Sunday, September 21
Shadow

குஷி 2 தளபதி விஜய் மகன் நடிக்க வேண்டும் எஸ் ஜே சூர்யா இயக்க வேண்டும் நடக்குமா?

குஷி 25வது ஆண்டு மறுவெளியீடு – பத்திரிகையாளர் சந்திப்பு சிறப்பம்சங்கள்

ஏ. எம். ரத்னம் தயாரிப்பில், எஸ். ஜே. சூர்யா இயக்கத்தில், தளபதி விஜய் – ஜோதிகா நடித்த ‘குஷி’ திரைப்படம் 2000-ஆம் ஆண்டு வெளியானது. மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்த படம், 25 ஆண்டுகள் கழித்து வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது. சக்தி பிலிம் ஃபேக்டரி விநியோகம் செய்கிறது. இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

தயாரிப்பாளர் ஏ. எம். ரத்னம்

> “25 ஆண்டுகளுக்குப் பிறகு ‘குஷி’ மீண்டும் ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்யும் என்று நம்புகிறேன்.
வாலி படத்தின் பிறகு, சூர்யாவை இயக்குநராக தேர்வு செய்ய வேண்டும் என எண்ணினேன். நடிகர் யாராக இருந்தாலும் பரவாயில்லை, நல்ல இயக்குநர் முக்கியம் என்று கருதினேன். அதன்பிறகு கதை விஜய் சாரிடம் கூறினோம். தமிழ், தெலுங்கு, ஹிந்தி – மூன்று மொழிகளிலும் சூர்யா இயக்கினார்.
ஜோதிகா, பூமிகா இருவரும் சூர்யாவின் கண்ணோட்டத்தில் மிக அழகாக வெளிப்பட்டார்கள். பூமிகா நடிப்பாரா என்ற சந்தேகத்திற்கே, ‘சூர்யா வேலை வாங்கிவிடுவார்’ என நம்பிக்கை தெரிவித்தேன்.

இப்படத்தின் பெயரை ஆரம்பத்தில் ‘டாப் ஆங்கிள் லவ் ஸ்டோரி’ என வைத்திருந்தேன். கல்கத்தாவில் பிறக்கும் பையனும், இங்குள்ள பெண்ணும் எப்படி சந்திக்கிறார்கள் என்பதை சுவாரஸ்யமாக சூர்யா சொன்னார். அந்தக் காலத்தில் விஜய் டாப் ஹீரோ. சண்டைக் காட்சிகள் வேண்டுமென்று அவர் கூறினாலும், இது லவ் ஸ்டோரி என்பதால் சூர்யா மறுத்தார். கடைசியில் ஒரு சண்டைக் காட்சி மட்டும் சேர்க்கப்பட்டது.

படத்தின் முன்னோட்டம் பார்த்தபோது, இந்தியன் போன்ற மாஸ் படம் அல்லாததால் பயந்தேன். ஆனால் முதல் காட்சிக்குப் பிறகே ரசிகர்கள் கதையோடு இணைந்து கொண்டார்கள். அப்போதே படம் ஹிட் என உறுதியாகிவிட்டது.

இப்போது இருக்கும் புதிய தலைமுறை ரசிகர்கள் ‘குஷி’யை திரையரங்கில் பார்த்திருப்பதில்லை. எனவே, இந்த மறுவெளியீட்டை அவர்கள் சிறப்பாக அனுபவிப்பார்கள்.

இப்போது தொடர்ச்சிப் படங்கள் டிரெண்டாக உள்ளன. ‘குஷி – 2’ எடுக்கப்பட்டால் நன்றாக இருக்கும். அதை நிச்சயம் சூர்யா இயக்க வேண்டும். விஜய் சார் நடித்தாலும், அவர் மகன் நடித்தாலும் அல்லது வேறு யார் நடித்தாலும் சரி, இயக்கம் சூர்யாவே என்று நான் நம்புகிறேன்.”

விநியோகஸ்தர் சக்திவேலன்

> “இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில், நீங்கள் அனைவரும் டிரைலரை ரசித்து பார்த்தது எனக்கு புதுமையாக இருந்தது. குறிப்பாக ‘கட்டிபுடி’ பாடலுக்கு ஒன்ஸ்மோர் கேட்டது மிகச் சிறப்பு.

எஸ். ஜே. சூர்யா சார் மீண்டும் எப்போது இயக்குவீர்கள் என்று கேட்டபோது, ‘நிச்சயம் இறங்கி அடிப்பேன்’ என்று அவரின் பாணியில் பதில் சொன்னார். அதற்கான முன்னோட்டமாகவே இந்த மறுவெளியீடு அமையும் என நம்புகிறேன்.

‘கில்லி’ படம் மறுவெளியீட்டில் இந்தியா முழுவதும் மாபெரும் வெற்றி பெற்றது. அதுபோல் ‘குஷி’க்கும் அதே அளவு வரவேற்பு கிடைக்கும். பெண்களுக்கான பிரத்யேக காட்சிகள் கூட ஏற்பாடு செய்ய ஆலோசித்து வருகிறோம்.

‘பாப்பு’ என்ற வார்த்தை தமிழ்நாட்டின் பல வீடுகளில் பெண் குழந்தைகளுக்கு செல்லப்பெயராக பயன்படுத்தப்படுகிறது. அந்த வார்த்தை கூட ரசிகர்களின் மனதில் இணக்கமாக அமைந்துள்ளது.

‘குஷி’ படம் மறுவெளியீடு அறிவிக்கப்பட்டவுடனே, 50 நாட்கள், 100 நாட்கள் ஓடிய தகவல்களை ரசிகர்கள் அனுப்பி மகிழ்ந்தனர். எனவே, இப்படம் பல கோடி வசூலிக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.”

இயக்குனர் – நடிகர் எஸ். ஜே. சூர்யா

> “பத்திரிகையாளர்கள் இவ்வளவு உற்சாகமாக கொண்டாடினால், ரசிகர்கள் திரையரங்கில் எப்படி கொண்டாடுவார்கள் என்று சிந்திக்கவே வியப்பாக இருக்கிறது. விஜய் சார், ஜோதிகா மேடம் இருவரும் இந்த படத்தில் மிக அழகாக இருந்தார்கள்.

 

ஒரு படத்தின் கதை சொல்லும்போதே 2.30 மணி நேரம் எடுத்துக் கொள்வேன். படப்பிடிப்பு, டப்பிங், எடிட்டிங், இசை சேர்த்தல், முன்னோட்டம் – ஒவ்வொரு கட்டத்திலும் ஏராளமான முறை பார்த்துவிடுவேன். ஆனாலும், பார்வையாளர்களுடன் திரையரங்கில் பார்க்கும் அனுபவம் எப்போதும் தனித்துவமானது. இன்றும் அதே உணர்ச்சி ஏற்பட்டது.

‘கட்டிபுடி’ பாடலுக்கு மெட்டாக, ‘செந்தமிழ் தேன் மொழியாள்’ பாட்டின் ராகத்தை அடிப்படையாகக் கொடுக்கச் சொன்னேன். அதுபோல ‘மொட்டு ஒன்று மலர்ந்திடும்’ பாடலுக்கு தேவா சார் அற்புதமாக இசையமைத்தார்.

விஜய் சார் கதை கேட்டபோது, ‘பிடிக்கவில்லை என்றால் வேறு கதை சொல்கிறேன்’ என்றேன். அதற்கு அவர், ‘இது ரொம்ப நன்றாக இருக்கிறது’ என்று உடனே ஒப்புக்கொண்டார்.

ஒளிப்பதிவு செய்த ஜீவா சார் இன்று இல்லை என்பதால் அவரை நினைவு கூர்கிறேன்.
விவேக் சார் நடித்த பாத்திரம் கதையை அழகாக முன்னேற்றியது.
சினிமாவில் என்னை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றவர் தயாரிப்பாளர் ஏ. எம். ரத்னம் சார் தான். நான் ஆரம்பத்தில் நடிகனாக வரவேண்டுமென்றுதான் ஆசைப்பட்டேன். ஆனால், இயக்கத்துடன் ஆரம்பித்து பின்னர் நடிப்பில் சென்றேன்.

‘வாலி’ படத்தில் உதவி இயக்குநராக இருந்த ஆண்டரியோ இன்று வந்ததில் மகிழ்ச்சி. சக்தி சார் ரசிகராகவே மாறியிருப்பதையும் கண்டு பெருமையாக இருக்கிறது.”