Friday, May 15
Shadow

கருப்பு – திரை விமர்சனம். (மாஸ், மிரட்டல், மாயம் கலந்த சூர்யாவின் அதிரடி ஆட்டம்!)

கருப்பு – மாஸ், மிரட்டல், மாயம் கலந்த சூர்யாவின் அதிரடி ஆட்டம்!

கடவுள் மனித உருவில் வந்து அநியாயத்திற்கு எதிராக போராடினால் எப்படி இருக்கும்? அந்த கேள்விக்கான வணிக ரீதியான பதில்தான் கருப்பு.

ஒரு நகரத்தின் நீதிமன்றம், காவல்துறை, அரசியல் என அனைத்தையும் பணத்தால் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு சக்திவாய்ந்த வக்கீல். அவனுக்கு எதிராக சாதாரண மனிதர்கள் போராட முடியாத சூழலில், “கருப்பு” என்ற சக்தி களமிறங்குகிறது. இதை முழுக்க முழுக்க மாஸ் ஆக்ஷன் மொழியில் சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர்.

படத்தின் பெரிய ஆச்சரியம் ஆர்.ஜே பாலாஜி. இதுவரை நகைச்சுவை, சமூக கருத்து என்று வந்தவர், இதில் முழுக்க நெகட்டிவ் ஷேடில் தோன்றுகிறார். ஆரம்பத்தில் அந்த தோற்றம் புதிதாகத் தோன்றினாலும், கதையோடு சேர சேர அவரது நடிப்பும் செட்டாகி விடுகிறது. குறிப்பாக நீதிமன்ற அரசியலை அவர் கையாளும் விதம் கவனம் பெறுகிறது.

ஆனால் படம் முழுவதையும் தன்னுடைய தோளில் சுமப்பவர் சூர்யாதான். முதல் பாதியில் குறைவாகத் தோன்றினாலும், திரையில் வந்த பிறகு ஒவ்வொரு காட்சியையும் தன்னுடைய ஸ்டைலால் ஆக்கிரமித்துவிடுகிறார். அமைதியான மனிதராக இருந்து, “கருப்பு” ஆக மாறும் தருணங்களில் சூர்யாவின் உடல் மொழி, கண் பார்வை, சண்டைக் காட்சிகளில் இருக்கும் ஆக்ரோஷம் எல்லாமே ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக மாறுகிறது.

திரிஷா வழக்கறிஞராக வந்து கதைக்கு மென்மையான பக்கம் சேர்க்கிறார். சூர்யாவுடன் அவருக்கான காட்சிகள் லைட்டாக நகர்ந்து, படத்தின் கனத்தை குறைக்க உதவுகின்றன. அவருக்குக் கொடுக்கப்பட்ட வேலை என்னவோ அதை அழகாகச் செய்து செல்கிறார்.

படத்தின் முதல் பாதி சென்ட்டிமென்ட், மோசடி, நீதிமன்ற அரசியல் என்று நகர்கிறது. இரண்டாம் பாதி முழுக்க ஆக்ஷன் உலகமாக மாறுகிறது. இடையே சில இடங்களில் கதை சற்று தேக்கம் அடைந்தாலும், கிளைமாக்ஸ் அந்த குறையை மறைக்கிறது. குறிப்பாக இறுதிக்கட்ட சண்டைக் காட்சிகள் மற்றும் அதன் பின்னணி உருவாக்கும் ஆன்மிக மாஸ் உணர்வு திரையரங்கில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

இசையமைப்பாளர் சாய் அபயங்கர் படத்திற்கு மிகப் பெரிய பலம். பின்னணி இசை பல காட்சிகளை அடுத்த கட்டத்திற்கு தூக்கிச் செல்கிறது. பாடல்கள் பெரிய தாக்கம் ஏற்படுத்தாவிட்டாலும், மாஸ் காட்சிகளில் இசை ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறது.

ஒளிப்பதிவு, எடிட்டிங், ஸ்டண்ட் காம்போ படத்தின் தொழில்நுட்ப தரத்தை உயர்த்தியிருக்கிறது. குறிப்பாக ஹைவே சேஸ், இண்டர்வெல் பிளாக், கிளைமாக்ஸ் சண்டைகள் அனைத்தும் திரையரங்க அனுபவத்துக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளன.

படத்தின் மிகப்பெரிய பலம் சூர்யாவின் திரைநிலை. அதே நேரத்தில் அதுவே ஒரு பலவீனமாகவும் மாறுகிறது. “கடவுள்” தன்மையுடன் வரும் நாயகனுக்கு பெரிய ஆபத்து ஏற்படும் என்ற பதட்டம் பார்வையாளர்களுக்கு உருவாகவில்லை. மேலும் வில்லனாக ஆர்.ஜே பாலாஜி மிரட்டலான தாக்கத்தை முழுமையாக ஏற்படுத்தவில்லை என்ற உணர்வும் சில இடங்களில் தோன்றுகிறது.

இருப்பினும், குடும்ப ரசிகர்கள், மாஸ் ரசிகர்கள், சூர்யா ரசிகர்கள் என அனைவரையும் திருப்திப்படுத்தும் வகையில் கருப்பு உருவாகியுள்ளது. குறிப்பாக பி & சி சென்டர் ரசிகர்களிடம் படம் நல்ல வரவேற்பைப் பெற வாய்ப்பு அதிகம்.

மொத்தத்தில், மாஸ், பக்தி, ஆக்ஷன், சென்ட்டிமென்ட் அனைத்தையும் கலக்க முயன்றுள்ள சூர்யாவின் வணிக விருந்து தான் ‘கருப்பு’.

 

Rank 3.5/5

– shankar