காடுகளை அழித்து வீடுகளாக்கும் கார்ப்பரேட் கம்பெனி. அதற்கு துணைபோகும் அமைச்சர். காடுகளையும் காட்டு விலங்குகளையும் பாதுகாக்கும் ஒருவன். இவர்களுக்குள் நடக்கும் சண்டையில் வென்றவர் யார் என்பதே காடன்.
காடுகள் ஒன்றும் நேற்று உருவானவை அல்ல. காட்டு விலங்குகளிலேயே வலிமையானதும் பெரியதுமான யானைகள் இல்லாமல் காடுகள் இல்லை. ஒரு காடு உருவாக யானைகளின் பங்கு என்ன என்பதை தற்போது இந்த சமூகத்திற்கு தேவையான ஒன்றை எந்தவித சமரசமும் இன்றி சொல்லியுள்ளார் இயக்குனர் பிரபு சாலமன். “யானைகளின் வீட்டிற்குள் புகுந்து மனிதர்கள் அட்டகாசம்” இந்த வரிதான் படத்தின் மொத்த கதையும். அதற்கு துணை நின்று இயக்குனருடன் இணைந்து உழைத்து இருக்கிறார்கள் நடிகர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும்.
காடனாக ராணா. முதல் நேரடி தமிழ்ப்படம் என்றாலும் கதாபாத்திரத்தை உணர்ந்து அவரது உயரத்தை போலவே உயர்ந்து நிற்கிறார். தனது தாத்தா அரசுக்கு கொடுத்த நிலத்தை கார்ப்பரேட் கம்பெனி அபகரிக்கநினைப்பதை தடுக்க முடியாமல் சட்டத்தின்முன் அவமானப்படுத்தப்பட்டு துன்புறுத்தப்படும்போது அழுவது என சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார்.
விஷ்ணு விஷால் கும்பி யானையுடன் பாகனாக வருகிறார். சிறிது நேரமே என்றாலும் சுவாரஸ்யம். பிரபு சாலமன் படம் என்றாலே மலைகள் காடுகள் அவ்வளவு அழகாக தெரியும். இதிலும் ஒளிப்பதிவாளர் அசோக்குமார் காட்சிகளின் ரம்மியத்தை கண்முன்னே கொண்டுவந்துள்ளார். யானைகளின் வழித்தடத்தை மறித்தால் அவைகள் ஊருக்குள் வரத்தான் செய்யும். அது யானைகளின் தவறல்ல மனிதனின் சுயநலம் என்பதை உணர்த்தியுள்ளார். உண்மைச்சம்பவத்தை தழுவி சமூகத்திற்கு தேவையான கருத்தை அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.
இயக்குனர் பிரபு சாலமனின் இயக்கத்தில் கும்கி மைனா வரிசையில் காடன் மிக சிறந்த படைப்பு என்று சொன்னால் மிகையாகது. இவருக்கும் காட்டுக்கும் ராசி போல மிக சிறப்பான ஒரு படத்தை கொடுத்துள்ளார். ஏற்கனவே பார்த்த கதை என்றாலும் சிறந்த திரைகதை மூலம் நம்மை கவர்ந்து இருக்கிறார்.
படத்துக்கு மேலும் பலம் ஒளிப்பதிவாளர் அசோக் குமார் கதையின் தன்மை அறிந்து காட்சிகளை கண் முன் ஓவியம்போல நிறுத்தியுள்ளார்.
காடுகளில் பல சிரமங்கள் நடுவே எடுக்கபட்ட படம் உண்மையான உழைப்புக்கு மிக பெரிய வெற்றி என்று தான் சொல்லணும் .
காடன் – காடுகளின் காவலன்.