Sunday, December 8
Shadow

பிளடி பெக்கர் – திரை விமர்சனம்! Rank 2.5/5

ஆச்சரியப்படுத்தியதா? அடிச்சு அனுப்பியதா? பிளடி பெக்கர் திரை விமர்சனம்!

நடிகர் கவின் தனக்கென புது ரூட் பிடித்து நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருபவர். அதனால் அவர் படங்கள் மீது ரசிகர்களுக்கு நம்பிக்கை உண்டு. அதனை சிவபாலன் முத்துகுமார் இயக்கத்தில் வெளியான பிளடி பெக்கர் படம் காப்பாற்றியதா என்று பார்க்கலாம். இப்படத்தை இயக்குனர் நெல்சன் தயாரித்துள்ளார்.

படத்தின் கதைப்படி பிச்சைக்காரனான கவின் பல்வேறு தில்லுமுல்லு செய்து பிச்சை எடுத்து வருபவர். அவருடன் ஒரு சிறுவனும் இருக்கிறான். ஒருநாள் ஒரு அரண்மனை முதலாளியின் நினைவு நாளை ஒட்டி 25 பேருக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்படுகிறது. 25பேரில் ஒருவர் குறைய கவினையும் அழைத்து செல்கின்றனர். சாப்பிட்டுமுடித்த கவினுக்கு அங்குள்ள மிகப் பெரிய அரண்மனையை பார்த்து இதற்குள் சென்று பார்த்தால் என்ன என்று ஆசை வருகிறது. உள்ளே யாரும் இருக்க மாட்டார்கள் என்று நினைத்து போன கவினுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி அங்கு காத்திருக்கிறது. அரண்மனைக்குள் வாரிசுகளுக்குள் ஏற்படும் சொத்துப் பிரச்சினையில் எதிர்பாராத விதமாக கவின் சிக்கிக் கொள்கிறார். தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதை எடுத்து அங்கிருந்து தப்பிக்கும் கவினின் போராட்டமே இப்படம். இது கவினின் போராட்டம் மட்டுமல்ல படம் பார்க்கும் நமது போராட்டமும் கூடத்தான்.

நடிப்பு திறமை மட்டும் பத்தாது நல்ல கதை தேர்வும் முக்கியம் என்பதை கவினுக்கு இந்த படம் உணர்த்தியிருக்கும். ஏமாற்று பிச்சைக்காரனாக கவின் செய்யும் சேட்டைகள் ரசிக்கும்படியாக இல்லை. கதாபாத்திர வடிவமைப்பு மற்றும் கவினின் நடிப்பு நன்றாக உள்ளது. ஆனால் அதனை மட்டும் வைத்துக்கொண்டு என்ன செய்வது?. படத்தில் நமக்கு தெரிந்த இன்னொரு முகம் ரெடின் கிங்ஸ்லி. இதிலும் அதே மாடுலேசனில் கத்திக் கொண்டே இருக்கிறார். டார்க் காமெடி அல்லது பிளாக் காமெடி படங்களுக்கு சுவாரஸ்யமான திரைக்கதை மட்டுமே பலமாக இருக்கும். இதில் எல்லாமே மிஸ்ஸிங்.

ஜென் மார்ட்டின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஒட்டவில்லை. மெயின் பர்னிச்சரே உடைந்த பிறகு மற்ற பொருட்களின் நிலை கேட்கவா வேண்டும். பாவம் இயக்குனர் நெல்சன் ஜெயிலர் கொடுத்ததை ஏப்பம் விட்டுவிட்டான் பிளடி பெக்கர். என்னத்த சொல்ல. மொத்தத்தில் பிளடி பெக்கர் – பிம்பிளிக்கா பிளாப்பி. ரேட்டிங் 2.5/5.