்பதாகட்டும் தனது விசுவாசம் சந்தேகிக்கப்படும் இடங்களில் இயலாதவனாய் நிற்பதாகட்டும் மனைவியின் உயிரை காப்பாற்ற முடியாத இடத்தில் கலங்கி தவிப்பதாகட்டும் தரமான நடிப்பை நல்கியுள்ளார். போஸாக ராம்கி. நீண்ட இடைவெளிக்குப்பிறகு நல்வரவு. என்ன தான் பாசமாக இருந்தாலும் கூட இருக்கும் அடியாள்களை ஒரு வேட்டை நாயாகத்தான் பார்க்கும் இவரது சுயநல நடிப்பு கதைக்கு கணம் சேர்க்கிறது. ராணியாக சுபிக்ஷா. இவ்வளவு இளம் வயதில் முதிர்ச்சியான கதாபாத்திரத்தை தாங்கி நடித்துள்ளார். பள்ளி மாணவியாக அழகுப்பதுமையாக வருபவர் திருமணத்திற்கு பிறகு வரும்காட்சிகளிலும் சீரியஸ் இடங்களிலும் நம்மையும் அழ வைக்கிறார். அத்தை மாமாவாக வரும் ரமா, நமோ நாராயணின் அனுபவம் வலு சேர்க்கிறது. கணேஷ் சந்திரசேகரின் பாடல்கள் நன்றாக உள்ளது. பின்னணி இசையில் காட்சிக்குத் தகுந்தவற்றை வழங்கியுள்ளார். மலை கிராமம் என்பதால் மலைகளை மட்டுமே அடிக்கடி காட்டாமல் அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் தெருக்களை ஒளிப்பதிவாளர் அழகாக காட்டியுள்ளார். மொத்தத்தில் வழக்கமான கதையாக இருந்தாலும் கதைக்களம் மற்றும் திரைக்கதையில் மாற்றங்கள் செய்து நல்ல ஒரு பொழுதுபோக்கு படத்தை வழங்கியுள்ளார் இயக்குனர் ஜெய்சங்கர்.