
கன்னட சலுவாலி வாட்டாள் பக்ஷா கட்சித் தலைவர் வாட்டாள் நாகராஜ். இவர், காவிரி விவகாரத்தில் தொடர்ந்து தமிழகத்துக்கு எதிராக குரல்கொடுத்துவருபவர். மேலும், பிற கன்னட அமைப்புகளுடன் இணைந்து காவிரி நதிநீர்ப் பங்கீடு பிரச்னையில் அவ்வப்போது போராட்டங்களையும் நடத்திவருபவர்.
இந்நிலையில், பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படம், ஜூன் 7-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. ஆனால், கர்நாடகாவில் காலா படத்தை வெளியிடக் கூடாது என்றும், மீறி திரையிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என்றும் வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், `ரஜினி கன்னட மக்களுக்கு எதிராகத் தொடர்ந்து செயல்பட்டுவருகிறார். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மாநில அரசு ஏற்று செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அவரின் அரசியல் லாபத்துக்காகவே கன்னட மக்களுக்கு எதிராகக் குரல்கொடுத்துவருகிறார். இதனால், ரஜினியின் காலா படத்தை கர்நாடக மாநிலத்தில் திரையிடக் கூடாது. சத்யராஜ் போல ரஜினி மன்னிப்பு கேட்டாலும் காலா படத்தை திரையிட விடமாட்டோம்’ என்றார்.
