Monday, May 13
Shadow

மார்கழி திங்கள் திரை விமர்சனம்! (Rank 3.5/5)

மார்கழி திங்கள்  – திரைவிமர்சனம்!

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா இயக்குனராக அறிமுகமாகியுள்ள படம் மார்கழி திங்கள். இப்படத்தில் பாரதிராஜா ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் சுசீந்திரன் கதை திரைக்கதை வசனம் எழுதி ஒரு முக்கிய வேடத்திலும் நடித்துள்ளார்.

படத்தின் கதை என்ன என்றால் படத்தின் நாயகி ரக்ஷனா அம்மா அப்பாவை இழந்து சிறுவயது முதலே தாத்தா பாரதிராஜாவின் வளர்ப்பில் வாழ்ந்து வருகிறார். இவரது மாமா சுசீந்திரன் மோசமானவன். இவருக்கு ஒரு தோழி இருக்கிறார். பள்ளியில் எப்போதுமே முதல் மார்க் வாங்கும் நாயகி,அவர் வகுப்பில் நாயகன் ஷ்யாம் செல்வன் வந்ததும் அவர்தான் எப்போதும் முதல் மதிப்பெண் வாங்குகிறார். இதன்‌ நாயகன் மீது கோவம் கொள்ளும் நாயகி பின்னர்‌அதுவே காதலாக மாறுகிறது. இதனை நாயகி தனது தாத்தாவிடம் சொல்ல அவர் நேராக நாயகனின் வீட்டிற்கு சென்று பேச இருவரும் கல்லூரி படிப்பை முடியுங்கள் நாங்களே சேர்ந்து உங்கள் திருமணத்தை நடத்தி வைக்கிறோம் ஆனால் அதுவரை நீங்கள் பேசிக்கொள்ள கூடாது என்று நிபந்தனை விதிக்கிறார். இருவரும் கல்லூரி படிப்பை வேறு வேறு ஊரில் படிக்கின்றனர். படிப்பு முடித்துவிட்டு ஊருக்கு வரும் நாயகிக்கு அதிர்ச்சி அங்கு நாயகனின் குடும்பம் இல்லை. நாயகனுக்கு என்ன ஆனது? இவர்களது காதல் கைகூடியதா? என்பதே மார்கழி திங்கள்.

இயக்குனராக மனோஜ் பாரதிராஜா நல்ல கதையை தேர்வு செய்துள்ளார். ஆனால் இரண்டாம் பாதியில் நடக்கும் சம்பவங்களும் அதனை தொடர்ந்து நாயகி எடுக்கும் முடிவும் ஏற்றுக்கொள்ள முடியாதது. பார்த்து பழகியதாக இருக்கிறது. பாரதிராஜா இத்தனை வயதிலும் நன்றாக நடித்துள்ளார். சுசீந்திரன் தனது வசனத்தையே ஒப்பித்துவிட்டு செல்கிறார். நாயகியாக வரும் ரக்ஷனா நல்வரவு. அழகாகவும் இருக்கிறார் நன்றாகவும் நடிக்கிறார். நாயகன் ஷ்யாம் செல்வன் நடிப்பும் நன்று. தோழியாக வரும் நக்ஷா சரண் கதாபாத்திரம் குழப்பமாக எழுதப்பட்டுள்ளது.

அப்புக்குட்டி, ஜார்ஜ் விஜய் உள்ளிட்டோர் கதைக்கு உதவுகின்றனர். வாஞ்சிநாதன் முருகேசனின் ஒளிப்பதிவு பழனியின் அழகை கதைக்கு ஏற்றவாறு அப்படியே திரையில் கொண்டுவந்துள்ளது. இசையில் இளையராஜா சொல்லவா வேண்டும் அழகான பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் கவர்கிறார். சமீப காலமாக வெட்டு குத்து , துப்பாக்கி சத்தம் என நமது காதுகள் பஞ்சராகி போயிருந்த நிலையில் இளையராஜாவின் இசை இதமாக இருக்கிறது.

மொத்தத்தில் நல்ல கதை, திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால் மார்கழி திங்கள் இன்னும் இதமாக இருந்து இருக்கும். மார்கழி திங்கள் – குளிரில்லை. ரேட்டிங் 3/5