Monday, May 20
Shadow

சங்ககால பெண்களின் வீரத்தை கூறும் குறும்படம் “புறம்”

திருமதி. கனிமொழி எம்.பி.வாழ்த்து. சுப.வீரபாண்டியன், இயக்குனர் கரு.பழனியப்பன் கலந்துகொண்டனர்

சுமார் இரண்டாயிரம் வருடப் பழமை கொண்ட “செல்கென விடுமே” எனும் புறநானூற்றுப் பாடலைத் தழுவி எடுக்கப்பட்ட ‘புறம்’ எனும் குறும்படம் மூலம் இயக்குனராகிறார் கார்த்திகேயன் மணி. சங்க இலக்கியப் பாடல்களிலேயே மிகப்பழமை வாய்ந்தவை என்று தமிழறிஞர்களால் போற்றப்படுவதாகும் புறநானூற்றுத் தொகுப்பு.

தன் தந்தையையும் கணவனையும் போரில் இழந்து, எஞ்சியிருக்கும் ஒரே மகனையும் போருக்கு வழியனுப்பும் வீரத்தாயின் திறலைப் பற்றிப் பேசுகிறது, “செல்கென விடுமே” எனும் இப்பாடல். அத்தகைய பெருமையும் வீரமும் நிறைந்த மாபெரும் இலக்கியத் தொகுப்பான புறநானூற்றின் முதல் காட்சித் தரவாய் அமைகிறது ‘புறம்’.

உலகெங்கும் பல்வேறு திரைப்படத் திருவிழாக்களில் நிறைத்த பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றுக் குவித்துக்கொண்டிருக்கும் ‘புறம்’, அண்மையில் அமெரிக்காவின் புகழ்பெற்ற லாஸ் ஏஞ்செல்ஸ் சர்வதேச குறும்படவிழாவில் சிறந்த பெண்கள் திரைப்படம்(கார்த்திகேயன் மணி), சிறந்த நடிகர் குழு(பானுப்பிரியா, பிரவீன் குமார், லோகன், நரேஷ் மாதேஷ்வர்), சிறந்த இசை(கே. சி. பாலசாரங்கன்), சிறந்த கலை வடிவமைப்பு(ராஜாஜி), ஆகிய விருதுகளை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதைப்பற்றி படத்தின் இயக்குனர் கார்த்திகேயன் மணி கூறுகையில், “சங்க இலக்கியப் பாடல்கள் தற்கால கலை வடிவங்களில் அறவே இல்லாத சூழலில், அவற்றைத் தற்கால காட்சி ஊடக வடிவில் தரவுப்படுத்த வேண்டும், பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும், நம் இலக்கியங்களும் வரலாறும் தமிழ் மக்கள் மட்டுமல்லாது இன, மொழி, நாடு ஆகிய எல்லைகள் கடந்து அனைவரிடமும் சென்று சேரவேண்டும் என்ற உயரிய நோக்கங்கள் கொண்டு ஒரு முழுநீளத் திரைப்படத்தின் முன்னோடியாய் இப்படத்தைத் தயாரித்திருக்கிறோம்” என்கிறார்.

வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இப்படம் உலகெங்கும் பலதரப்பட்ட மக்களின் ஆதரவையும் வரவேற்பையும் பெற்று வருகிறது. இப்படத்தை நாடாளுமன்ற உறுப்பினரும் கவிஞருமான திருமதி கனிமொழி கருணாநிதி அவர்கள் சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் திரைப்பட ஆராய்ச்சியகத் திரையரங்கில் கலந்து கொண்டு வெளியிட்டார். ‘Film Companion South’ எனும் யூட்யூப் தளத்தில் இப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

திருமதி.கனிமொழி எம்.பி வாழ்த்து
இப்படம் கவித்துவமாக எடுக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பங்களில் குறிப்பாக ஒளிப்பதிவு, பின்னணி இசை. உடைகள், ஒப்பனை போன்றவை மிக நேர்த்தியாக உள்ளது. இதில் நடித்திருப்பவர்களை நன்றாக நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர். தமிழர்களின் பெருமையை கூறும் இது பாதுகாக்கப்பட வேண்டியது என்று வாழ்த்தினார்.

போரற்ற உலகம் வேண்டும் என்று திரு. சுப.வீரபாண்டியன் வாழ்த்தினார்.