Sunday, May 19
Shadow

பகாசூரன் – திரைவிமர்சனம் ரேங்க் 3.5/5

இயக்குனர் மோகன்ஜி இயக்கத்தில் வெளவந்திருக்கும் படம் பகாசூரன் மோகன்ஜி படம் என்றால் சாதி, ஆணவக்கொலையை மையப்படுத்தி தான் இருக்கும் என்று நினைத்து திரையரங்கிற்கு வருபவர்களுக்கு நிச்சயம் ஏமாற்றமாக இருக்கும். இந்தமுறை சமூக அக்கறையுள்ள கதையுடன் வந்துள்ளார். கல்லூரியில் படிக்கும் ஏழை மாணவிகள் எவ்வாறு மூளைச் சலவை செய்யப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்பதையும் செல்போனால் பெண் குழந்தைகளுக்கு என்னமாதிரியான பிரச்சினை வருகிறது என்பதையும் கதைக்களமாக கொண்டு பகாசூரனை கொண்டு வந்துள்ளார் மோகன் ஜி.

சேலத்தில் கோயிலில் வேலை செய்துவரும் செல்வராகவன் அடுத்தடுத்து மூன்று பேரை தேடிச் சென்று கொலை செய்கிறார். இன்னொருபுறம் ஓய்வு பெற்ற ராணுவ வீரரான நட்டி யூடியூப் சேனல் மூலம் நாட்டில் நடந்த சுவாரஸ்யமான க்ரைம் வழக்குகள் பற்றி பேசி வருகிறார். ஒருநாள் நட்டியின் அண்ணன் மகள் தற்கொலை செய்து கொள்கிறார். இதுகுறித்து விசாரிக்கும் நட்டிக்கு மிகப் பெரிய அதிர்ச்சி விஷயம் தெரிய வருகிறது. ஒரு கும்பல் அண்ணன் மகளை மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனர். இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொள்கிறார். செல்வராகவன் எதற்காக இத்தனை கொலைகள் செய்கிறார்? பாலியல் குற்றத்திற்கு பின்னால் இருக்கும் குற்றவாளி கும்பலை நட்டி கண்டுபிடித்தாரா? என்பதே பகாசூரன்.

படத்தின் பலம் திரைக்கதை. மோகன் ஜி தனது அடுத்தடுத்த படங்களில் தொழில்நுட்ப ரீதியிலும் மேக்கிங்கிலும் தேறிவருகிறார். சமூகத்தில் நடந்த சில பாலியல் குற்றங்களை ஒன்றுசேர்த்து அருமையான திரைக்கதையாக எழுதி படமாக கொடுத்துள்ளார். அடுத்து நட்டி மற்றும் செல்வராகவன். செல்வராகவன் ஜீனியஸ் இயக்குனர் என்று எல்லோருக்கும் தெரியும். அவரை இயல்பாக நடிக்க வைத்துள்ளார் இயக்குனர். ஒரு கூத்தாடும் நபராக அம்மா இல்லாத பெண்ணுக்கு அப்பாவாக அப்பாவியாக நடித்துள்ளார். அந்த அப்பாவிக்குள் இருக்கும் ரௌத்திரத்தை மிக கச்சிதமாக வெளிப்படுத்தியுள்ளார். அவரது ஒருவித மேனரிசம் தத்ரூபமாக படத்துக்கு உதவியுள்ளது.
மற்ற கதாபாத்திரங்கள் அனைவரும் கதாபாத்திரத்தின் தன்மை உணர்ந்து நடித்துள்ளனர். நட்டி நடராஜ் படத்தின்‌ மற்றுமொரு பலம். சிறப்பாக நடித்துள்ளார். ஒவ்வொரு காட்சிகளிலும் மிகவும் எதார்த்தமான நடிப்பை கொடுத்துள்ளார்.

சாம் சி.எஸ். இசையில் என்னப்பன் அல்லவா பாடல் தெய்வீகம். பின்னணி இசை சாதாரண காட்சிகளையும் தூக்கி நிறுத்தியுள்ளது. படம் சற்று நீளம் இருந்தாலும் சொல்ல வந்த கருத்து தற்போதுள்ள சமூகத்துக்கு தேவையானது.