Tuesday, November 4
Shadow

காலத்தால் அழியாத கவிஞன் கவிஞர் வாலி மறைந்த தின பதிவு

கவிஞர் வாலி அவர்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற ஒரு ‘கவிஞர்’, ‘பாடலாசிரியர்’ மற்றும் ‘சிறந்த ஓவியரும்’ ஆவார். கருத்தாழமிக்க எளியத் தமிழ் சொற்களைப் பாடல்களில் அமைத்து, எல்லோருக்கும் எளிதாகப் புரியும் வகையில் தன் மனதில் பட்டதைக், கவிதை நயத்துடன் வெளிப்படுத்தும் அற்புதக் கவிஞர். தத்துவப் பாடல்களாக இருந்தாலும் சரி, விழிப்புணர்ச்சிப் பாடல்களாக இருந்தாலும் சரி, கவித்துவமானப் பாடல்களாக இருந்தாலும் சரி, காட்சிக்கேற்ப பாடல் வரிகளை எழுதி, தமிழ் திரையுலகில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர். எதுகை மோனையுடன் பாடல் வரிகளை எழுதுவதில் இவரை வெல்ல எவரும் இல்லையென்றே கூறலாம். சுமார் பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்டத் திரைப்படப்பாடல்களை எழுதியுள்ள இவர், ‘பொய்கால் குதிரை’, ‘சத்யா’, ‘பார்த்தாலே பரவசம்’, ‘ஹே ராம்’ போன்ற திரைப்படங்களில் நடித்தும் உள்ளார். இவர் எழுதிய ‘பாண்டவர் பூமி’, ‘கிருஷ்ணா விஜயம்’ போன்ற கவிதைத்தொகுப்புகள் புகழ்பெற்ற படைப்புகளாகப் போற்றப்படுகின்றன. ஸ்ரீரங்கத்தில் பிறந்து, எழுத்துலகில் தனக்கென்று தனி முத்திரையைப் பதித்த கவிஞர் வாலி.

‘டி. எஸ் ரங்கராஜன்’ என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர் வாலி அவர்கள், 1931 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29 ஆம் நாள், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சி மாவட்டதிலுள்ள “ஸ்ரீரங்கம்” என்ற இடத்தில் ‘ஸ்ரீனிவாசன் ஐயங்காருக்கும்’, ‘பொன்னம்மாள்’ என்பவருக்கும் மகனாகப் பிறந்தார். இவர்களுடைய சொந்த ஊர் திருச்சிக்கு அருகிலுள்ள திருப்பராய்த்துறை ஆகும்.

‘தரைமேல் பிறக்க வைத்தார்’, ‘ஆண்டவனே உன் பாதங்களில்’, ‘தொட்டால் பூ மலரும்’, ‘மல்லிகை என் மன்னன் மயங்கும்’, ‘கொடுத்ததெல்லாம் கொடுத்தார்’, ‘கண்போன போக்கிலே கால் போகலாமா’, ‘எனக்கொரு மகன் பிறப்பான்’, ‘காத்திருந்த கண்களே’, ‘மாலையில் சந்தித்தேன்’, ‘நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்’, ‘ஆடலுடன் பாடலைக் கேட்டு’, ‘குங்குமப் பொட்டின் மங்களம்’, ‘துள்ளுவதோ இளமை’, ‘சிரித்து வாழவேண்டும்’ என இதுபோல் இன்னும் எத்தனையோ பாடல்கள் என சொல்லிக்கொண்டே போகலாம்.

‘சந்தரகாந்த்’, ‘இதயத்தில் நீ’, ‘எதையும் தாங்கும் இதயம்’, ‘படகோட்டி’, ‘எங்க வீட்டு பிள்ளை’, ‘அன்பே வா’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘மோட்டார் சுந்தரம்’, ‘காவல்காரன்’, ‘ஒலி விளக்கு’, ‘குடியிருந்த கோயில்’, ‘அடிமைப்பெண்’, ‘இருகோடுகள்’, ‘எங்கள் தங்கம்’, ‘குமரிக்கோட்டம்’, ‘நீரும் நெருப்பும்’, ‘உலகம் சுற்றும் வாலிபன்’, ‘பாரத விலாஸ்’, ‘நேற்று இன்று நாளை’, ‘நினைத்ததை முடிப்பவன்’, ‘அன்னை ஒரு ஆலயம்’, ‘அன்புக்கு நான் அடிமை’, ‘மூன்று முகம்’, ‘தூறல் நின்னுப் போச்சு’, ‘வாழ்வே மாயம்’, ‘எங்கேயோ கேட்டக் குரல்’, ‘அடுத்த வாரிசு’, ‘தங்க மகன்’, ‘பாயும் புலி’, ‘தாய் வீடு’, ‘விதி’, ‘அன்புள்ள ரஜினிகாந்த்’, ‘நல்லவனுக்கு நல்லவன்’, ‘மங்கம்மா சபதம்’, ‘படிக்காதவன்’, ‘நான் சிவப்பு மனிதன்’, ‘மௌன ராகம்’, ‘ஊர்காவலன்’, ‘குரு சிஷ்யன்’, ‘தர்மத்தின் தலைவன்’, ‘ராஜநடை’, ‘வருஷம் 16’, ‘சிவா, நடிகன்’, ‘அஞ்சலி’, ‘கிழக்கு வாசல்’, ‘இதயம்’, ‘சின்னத் தம்பி’, ‘நாடோடி பாட்டுக்காரன்’, ‘தேவர் மகன்’, ‘உழைப்பாளி’, ‘எஜமான்’, ‘காதலன்’, ‘ராஜாவின் பார்வையிலே’, ‘இந்தியன்’, ‘காதலர் தினம்’, ‘ஹே ராம்’, ‘பிரியமானவளே’, ‘மின்னலே’, ‘மௌனம் பேசியதே’, ‘கஜினி’, ‘சந்திரமுகி’, ‘வல்லவன்’, ‘சிவாஜி’, ‘சென்னை 600028’, ‘தசாவதாரம்’, ‘நாடோடிகள்’, ‘நான் கடவுள்’, ‘ஆதவன்’, ‘கோவா’, ‘அயன்’, ‘மங்காத்தா’, ‘எதிர்நீச்சல்’ போன்ற எண்ணற்ற திரைப்படங்களுக்குப் பாடல் எழுதியுள்ளார்.

திரைப்படங்களுக்கு பாடல் எழுத வயது ஒரு தடை இல்லை என்பதை நிருபித்து, எழுத்துலகில் ‘மார்கண்டேயக் கவிஞர்’ என அனைவராலும் புகழப்படும் கவிஞர் வாலி அவர்கள், தன்னுடைய பாடல் வரிகளால் கவிஞர்களை மட்டுமல்லாமல், பாமர மக்களையும் தலையசைக்க வைத்திருக்கிறார் என்றே சொல்லவேண்டும். இன்னும் சொல்லப்போனால், இன்றைய திரைப்படப் பாடலாசிரியர்கள் இவர் நடையைப் பின்பற்றியே பாட்டெழுதி கொண்டிருக்கின்றனர். ‘கவிப்பேரரசு கண்ணதாசனுக்கு’ பிறகு திரையுலகம் பரிணாம வளர்ச்சியைப் பெற்றது இவரின் காலங்களில்தான் என்பதை யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ இயலாது.