5 நாட்களில் 65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை !
சமூக ஊடகங்களில் முகநூலில் ‘யூடியூப் தளங்களில் வியூஸ் அதாவது பார்வையாளர்கள் ஆயிரங்கள் தாண்டி லட்சத்தைத் தொட்டாலே சாதனை என்றும் சரித்திரம் என்றும் பரவசப்படுவார்கள்.
ஒரு சிறிய குறும்படம் முகநூலில்( Facebook) வெளியான 5 நாட்களில் 65லட்சம் பேர் பார்த்து 60 ஆயிரம் பேர் பகிர்ந்து ஒருலட்சம் பேர் விரும்பி (Like) சாதனை படைத்துள்ளது. அந்தப் படம் தான் ‘இந்தியன் டூரிஸ்ட்’ .
இக் குறும்படத்தைக் ‘காமன் மேன் மீடியா’ தயாரித்துள்ளது. நடித்து இயக்கி தயாரித்தும் உள்ளார் காமன் மேன் சதீஷ். அவருடன் கே.பி. செல்வா உறுதுணையாகப் பங்கெடுத்துள்ளார்.
இந்தியாவுக்குச் சுற்றுலா வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் சந்திக்கும் பிரச்சினைகள்தான் கதையின் மையக்கரு. யாரோ சில சமூக விரோதிகள் செய்யும் தவறுகள் ஒட்டு மொத்த நாட்டைப் பற்றிய தவறான பிம்பத்தை உருவாக்குகிறது. சுற்றிப் பார்க்க இந்தியா நல்ல நாடுதான் என்று முடிகிறது படம்.
இதில் வெளிநாட்டிலிருந்து வருகிற சுற்றுலாப் பயணியாக போலந்து நாட்டைச் சேர்ந்த டோமினிகா நடித்துள்ளார். இவர் படிப்பதற்கு இந்தியா வந்த போலந்து மாணவி . நடிப்பார்வத்தில் படத்தில் இணைந்து இருக்கிறார் .
அவருடன் சதீஷ் ,காவ்யா , தாஸ் , ராகுல் ஆகியோரும் நடித்துள்ளனர்.
முகநூல் பக்கத்தில் பதிவேற்றிய 5 நாட்களில் 55 லட்சம் பேர் பார்த்துள்ள இக் குறும்படம் , 3 மணி நேரத்தில் இயற்கை ஒளியில் வெறும் 3500 ரூபாய் செலவில் எடுக்கப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
சதீஷுீடன் ரேக்ஸ் , சண்முகம் , தேவ் கண்ணன் , சுபு சிவா ,என்.யூ. ஆனந்த் , விஜயன் , சக்தி சரவணன் , பார்த்தி , சத்யன் என தொழில் நுட்பக் கூட்டணி இணைந்து இக் குறும்பட முயற்சியில் கைகோர்த்துள்ளனர்.
லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேசத் திரைப்பட விழாவில் இந்த ‘இந்தியன் டூரிஸ்ட்’ குறும்படம் அரையிறுதி வரை சென்றது என்கிற பெருமைக்குரியது.
இப்படத்தை இயக்கியுள்ள காமன் மேன் சதீஷ் அடுத்து ‘நொடிக்கு நொடி’ என்கிற குறும்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வருகிற டிசம்பர் 4-ல் சென்னையில் நடைபெறும் ரஷ்யத் திரைப்பட விழாவில் திரையிடப் படவுள்ளது.
இப்படத்தைத் திரையுலக வி.ஐ.பிக்கள் பலரும் பார்த்துப் பாராட்டியுள்ளனர்.