Thursday, June 1
Shadow

பருந்தாகுது ஊர்க்குருவி – திரை விமர்சனம் !

தனபாலன் இயக்கத்தில் நிஷாந்த் ரூசோ, காயத்ரி, விவேக் பிரசன்னா, கோடங்கி வடிவேலு உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் பருந்தாகுது ஊர்க்குருவி. இப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.

நிஷாந்த் ஊருக்குள் சின்ன சின்ன திருட்டு, அடிதடி செய்துவரும் ஒரு பெட்டி கேஸ் திருடன். ஒருநாள் போலீஸ் இவனை ஸ்டேசனில் வைத்து விசாரித்து வருகிறது. அப்போது காட்டுக்குள் ஒரு கொலை நடந்துள்ளதாக தகவல் வர அங்கு செல்ல வழி தெரியாத போலீஸ் ஒருவர் நிஷாந்தையும் அழைத்துக்கொண்டு செல்கிறார். காட்டுக்குள் சென்று பார்த்தால் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கிடக்கிறார். இந்நிலையில் இறந்துகிடக்கும் பிணத்துடன் நிஷாந்தையும் விலங்கிட்டு அந்த போலீஸ் சென்று விடுகிறார். திடீரென இறந்ததாக நினைத்தவர் எழுந்துவிடுகிறார். அவரது போனில் வரும் ஒரு பெண் அவரை காப்பாற்றினால் பணம் தருவதாக நாயகனிடம் சொல்கிறார். இதனால் நாயகன் அவரை காப்பாற்ற நினைக்கிறார். இறுதியில் அவரை காப்பாற்றினாரா? அவரை கொல்லத் துடிக்கும் கும்பல் யார்? என்பதே பருந்தாகுது ஊர்க்குருவி.

ஒரு த்ரில்லர் படத்தை கொடுக்க‌ நினைத்துள்ள இயக்குனர் தனபாலனுக்கு பாராட்டுக்கள். ஆனால் மிகவும் மெதுவாக விறுவிறுப்பு இல்லாத திரைக்கதை சோதிக்கிறது. இன்னும் கொஞ்சம் திரைக்கதையில் உழைத்திருந்தால் ஒரு நல்ல த்ரில்லர் படமாக வந்திருக்கும். முதல் பாதி இலக்கு இல்லாமல் செல்கிறது என்றால் இரண்டாம் பாதி பொறுமையை ரொம்பவும் சோதிக்கிறது. கிளைமாக்ஸ் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. நாயகனாக நிஷாந்த் ரூசோ தன்னால் முடிந்தவரை நடிக்க முயற்சித்துள்ளார். சில இடங்களில் அவரது முகபாவனைகள் இப்ப எப்படி நடிக்கிறேன் பார் என்ற நிலையில் உள்ளது. அடுத்தடுத்த படங்களில் கற்றுக்கொள்வார் என்று நம்பலாம். அடுத்து விவேக் பிரசன்னா கொஞ்சம் ஆறுதல் தருவது இவரும் போலீசாக வரும் கோடங்கி வடிவேலும்தான். நடிப்பு இயல்பாக இருக்கிறது. ஆனால் காட்டுக்குள் கத்திக்குத்து வாங்கி உணவில்லாமல் இருக்கும் விவேக் பிரசன்னா படம் முழுவதும் ஜாலியாக நடந்து வருவது எல்லாம் அபத்தம். இப்படி சில பிரச்சினைகள் படத்தில் உண்டு.

மொத்தத்தில் சஸ்பென்ஸ் த்ரில்லர் எடுக்க நினைத்து படம் பார்க்கிற ஆடியன்ஸ்களுக்கு இது எந்த மாதிரியான படம் என்று கண்டுபிடிங்க பார்க்கலாம் சஸ்பென்ஸ் வைத்துள்ளனர்.