Monday, May 20
Shadow

அவள் பெயர் ரஜ்னி – திரைவிமர்சனம் ( ரசிக்கவைப்பவள்) Rank 3.5/5

 

அவள் பெயர் ரஜ்னி திரைப்பட விமர்சனம்!

காளிதாஸ் ஜெயராம், நமீதா பிரமோத் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் அவள் பெயர் ரஜ்னி. இப்படத்தின் கதைப்படி காளிதாஸ் ஜெயராமின் அக்கா நமீதா பிரமோத் மற்றும் அவரது கணவர் சைஜு குரூப் இருவரும் இரவில் காரில் சென்றுகொண்டு இருக்கும் போது காரில் டீசல் தீர்ந்து விடுகிறது. சைஜு டீசல் வாங்கி வருவதாக செல்கிறார். பின்னர் அவரை காரின் மேலே வைத்து யாரோ‌ கொலை செய்கிறார்கள். அதை நேரில் பார்த்தவர்கள் பெண் கொலை செய்ததாகவும் சிலர்‌ பேய் தான் கொலை செய்தது என்றும் கூறுகிறார்கள். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் காளிதாஸ் ஜெயராம் தானே கொலையாளியை தேடி அலைகிறார்.‌இறுதியில் கொலையாளி யார்? கொலைக்கான காரணம் என்ன என்பதே அவள் பெயர் ரஜ்னி.

படத்தின் டீம் முழுக்க முழுக்க மலையாளத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் படம் முழுவதும் தமிழில் எடுத்துள்ளனர்.‌ அதற்காக ரமேஷ் கண்ணா, கருணாகரன் ஆகியோரை நடிக்க வைத்துள்ளனர். ஆனாலும் மலையாள வாடை வீசுவதை தவிர்க்க முடியவில்லை.

காளிதாஸ் ஜெயராமுக்கு சீரியஸான கதாபாத்திரம் என்பதால் துளியும் அவர் முகத்தில் சிரிப்பில்லை. படம் முழுவதும் டென்ஷனாக நடித்துள்ளார். கொலையாளியை தேடி இரவு‌முழுவதும் தனியாளாக தேடி அலைகிறார். நமீதா பிரமோத் கணவனை இழந்தவராக எப்போதும் சோகம் அப்பிய முகத்துடன் வருகிறார். ரெபா மோனிகா கதாபாத்திரம் கதைக்கு தேவையேயில்லை. போலீசாக வரும் அஸ்வின் குமார் நடிப்பு நன்று. ரமேஷ் கண்ணா, கருணாகரன் இருவருக்கும் அதிக வேலையில்லை. கொலையாளியின் பிளாஷ்பேக் நன்றாக இருக்கிறது. ஆனால் படம்‌ முடியும் போது வருவதால் வேகத்தடையாக உள்ளது. ஆர் ஆர் விஷ்ணுவின் கேமிரா சென்னை இரவுகளை அழகாக காட்டியுள்ளது.‌ 4 மியூசிக்ஸ் பின்னணி இசை த்ரில்லர் படங்களுக்கான பெப் ஏற்றியுள்ளது.

வழக்கமான மர்டர் மிஸ்ட்ரி கதைதான் என்றாலும் கொலையாளியின் பின்னணி சற்று வித்தியாசத்தை ஏற்படுத்தியுள்ளது. திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால் படமும் கவனம் ஈர்த்து இருக்கும். ரேட்டிங் 3.5/5.