Tuesday, April 21
Shadow

நகைச்சுவை, குணச்சித்திர நடிப்பில் கொடிகட்டிப் பறந்த கே.ஏ.தங்கவேலு காலமான தினமின்று

‘கலைவாணர்’ என். எஸ். கிருஷ்ணன் நாடகக் குழுவில் பட்டை தீட்டப்பட்டவரான கே. ஏ. தங்கவேலு ஒரு காலத்தில் நகைச்சுவை நடிப்பிலும் குணச்சித்திர நடிப்பிலும் கொடிகட்டிப் பறந்தார். தங்கவேலுவின் சொந்த ஊர் காரைக்கால். 10 வயதிலேயே நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார்.
யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை நாடகக் குழுவில் நடிக்கத் தொடங்கி, பல நாடகக் கம்பெனிகளில் நடித்த பின்பு என். எஸ். கிருஷ்ணனின் நாடகக் குழுவில் நடித்தார். இவர் நடித்த முதல் படம் எம்.ஜி.ஆர் நடித்த ‘சதி லீலாவதி’. அடுத்து என். எஸ். கிருஷ்ணனின் ‘பணம்’ என்ற படத்தில் நடித்து புகழ் பெற்றார்.

“சிங்காரி” என்ற படத்தில் டணால்… டணால்… என்று அடிக்கடி கூறி நடித்ததால் டணால் தங்கவேலு என்று அழைக்கப்பட்டார். எம். கே. தியாகராஜ பாகவதர் நடித்த ‘அமரகவி’யிலும் நகைச்சுவை விருந்தளித்தார்.

எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் நடித்த பல படங்களில் நடித்தவர். ‘சக்கரவர்த்தி திருமகள்’, ‘உத்தம புத்திரன்’, ‘குலேபகாவலி’ ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’, ‘கற்புக்கரசி’, ‘மங்கையர் திலகம்’, ‘அமரதீபம்’, ‘கல்யாணப் பரிசு’, ‘எங்க வீட்டுப்பிள்ளை’ உட்பட 800 படங்களுக்கு அதிகமான படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக ‘கல்யாணப் பரிசு’ படத்தில் பொய் சொல்லும் டூப் மாஸ்டராக தோன்றி ரசிகர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைத்தார்.

சொந்த நாடகக் குழுவின் மூலம் ‘மனைவியின் மாங்கல்யம்’, ‘விமலா’, ‘பம்பாய் மெயில்’, ‘லட்சுமிகாந்தன்’ உட்பட பல நாடகங்களில் நடித்தார். இவர் கடைசியாக நடித்த நாடகம் கோவை ஒண்டிப்புதூரில் நடைபெற்ற ‘சத்தசுவரங்கள்’ என்ற நாடகம்.

தங்கவேலு சென்னை தியாகராயநகரில் உள்ள ராஜாபாதர் தெருவில் வசித்து வந்தார். 27.9.1994 அன்று இரவு 8 மணி வரை குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்து விட்டு படுக்கைக்குச் சென்றார். நள்ளிரவு 2 மணிக்கு எழுந்து சிறிது நேரம் விழித்திருந்து விட்டு மீண்டும் உறங்கச் சென்றார்.அதிகாலையில் (28ம் திகதி) 6 மணியளவில் தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்தது. மரணம் அடைந்த போது அவருக்கு வயது 77