Thursday, January 21
Shadow

கருப்பங்காட்டு வலசு – திரைவிமர்சனம்!

புதுமுக இயக்குனர் செல்வேந்திரன் இயக்கத்தில் புதுமுக நடிகர்கள் நடித்து வெளியாகி உள்ள கருப்பங்காட்டு வலசு திரைப்படம் இதுநாள் வரை மூடப்பட்டிருந்த திரையரங்கிற்கு ரசிகர்களை நம்பிக்கையுடன் வரவழைக்கும் என்பதில் ஐய்யமில்லை.

கருப்பங்காட்டு வலசு என்ற பதினைந்து வருடம் பின்தங்கிய ஊரில் வாழ்ந்து வருகிறார் நாட்டுப்புற கலைஞரான பச்சைக்கிளி. அவரது அக்கா மகள்தான் மல்லி. அந்த ஊரில் அதிகம் படித்தவர் ஊர் நாட்டாமையின் மகளான காந்திமதி. திருமணம் ஆகி வெளிநாட்டில் இருந்த அவர் கணவரை விவாகரத்து செய்துவிட்டு தனது தந்தையின் ஊரில் மனநிம்மதிக்காக வாழ்ந்து வருகிறார். மேலும் தனது ஊர் மக்களுக்கு எதாவது செய்ய வேண்டும் என்று கழிவறை கட்டுவது, ஊரில் திருட்டு பயம் இருப்பதால் ஊரை சுற்றிலும் கண்காணிப்பு கேமரா அமைப்பது, அந்த ஊர் குழந்தைகளுக்கு ஆங்கிலம் சொல்லி தருவது போன்ற நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார். அதற்கு ஊரின் ஒரு பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்தாலும் தனது கடமையை செவ்வனே செய்து வருகிறார். அதே ஊரில் தனது தந்தை இறந்ததால் அவரது ரயில்வேயில் வேலை கிடைத்து பணியாற்றி வருகிறார் புகைவண்டி வேலன். இப்படி ஒரு கிராமத்திற்கே உண்டான சகல அம்சங்களுடன் இருக்கும் கருப்பங்காட்டுவலசில் திருவிழா நடக்கிறது. திருவிழா முடிந்த நாளில் அடுத்தடுத்து நான்கு பேர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடக்கின்றனர். அவர்கள் எப்படி உயிரிழந்தனர் கொலையாளி யார் என்பதை பல்வேறு முடிச்சுகளுடன் இயக்கியுள்ளார் இயக்குனர் செல்வேந்திரன்.

நீலிமாராணி, ஜார்ஜ் தவிர அனைவருமே புதுமுகங்கள். ஆனால் புதுமுகம் என்பது தெரியாதபடி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். பச்சைக்கிளியாக நடித்துள்ள எபினேசர் தேவராஜ் அவரது அக்கா மகள் மல்லியாக நடித்த ஆரியா ஆகியோரின் நடிப்பும் கதாபாத்திரமும் அருமையாக உள்ளது. மற்ற அனைவரும் திரைக்கதையின் ஓட்டத்திற்கு உதவி உள்ளனர்.

காவல்துறை ஆய்வாளராக வரும் ஜார்ஜ் இடைவேளைக்குப்பின் திரைக்கதையின் விறுவிறுப்பிற்கு உதவி இருக்கிறார். இரட்டைமலையாக நடித்த கௌரிசங்கர், புகைவண்டி வேலனாக நடித்த ஜிதேஷ் டோணி, நொண்டி கருப்பனாக மாரி செல்லதுரை அனைவருமே தனது சிறப்பான பங்களிப்பை நல்கியுள்ளனர்.

ஆதித்யா-சூர்யாவின் இசையில் பாடல்கள் நன்றாக இருந்து. பின்னணி இசையும் தேவையான இடங்களில் பலம் சேர்த்துள்ளது. ஷ்ரவன் சரவணனின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தளித்துள்ளது. ஒவ்வொரு சம்பவத்தையும் அடுத்தடுத்த சம்பவங்களுடன் கோர்த்த விதம் இயக்குநரின் திரைக்கதை திறமைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.

படத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம். சில விஷயங்களில் பார்வையாளர்களை குழப்பியுள்ளார். முதல் பாதியை விட அந்த நான்கு பேரின் மரணத்திற்கு பின் இரண்டாம் பாதியில் விறுவிறுப்பை கூட்டியுள்ளார் இயக்குனர்.

ஒருகிராமத்து கதையை சஸ்பென்ஸ் திரில்லராக எடுத்து அதில் சமூக அக்கறை, ஆணவ கொலை உள்ளிட்டவற்றை இணைத்து ஒரு நல்ல படத்தை தனது முதல் படமாக தந்துள்ளார் இயக்குனர் செல்வேந்திரன். கரோனா காரணமாக பாதி தியேட்டர்கள் மூடியுள்ள நிலையில் இந்த கருப்பங்காட்டு வலசு மூடிய தியேட்டர்களை திறக்க உதவும் என்று நம்பலாம்.

CLOSE
CLOSE