தர்மராஜ் பிலிம்ஸ், பியான்ட் த லிமிட் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் லோகேஷ் குமார் இயக்கத்தில் வந்துள்ள திரைப்படம் N4. இப்படத்தில் மைக்கேல், கேப்ரில்லா, அப்சல், வடிவுக்கரசி, வினுஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
மைக்கேல், கேப்ரில்லா, அப்சல், வினுஷா இவர்கள் நால்வரையும் சிறு வயதில் இருந்தே எடுத்து வளர்த்து வருகிறார் வடிவுக்கரசி. மைக்கேல் – கேப்ரில்லா, அப்சல் – வினுஷா காதலித்து வருகின்றனர். நால்வரும் மகிழ்ச்சியாக காசிமேடு பகுதியில் மீன் விற்கும் தொழில் செய்து வாழ்ந்து வருகின்றனர். ஒருநாள் யாரோ துப்பாக்கியால் சுட்டதில் வினுஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். வினுஷாவை யார் சுட்டது என்று மைக்கேலும் அப்சலும் தேட தொடங்குகின்றனர். மருத்துவமனையில் இருக்கும் வினுஷாவுக்கு என்ன ஆனது? சுட்டவர்களை இருவரும் கண்டுபிடித்தார்களா? எதற்காக சுட்டனர் என்பதை இயக்குநர் லோகேஷ் இயக்கியுள்ள இப்படத்தின் கதை.
வட சென்னை மக்களின் வாழ்வியலை நீண்ட நாட்களுக்கு பிறகு அருமையாக சொன்ன படமாக இப்படம் வந்துள்ளது. அவர்களின் வாழ்க்கை முறை , சந்தோஷம், துக்கம், காதல், நட்பு என்று நல்ல முறையில் காட்டியுள்ளார் இயக்குனர். ஆனால் படத்தில் வரும் கிளைக் கதைகள் தேவையில்லாத மாதிரி தோன்றுகிறது. நேர்மையான போலீஸ் இன்ஸ்பெக்டராக அனுபமா குமார். நோய்வாய்ப்பட்ட மகனுக்காக போராடும் தாயாக அனுபமா குமார் அனுதாபம் வர வைக்கிறார். இக்கதையின் வெற்றியே கதாபாத்திரங்களின் தேர்வுதான். மைக்கேல், கேப்ரில்லா, அப்சல், வினுஷா நால்வரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். வடிவுக்கரசி தனது அனுபவ நடிப்பை கொடுத்துள்ளார். பணக்கார இளைஞர்கள், ஏரியாவில் சின்ன சின்ன ரவுடியிஸம் செய்துவரும் சிறுவர்கள் என அனைவரும் நல்ல நடிப்பை கொடுத்துள்ளனர். ஒளிப்பதிவாளர் திவ்யன்க் படத்திற்கு கூடுதல் பலமாக உள்ளார். காசிமேடு கடல் பகுதியை அப்படியே படம் பிடித்துள்ளார். எடிட்டர் டான் சார்லஸ் இரண்டாம் பாதியில் நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம். கிளைமாக்ஸ் செல்ல செல்ல லேசான அயற்சி ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. கிளைமாக்ஸ் காட்சி அதிர்ச்சி. தவறு செய்தவர்கள் தப்பிக்க எந்தவித தவறும் செய்யாதவர்கள் பாதிக்கப்படுவது ஏற்புடையதாக இல்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு வடசென்னை மக்களின் வாழ்வியலை யதார்த்தமாக சொல்லியுள்ள படமாக இப்படம் வந்துள்ளது. இயக்குனருக்கு பாராட்டுக்கள்.