
1966ஆம் ஆண்டு ஆக்ரி கத் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமான ராஜேஷ் கன்னா 1969ஆம் ஆண்டு வெளியான ஆராதனா திரைப்படம் மூலம் பிரபலமானார். இதுவரை 163 இந்தித் திரைப்படங்களில் நடித்துள்ளார்; இவற்றில் 22 திரைப்படங்களில் இரண்டு நாயகர்களி்ல் ஒருவராக நடித்துள்ளார். மூன்று முறை பிலிம்பேர் விருதுகள் வென்றுள்ள இவரது பெயர் பதினான்கு முறை இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பிலிம்பேர் வாழ்நாள் சாதனை விருது இவருக்கு 2005இல் வழங்கப்பட்டது. மிகக் குறுகிய காலத்தில் வெற்றிப்படங்களை அடுத்தடுத்து கொடுத்து புகழேணியின் உச்சக்கட்டத்திற்கு சென்ற இவரே இந்தித் திரைப்படத்துறையின் முதல் சூப்பர் ஸ்டார் என அறியப்படுகிறார். இவரது குறிப்பிடத்தக்க திரைப்படங்களாக ஆராதனா, அமர்பிரேம், ஆனந்த், கத்தி பதங், ராஸ், பகாரோங் கே சப்னே, இத்தெஃபாக், சச்சா ஜூதா, ராஜா ராணி, பவார்ச்சி ஆகியன அமைந்தன.

ராஜேஷ் கன்னா இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பில் 1992இல் நடந்த இடைத்தேர்தலில் புது தில்லி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து 1996ஆம் ஆண்டு பொதுத்தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிட்டு தக்க வைத்துக் கொண்டார்.[8] தொடர்ந்து தனது இறுதிக்காலம்வரை காங்கிரசின் அரசியல் செயல்பாட்டில் பங்கெடுத்து வந்தார்.
