Wednesday, January 14
Shadow

ஜெமினி & விகடன் நிறுவனர் எஸ். எஸ்.வாசன் பிறந்த நாளின்று

கொஞ்சம் நெடிய பதிவிது.. ஆனாலும் தெரிந்து கொள்ள வேண்டிய சாதனை மனிதரின் வரலாறு

வட நாட்டில், தமிழ்நாட்டுக்குப் பெருமையும் புகழையும் பெற்றுத் தந்தவர்கள் பலர். அவர்களுள் பத்திரிகையாளராகவும், திரைப்படத் தயாரிப்பாளராகவும், தேசபக்தி மிக்கவருமான எஸ்.எஸ்.வாசன் பெயர் என்றும் அழியாது.

அவர் அறியாத துறையில்லை; தொட்டு வெற்றியடையாத துறைகள் இல்லை. எஸ்.எஸ்.வாசன் என்றால் திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர், படத் தயாரிப்பு மனை உரிமையாளர் (ஸ்டூடியோ-ஜெமினி), “ஆனந்த விகடன்’ இதழின் நிறுவனர், ஆசிரியர் என்றே பலரும் அறிவர். எஸ்.எஸ்.வாசன் ஒரு சிறந்த எழுத்தாளர் என்பது பலருக்கும் தெரியாது. அவருடைய இளவயதுக் கனவு, லட்சியம் எழுத்தாளராவது; சிறந்த இதழ் நடத்துவது என்பவையே.

திருத்துறைப்பூண்டி அருகில் உள்ள ஒரு சிற்றூரில் சுப்பிரமண்யம்-வாலாம்பாள் இணையருக்கு 1903-ஆம் ஆண்டு பிறந்தார். பெற்றோர் இட்டபெயர் சீனிவாசன். நான்கு வயதிருக்கும்போதே தந்தை சுப்பிரமண்யம் இறந்தார். தாய் வாலாம்பாள் தந்தை இல்லாத துயரம் தெரியாது வளர்த்து, கடுமையாக உழைத்து மகனைப் படிக்க வைத்தார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இன்டர்மீடியட் வகுப்பில் படிக்கும் வரையில் அவர் தாய் பட்ட துன்பத்தையும் கடும் உழைப்பையும் விவரிக்க வார்த்தைகள் கிடையாது.

“தமிழ்ப் பெரியார்கள்’ என்ற நூலில் வ.ரா., எஸ்.எஸ்.வாசனைப் “பெரியார்’ என்று தாம் தேர்ந்தெடுத்ததன் காரணத்தைத் தம் நூலில் கூறுகிறார்.

“”ஜன சமூகத்தில் ஆயிரக்கணக்கில் ஊதியம் பெறுகிற உத்தியோகஸ்தர்கள் இருக்கிறார்கள். திறமையுடன் தொழில் செய்து லட்சக்கணக்கில் பணம் சேர்க்கும் புத்திசாலிகள் இருக்கிறார்கள். இவர்களை ஏன் “பெரியார்’ என அழைக்கவில்லை என்று கேட்கலாம். பெரியார்களை நான் எவ்வாறு தேர்ந்தெடுத்தேன் என்று சொல்கிறேன்.

அனுகூலம் எதுவுமில்லாமல் பிரதிகூலங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வீறுகொண்டு எழும் பேர்வழிகள் பெரியார்கள் என்பதில் சந்தேகமில்லை. நான் குறிப்பிடும் அத்தகைய பேர்களும் யாருடைய உதவியும் இல்லாமல் தங்கள் சொந்த முயற்சியில் முன்னுக்கு வந்தவர்கள். இவர்கள் எல்லோரும் ஒவ்வோர் அளவில் மேதாவிகள். சரித்திரத்தில் இடம்பெறக் கூடிய காரியங்களைச் செய்தவர்கள்” என்று தாம் கண்டெடுத்தப் பெரியார்களின் அளவுகோலைக் குறிப்பிடும்போது அவர் கூற்று சரிதான் என்று நாமும் ஆமோதிப்போம்.

12 தமிழ்ப் பெரியார்களுள் எஸ்.எஸ்.வாசனைக் குறிப்பிட்டு எழுதியபோது வாசகர்கள் பெரும் கேள்விக்குறி எழுப்பினார்கள். வ.ரா.வின் அளவுகோலையும், வாசனைப் பற்றி எழுதியதையும் படித்த பிறகு ஆமோதித்தனர்.

தாயார் வாலாம்பாள் வாசனை, பட்டப் படிப்புக்காக சென்னைக்கு அழைத்து வந்தார். படிப்பைத் தொடர்வதைவிட ஏதாவது தொழில் செய்து பிழைக்கலாம் என்று இளைஞர் வாசனுக்குத் தோன்றியது. பத்திரிகைகளுக்கு விளம்பரம் சேகரித்துக் கொடுத்து அதற்காக இதழ் அதிபர்கள் கொடுக்கும் கமிஷன் தொகை அந்தக் கால வாழ்க்கைக்கு உதவியது. ஈரோட்டில் பெரியார் ஈ.வெ.ரா. நடத்திய “குடியரசு’ இதழுக்கும், நாகவேடு முனிசாமி முதலியார் நடத்திய “ஆனந்த போதினி’ மாத இதழுக்கும் அவர் விளம்பரம் சேகரித்துக் கொடுத்திருக்கிறார்.

மற்றவர்களுக்கு விளம்பரம் வாங்கித்தரும் உழைப்பைத் தன் சொந்தப் பத்திரிகைக்குச் செய்தால் என்ன என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. “ஆனந்த போதினி’ மாத இதழ் போன்று ஒரு பத்திரிகை ஆரம்பிக்கலாம் என்ற எண்ணமும் உருவானது.

புதூர் வைத்தியநாதையர் பெரும் இடர்ப்பாடுடன் நடத்தி வந்த “ஆனந்த விகடன்’ இதழை விலைக்கு வாங்கினார். 1928-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆனந்த விகடன் இதழை வெளியிட்டார்.

திருச்செங்கோடு ஆஸ்ரமத்தில் “விமோசனம்’ பத்திரிகை நின்றவுடன், கல்கி சென்னைக்குத் திரும்பி, வாசனைச் சந்தித்து எழுதத் தொடங்கியது, எழுத்துலகிலும் பத்திரிகை உலகிலும், எஸ்.எஸ்.வாசன் தொடங்கிய “ஆனந்த விகடன்’ வரலாற்றிலும் ஒரு திருப்புமுனை எனலாம். வாசன், ரா.கிருஷ்ணமூர்த்தி தனக்கு அறிமுகமான நிகழ்ச்சியை விவரிக்கும் கதை மிகவும் சுவாரசியமான ஒரு தனிக்கதை.

தமிழ்த் தேனீ, அகத்தியன் என்று எழுதிக் கொண்டிருந்த எழுத்துச் சிற்பியான ரா.கிருஷ்ணமூர்த்தியை “கல்கி’ எனப் பெயர் பூணச் செய்து சுதந்திரமாக எழுத, சிந்திக்க, விவாதிக்கப் “பாட்டை’ ஏற்படுத்திக் கொடுத்தார். பிற்காலத்தில் “கல்கி’ புகழ்பெற வாசனும் அவரது தாயாருமே முக்கிய காரணமானவர்கள்.

ஆனந்த விகடனைத் தொடங்கியவுடன் முதல் இதழில் “இந்திரகுமாரி’ என்ற நாவலைத் தொடங்கினார். பரலி சு.நெல்லையப்பர் போன்ற தமிழ் அறிஞர்கள் கட்டுரைகளை வெளியிட்டார்.

“”என்னை எழுத்தாளர் என்று கூறி அழைக்கப்படுவதைக் காட்டிலும் வேறு எந்தப் பெருமையையும் நான் பெரிதாகப் போற்றவில்லை” என்று 27-2-1958 அன்று திருச்சி தமிழ் எழுத்தாளர்கள் மூன்றாம் ஆண்டு விழாவில் கலந்துகொண்டு பேசி, அருமையாக சொற்பொழிவாற்றினார்.

“ஜெமினி’ பிக்சர்ஸின் (ஸ்டூடியோ) அதிபரான எஸ்.எஸ்.வாசன், தமிழ் நாட்டில் பத்திரிகைத் துறையிலும் சினிமா படத்துறையிலும் அரிய பல காரியங்களைச் சாதித்திருக்கிறார். “சந்திரலேகா’ படத்தை பல அம்சங்களிலும் தலைசிறந்த படமாக எடுத்துப் புகழ் பெற்றிருக்கிறார். இவை தவிர இரும்புத்திரை, வஞ்சிக்கோட்டை வாலிபன் ஆகிய படங்கள் இவர் இயக்கியவைதான். வடநாட்டிலும் இந்தியில் பத்து படங்களுக்கும் மேல் இயக்கி வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறார்.

சிறந்த எழுத்தாளருமான வாசன், சதிலீலாவதி, இந்திரகுமாரி ஆகிய நாவல்களைத் தொடர்ந்து, அவர் கடைசியாக எழுதிய நூல், “இல்வாழ்க்கை ரகசியம்’. சாதாரண மக்கள் தேக ஆரோக்கியத்தோடு இருக்க வேண்டியதற்கான முறைகளை வாசன் அந்நூலில் குறிப்பிட்டிருந்தார்.

தமிழ்த் தாயின் தவப்புதல்வரான வாசன், 1969-ஆம் ஆண்டு ஆகஸ்டு 26-ஆம் தேதி தம் 66வது வயதில் இறையடி எய்தினார்.

எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் மறந்தாலும், திரைப்படத் துறையில் உள்ளவர்கள் வாசனுடைய சாதனையை, வடநாட்டுப் பட முதலாளிகளை வியப்படையச் செய்ததை, ஜெமினி ஸ்டூடியோவை மறக்கமாட்டார்கள்.

வாசனின் மகன் எஸ்.எஸ்.பாலனும், பெயரன் பா.ஸ்ரீநிவாசனும் வாசன் தொடங்கிய “ஆனந்த விகடன்’ கொடியைப் பல விதங்களிலும் தாழாது நிலைநாட்டி வந்தார். வாசனுடைய மார்பளவு சிலை, வாசன் தலைவராக இருந்த ஜெமினி பிலிம் சேம்பர் கட்டடத்தில் உள்ளது.

வாசன் நினைவாக சென்னையில் ஒரு புகழ் வாய்ந்த சாலைக்கோ, பாலத்திற்கோ, கட்டடத்திற்கோ அவர் பெயரைச் சூட்டி, பெருமைப்படுத்துவதே அரசின் கடமையாகும் என்று சில பல இதழாளர்கள் இன்றும் கோரிக்கை வைக்கும் போது வாசன் வழி வந்த இன்றைய விகடன் அதிபர் ‘ விகடன் லோகோ-வை போட்டு ஊறுகாய் போட்டு விற்றால் கூட இந்த பத்திரிகை வருமானத்தை விட அதிகமாக சம்பாதிப்பேன்’ என்று சொன்னதாக வந்த தகவல்தான் இன்றும் ரணமாகி இருக்கிறது