
“ரீல்ஸிலிருந்து ரீல் ஹீரோ வரை” – ‘லைட் வெயிட் பேபி’ மூலம் கதாநாயகனாகும் விக்கல்ஸ் விக்ரத்தின் உணர்ச்சி பயணம்!
சென்னை: டிஜிட்டல் உலகில் சிரிப்புகளை விதைத்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த ஸ்டாண்ட்-அப் காமெடியனும், ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் குடும்பங்களின் அன்பைப் பெற்றவருமான நடிகர் விக்கல்ஸ் விக்ரம், தற்போது ‘லைட் வெயிட் பேபி’ திரைப்படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். இத்திரைப்படத்தின் டைட்டில் வெளியீட்டு விழா சென்னையில் உற்சாகமான சூழலில் நடைபெற்றது.
இயக்குநர் கே.சி. குரு இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படம் ரொமான்டிக் காமெடி வகையைச் சேர்ந்தது. விக்கல்ஸ் விக்ரத்துடன் இணைந்து ஃபிட்னஸ் மாடலான ஆர்த்தி கிருஷ்ணா கதாநாயகியாக நடிக்கிறார். பிரமோத் கோடியன் ஒளிப்பதிவு மேற்கொள்வதுடன், சரவணன் சுப்பிரமணியம் இசையமைக்கிறார். ஹிதா ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சாகர் சந்தேஷ் மற்றும் ஜி. திம்மா ரெட்டி இணை தயாரிப்பாளர்களாக உள்ளனர்.

விழாவில் பேசிய விக்கல்ஸ் விக்ரம், தனது பயணத்தை சிரிப்போடும், சிந்தனையோடும் பகிர்ந்துகொண்டார். “2016-ல் ஒரு தியேட்டர் கலைஞனாகத் தொடங்கிய நான், சமூக வலைதளங்களில் சிறிய வீடியோக்கள் மூலம் மக்கள் கவனத்தை ஈர்த்தேன். அந்த நேரத்தில் என்னை ஒரு ‘கன்டென்ட்’ மாதிரி பார்த்தார்கள். ஆனால் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்குப் பிறகு, மக்கள் என்னை குடும்பத்தின் ஒருபங்காக ஏற்றுக் கொண்டார்கள்,” என்றார்.
அவரது பேச்சில் உணர்ச்சி தருணங்களும் கலந்திருந்தன. குறிப்பாக ‘நிலவை கொண்டு வா’ பாடலின் ரீல்ஸ் வைரலான தருணம், இசையமைப்பாளர் தேவா நேரடியாக தொடர்பு கொண்டு பாராட்டிய சம்பவம் ஆகியவை அவரது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்ததை அவர் பகிர்ந்தார். “ஒரு காலத்தில் நான் செய்ததை என் தந்தை புரிந்துகொள்ளவில்லை. ஆனால் இன்று நான் ஹீரோவாக நடிப்பதை அவர் பெருமையாக பார்க்கிறார்,” என அவர் உணர்ச்சியுடன் குறிப்பிட்டார்.

‘லைட் வெயிட் பேபி’ குறித்து பேசும்போது, இது சாதாரண காதல் கதை அல்ல என்றும், ஒரு ஸ்டாண்ட்-அப் காமெடியனும், பெண் பாடி பில்டரும் இடையேயான வித்தியாசமான காதல் பயணத்தைச் சொல்லும் படைப்பாக இருக்கும் என்றும் தெரிவித்தார். “ஒரு காலத்தில் சொல்ல வெட்கப்பட்ட கனவு இன்று நனவாகிறது,” என்ற அவரது வார்த்தைகள் பலரையும் நெகிழச் செய்தன.
இயக்குநர் கே.சி. குரு தனது கருத்தில், “இது வாழ்க்கையின் சமநிலையைப் பற்றிய கதை. வெளிப்படையாக எடை குறைவு-அதிகம் போல தெரிந்தாலும், அதன் பின்னால் உள்ள உணர்வுகளே இந்த படத்தின் மையம்,” என்றார்.
முதல் திரைப்பட அனுபவத்தை பகிர்ந்த நடிகை ஆர்த்தி கிருஷ்ணா, “இந்த வாய்ப்பு எனக்கு மிகவும் முக்கியமானது. ஒரு புதிய பயணத்தை ஆரம்பிக்கிறேன். சிறந்த முயற்சியை வழங்குவேன்,” என்றார்.

‘லைட் வெயிட் பேபி’ – ஒரு சிரிப்பூட்டும் காதல் கதையைத் தாண்டி, கனவுகளை நம்பிய இளைஞனின் வாழ்வியல் பயணத்தை பிரதிபலிக்கும் படைப்பாக உருவாகி வருகிறது. சமூக வலைதளங்களில் தொடங்கிய ஒரு சாதாரண கலைஞனின் கனவு, இன்று வெள்ளித்திரையில் நாயகனாக மலரப்போகிறது என்பது இந்த படத்தின் மிகப்பெரிய சிறப்பு.
