தமிழ் சினிமாவில் அத்திபூ பூப்பது போல எப்பாவது தான் சிறந்த கதையம்சம் கொண்ட படம் வரும் அப்படியான ஒரு முழுமையான படம் என்றால் அது கமலி ஃப்ரம் நடுக்காவேரி ஆமாங்க சிறந்த திரைகதை இயக்குனருக்கான முழு தகுதி சிறந்த நட்சத்திரங்கள் இப்படி சொல்லி கொண்டே போகலாம் அப்படி ஒரு தரமான படம் ஏன் நீண்ட நாட்களுக்கு பிறகு திரையரங்குகளில் சென்று பார்க்கக்கூடிய வகையில் ஒரு நல்ல தரமான படமாக வந்துள்ளது ராஜசேகர் துரைசாமி இயக்கியுள்ள கமலி ஃப்ரம் நடுக்காவேரி.
கமலி நடுக்காவேரி என்ற கிராமத்தில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். அவரது அப்பா பெண் குழந்தைக்கு படிப்பு எதற்கு 12ம் வகுப்பு முடித்ததும் எவனையாவது பிடித்து கல்யாணம் கட்டிவைத்துவிட்டால் தனது கடமை முடிந்தது என்று நினைப்பவர். அம்மாவும் அவ்வழியே. அந்த ஊரில் ஓய்வுபெற்ற பேராசிரியர் நம்பி. வரலாற்று ஆசிரியர் சுப்பிரமணி. தனது தோழி வள்ளி மற்றும் ஊர் இதுதான் கமலியின் வாழ்க்கை.
ஒருநாள் டிவியில் சிபிஎஸ்இ படிப்பில் முதலிடம் பெற்ற அஸ்வின் பேட்டி அளித்துவருவதை கமலி குடும்பத்துடன் பார்க்கிறார். அஸ்வினை பார்த்தவுடனே அவன் மீது கமலிக்கு காதல் வருகிறது. அவனோ சென்னை ஐஐடியில் சேர்ந்து படிக்கப்போவதாக கூறுகிறான். இதை கேட்ட கமலியோ தானும் ஐஐடியில் சேர வேண்டும் என்று நினைக்கிறார். கமலி ஐஐடியில் சேர்ந்தாரா? அஸ்வினுடனான காதல் என்ன ஆனது என்பதுதான் கமலி ஃப்ரம் நடுக்காவேரியின் கதை. இயக்குனர் நினைத்தால் இந்த கதையை கமர்ஷியல் படமாக கொண்டு சென்றுஇருக்க முடியும். ஆனால் அப்படி செய்யாமல் ஒரு பெண்ணின் பார்வையில் பெண்களின் கல்வியை மையப்படுத்தி எடுத்ததற்காகவே இயக்குனருக்கு வாழ்த்துகள்.
கமலியாக நடித்துள்ள ஆனந்தி பிரமாதப்படுத்தியுள்ளார். இவரை தவிர இக்கதையில் வேறுயாரையும் யோசித்துப்பார்க்க முடியவில்லை. ஒவ்வொரு ரியாக்ஷன்களிலும் கதையை உணர்ந்து கச்சிதமாக நடித்துள்ளார். பேராசிரியர் நம்பியாக பிரதாப் போத்தனின் நடிப்பு அபாரம். அதே போல் அப்பாவாக வரும் அழகம் பெருமாள், அம்மா ரேகா, பாட்டி, அண்ணன், தோழி வள்ளியாக வரும் நக்கலைட்ஸ் ஶ்ரீஜா என எல்லோருமே கதையை உணர்ந்து தங்களது பங்களிப்பை சிறப்பாக வழங்கியுள்ளனர். ஐஐடியை மையமாக வைத்து இதற்கு முன் இப்படி ஒரு படம் வந்ததா என்று தெரியவில்லை. அவ்வளவு அழகாக எடுத்துள்ளார். தொடக்கத்தில் காதல் தான் பிரதானமாக தெரிந்தாலும் இடைவேளைக்கு பிறகான காட்சிகளில் படம் எதை நோக்கி போகிறது என்பதை உணர முடிகிறது. காதலை விட கல்விதான் ஒரு பெண்ணிற்கு பலம், பாதுகாப்பு, பெருமை என்பதை அழுத்தமாக சொல்லியுள்ளார்.
சாதாரண கிராமத்தில் இருந்து ஐஐடி வரை ஒரு அரசுப்பள்ளி மாணவியால் சென்று சாதிக்க முடியும் என்பதை சொல்லியுள்ளனர். படத்தின் பின்னணி இசையை இசை அமைப்பாளர் தீனதயாளன் அருமையாக வழங்கியுள்ளார். ஜெகதீசனின் ஒளிப்பதிவு நன்றாக உள்ளது. அதேபோல் எடிட்டர் கோவிந்தராஜ் அருமை. இயக்குனரின் திரை மொழி அற்புதமாக தெரிகிறது. அந்த கப் காட்சியாகட்டும் இறுதி க்விஸ் போட்டியாகட்டும் நன்றாக செய்துள்ளார். கரோனா காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தற்போதுதான் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இந்த நேரத்தில் இந்த படம் மாணவர்களுக்கு சிறந்த முன்உதாரணமாக அமையும் அனைத்து மாணவ மாணவியரும் இப்படத்தை கட்டாயம் பார்க்க வேண்டும். சாதிக்க நினைத்தால் எதுவுமே தடையில்லை முயற்சி இருந்தால் போதும் என்கிறார் இந்த கமலி.