ஜாலியோ ஜிம்கானா விமர்சனம்
சக்தி சிதம்பரம் – பிரபுதேவா கூட்டணியில் வந்துள்ள படம் ஜாலியோ ஜிம்கானா. இப்படத்தின் கதையை பற்றி பார்க்கலாம். ஓய்ஜி மகேந்திரனின் மகளான அபிராமி பிரியாணி கடை நடத்தி வருகிறார். அவருக்கு மடோனா உள்ளிட்ட மூன்று மகள்கள். இவர்கள் எல்லாம் சேர்ந்து வட்டிக்கு பணம் வாங்கி பிரியாணி கடை வைத்துள்ளனர். ஆளுங்கட்சி அமைச்சரான மதுசூதனனின் பொதுக்கூட்டத்துக்கு பிரியாணி வழங்கியதில் பணம் தரமறுக்கிறார் மதுசூதனன். ஆளுங்கட்சி அமைச்சரான மதுசூதனன் இலவச மருத்துவ முகாம் என்ற பெயரில் மக்களின் அடையாளங்களை பயன்படுத்தி இன்சூரன்ஸ் எடுத்து ஏமாற்றுகிறார். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக வழக்கறிஞரான பிரபுதேவா வாதாடுகிறார். பிரபுதேவாவிடம் உதவி கேட்டு அபிராமி அண்ட் கோ செல்லும் போது அவர் அவரது அறையில் இறந்து கிடக்கிறார். பிரபுதேவாவுக்கு என்ன நடந்தது? அபிராமியின் பிரச்சினை தீர்ந்ததா ? என்பதை காமெடி கலந்து சொல்லியுள்ளனர்.
காமெடி படங்களுக்கு லாஜிக் தேவையில்லை. இப்படமும் அதற்கு விதிவிலக்கல்ல. பிரபுதேவா படம் முழுவதும் பிணமாக நடித்துள்ளார். மகளிர் மட்டும் படத்தில் வரும் நாகேஷ் கதாபாத்திரத்தின் தாக்கத்தில் இந்த கதையை எழுதியுள்ளார்கள் போல். பிரபுதேவாவும் முடிந்த அளவுக்கு அதனை நன்றாக செய்துள்ளார். படம் முழுக்க பிரபுதேவாவை சுமக்கின்றனர் அபிராமி, மடோனா, அபிராமி பார்கவன், மரியா. இதில் மரியா, அபிராமி பார்கவன் இருவருக்கும் வேலை குறைவு.
அம்மாவாக அபிராமி காமெடியில் அசத்தி உள்ளார். ஆனால் மடோனாவுக்கு அம்மா என்பதெல்லாம் ஓவர். மற்ற கதாபாத்திரங்களும் தனக்கு கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளனர். ஆனாலும் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் காமெடி சரவெடியாக இருந்திருக்கும். ஏகப்பட்ட காமெடி நடிகர்கள் இருந்தும் சில இடங்களில் காமெடியை காணவில்லை. அஸ்வின் விநாயகமூர்த்தியின் இசையில் ஜெகன் கவிராஜ் எழுதிய போலீஸ்காரனை கட்டிக்கிட்டா என்ற பாடல் ஆட்டம் போட வைக்கிறது. ஒரு கதாபாத்திரத்தில் நடித்தும் உள்ளார் ஜெகன் கவிராஜ்.
வழக்கமான கதை, அதைவிட வழக்கொழிந்துபோன திரைக்கதை என்றாலும் இரண்டு மணி நேரம் ஜாலியாக சிரித்துவிட்டு வரலாம். மொத்தத்தில் ஜாலியோ ஜிம்கானா – காமெடி கஜானா. ரேட்டிங் 3/5