
பொங்கல் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் ‘கலைச் சங்கமம்’ – 38 மாவட்டங்களில் ஒரே நாளில் பாரம்பரிய கலை விழா!
தமிழ்நாடு அரசு 1955 ஆம் ஆண்டு தொடங்கிய தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம், இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் ஆகிய முத்தமிழ் கலைகளின் வளர்ச்சிக்காக செயல்பட்டு வருகிறது. 1973 ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் இந்த அமைப்பு “தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்” என பெயரிடப்பட்டது.
தமிழகத்தின் பண்பாட்டு இயக்ககத்தின் ஒரு அங்கமாக செயல்படும் இம்மன்றம், அரசு நிதியுதவியுடன் பாரம்பரிய கலைவடிவங்களை வளர்த்தல், கலைஞர்களை ஊக்குவித்தல், அழிந்து வரும் கலைகளை ஆவணப்படுத்தல், நாடகம் மற்றும் நாட்டிய நாடகங்களுக்கு புத்துயிர் அளித்தல், தமிழ்க் கலைகளை பிற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் கொண்டு செல்லுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், சிறந்த கலைஞர்களுக்கு விருதுகள் வழங்குவதோடு, நலிந்த நிலையில் உள்ள கலைஞர்களுக்கு மாதாந்திர நிதியுதவியும் வழங்கப்படுகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, தமிழர் திருநாளான பொங்கலை முன்னிட்டு “கலைச் சங்கமம்” என்ற கலை விழா தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் சிறப்பாக நடத்த ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 2026 ஜனவரி 18 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில், தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் தலைமையில், அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளும் வகையில் விழாக்கள் நடைபெறவுள்ளன. இவ்விழாக்களில் அந்தந்த மாவட்டங்களின் பாரம்பரிய கிராமியக் கலை நிகழ்ச்சிகள் இடம்பெறும்.

மேலும், சென்னை ராஜா அண்ணாமலைபுரம் முத்தமிழ்ப் பேரவையில் 22.01.2026 அன்று இயல் சங்கமமும், 25 மற்றும் 26.01.2026 ஆகிய தேதிகளில் கலைவாணர் அரங்கில் இசை மற்றும் நாட்டிய சங்கமமும் நடைபெறவுள்ளது. இந்த “கலைச் சங்கமம்” விழாக்களில் மாநிலம் முழுவதும் இருந்து 4,000-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.
மன்றத்தால் செயல்படுத்தப்படும் முக்கிய திட்டங்கள் வருமாறு:
நலிந்த நிலையில் உள்ள கலைஞர்களுக்கான மாதாந்திர நிதியுதவி ரூ.3,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
2025–26 ஆம் ஆண்டில் 2,500 கலைஞர்களுக்கு ஒரே நேரத்தில் நிதியுதவி வழங்க ரூ.9 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மன்றத்தின் ஆண்டு நிதி ஒதுக்கீடு ரூ.3 கோடியில் இருந்து ரூ.4 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு இசைக்கருவிகள் மற்றும் உடை அணிகலன்கள் வாங்க ரூ.10,000 வீதம் வழங்கப்படுகிறது.
கலைமாமணி விருது பெற்ற நலிந்த கலைஞர்களுக்கான பொற்கிழி ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
பாரதியார், எம்.எஸ். சுப்புலட்சுமி, பாலசரஸ்வதி பெயர்களில் அகில இந்திய அளவிலான சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டு, ரூ.1 லட்சம் பரிசுத் தொகையுடன் தங்கப் பதக்கம் வழங்கப்படுகிறது.
சிறந்த கலை நிறுவனங்கள் மற்றும் நாடகக் குழுக்களுக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகையுடன் விருதுகள் வழங்கப்படுகின்றன.
இளம் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
சிறந்த தமிழ் நாடகங்கள், நாட்டிய நாடகங்களை உருவாக்கும் குழுக்களுக்கு ரூ.2.50 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது.
கலை நூல்களை வெளியிடும் ஆசிரியர்களுக்கு ரூ.2 லட்சம் வரை உதவி வழங்கப்படுகிறது.
மறைந்த புகழ்பெற்ற கலைஞர்களின் குடும்பங்களுக்கு பராமரிப்பு நிதியுதவி வழங்கப்படுகிறது.
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வரலாற்று நாடக விழா, நாட்டிய விழா, கிராமியக் கலை விழா உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மாநில அளவில் மட்டுமல்ல, உலக அளவிலும் தமிழ்க் கலைகளை உயர்த்தி நிறுத்தும் முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.
இந்த தகவல்களை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவர் மற்றும் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத் தலைவர் திரு. வாசக இந்திரதைக்கர் அவர்களும், உறுப்பினர்-செயலாளர் திருமதி விஜயா தாயன்பன் அவர்களும் தெரிவித்துள்ளனர்.
