Sunday, October 12
Shadow

உலக உணவு தினத்தை முன்னிட்டு, உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும் திட்டம்  நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் துவக்கி வைத்தார் !!

உலக உணவு தினத்தை முன்னிட்டு, உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும் திட்டம்  நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் துவக்கி வைத்தார் !!

ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷன் நிறுவனத்தின் சார்பில்,  உணவில்லாமல் தவிப்பவர்களுக்கு உணவளிக்கும் அற்புதமான திட்டம், பல வருடங்களாக நடந்து வருகிறது.

இந்தியா நாடு முன்னேறிய நாடு என்ற பெருமிதத்தை பெற்றிருந்தாலும், இன்றும் உணவில்லாமல் தவிப்பவர்களின் எண்ணிக்கை நம் நாட்டில் பெருமளவில் உள்ளது. உலக பட்டினி குறியீட்டில் இன்றும் கவலையளிக்கும் நிலையில் தான் உள்ளது. இதனை மாற்றும் முனைப்பில் திரு ஆலன் அவர்கள் இந்த ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷன் தொண்டு நிறுவனத்தை துவங்கி நடத்தி வருகிறார்.

கடந்த ஐந்து வருடங்களாக ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷன் நிறுவனம், உணவில்லாமல் தவிப்பவர்களுக்கு அவர்களின் இடத்தைத் தேடிச்சென்று உணவளிக்கும் திட்டத்தை நடத்தி வருகிறது.

இந்நிறுவனத்தின் சார்பில் உலக உணவு தினத்தன்று வருடா வருடம் ஒரு நிகழ்வு நடத்தப்படுகின்றது. இந்நிகழ்வில் 5000 க்கு பேருக்கு  பிரியாணி உணவு சமைத்து காஞ்சிபுரம், செங்கல் பட்டு, சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில், 150க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவன செயல்பாட்டாளர்கள் வாகனங்கள் மூலம் நேரில் சென்று உணவில்லாமல் தவிப்பவர்களுக்கு உணவளித்து வருகிறார்கள்.

ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷன் நடத்திய இந்த வருட நிகழ்வினில்,  நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிகர் ஆதி, நடிகர் சந்தோஷ் பிரதாப், நடிகர் மஹத், நடிகர் மைம் கோபி, நடிகர் கண்ணா ரவி, முத்துக்குமார் ஆகியோருடன்  கலந்துகொண்டு, இந்நிகழ்வை துவக்கி வைத்தார்.

மேலும் இந்நிகழ்வினில் ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷன் சார்பில் ஹோப் எனும் புதிய வெப்சைட் துவக்கப்பட்டது. இதன் மூலம் ஏழை எளியோருக்கு மாதாமாதம் மளிகை சாமான்கள் வழங்கப்படவுள்ளது. இந்த வெப்சைட்டில் மூலம், மாதம் வெறும் 35 ரூபாய்க்கு சப்ஸ்க்ரைப்சன் செய்யலாம், அதன் மூலம் பலருக்கு உதவலாம்.

இந்நிகழ்வினில்..,

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதாவது…

ஆலன் இதை 6 வருடமாக செய்து வருகிறார். நாம் நன்றாக இருக்கும் போது, பலர் நம்மைத் தேடி வருவார்கள். ஆனால் நாம் கஷ்டத்தில் இருக்கும் போது யாரெல்லாம் வருவார்கள் என்றால் அது கேள்விக்குறிதான். ஒரு 5000 பேருக்கு பிரியாணி போட வேண்டாம் என்றால் அதற்கு எவ்வளவு செலவாகும் என தெரியும், ஆனால் பெரிய பெரிய ஆட்களிடம் அதற்காக உதவி கேட்டுப் போனபோது, யாரும் உதவ முன்வரவில்லை. இதற்காக உண்மையாக ஸ்பான்ஸர் தந்த நல்ல உள்ளங்களுக்குப் பெரிய நன்றி. உதவி செய்யும் நண்பர்கள் தான் உலகில் மிக முக்கியம், அவர்களை விட்டுவிடாதீர்கள். நான் ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷனில் ஒரு உறுப்பினர் என்பதில் எனக்கு எப்போதும் பெருமை. அதை நான் கர்வமாக சொல்லிக்கொள்வேன். இந்த முயற்சிக்கு ஆதரவாக இருக்கும் அனைவருக்கும் என் நன்றிகள். இந்த முயற்சி தொடர்ந்து நடக்க வேண்டும். இந்த மிகப்பெரிய செயல்பாட்டில் அடுத்ததாக ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷன் சார்பில் ஹோப் என ஒரு வெப்சைட்  துவங்கியுள்ளோம், இந்த ஆப்  உங்கள் மொபைலில் வைத்து மாதம் 35 ரூபாய் சப்ஸ்க்ரைப்சன் செய்யலாம், அதன் மூலம் பலர் பசியாறுவார்கள். நாம் அனைவரும் நம்மால் முடிந்த ஆதரவைத் தர வேண்டும். நான் என்றும் ஆலனுக்குத் துணையாக இருப்பேன் அனைவருக்கும் நன்றி.

நடிகர் சந்தோஷ் பிரதாப் பேசியதாவது..,

உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும் ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷன் உடைய  முயற்சி மிகச்சிறப்பானது. நம்மில் பலர்  உதவ முன்வந்தாலும் அதைச் சரியாக முன்னெடுத்துச் செய்ய எந்த ஒரு இயக்கமும் இங்கு சரியாக இல்லை.  அந்த வகையில் ஆலனின் இந்த ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷன் தொடர்ந்து பல வருடங்களாக, பலருக்குப் பயனளிக்கும் வகையில் இந்த உணவளிக்கும் திட்டத்தை, செயல்படுத்தி வருகிறார்கள். அது மட்டுமில்லாமல் அதை அடுத்தகட்டத்திற்கும் எடுத்து சென்று வருகிறார்கள். நான் உதவி செய்ய நினைக்கும் போதெல்லாம் ஆலன் அதற்குப் பெருந்துணையாக இருந்தார். ஆலனின் இந்த முயற்சிக்கு நானும் ஒரு சிறு துரும்பாக இருப்பது எனக்குப் பெரு மகிழ்ச்சி. இந்த திட்டம் இன்னும் பெரிய அளவில் வளர நாம் அனைவரும் உதவ வேண்டும். அனைவருக்கும் நன்றி.

நடிகர் மஹத் பேசியதாவது..,

ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷன் நிறுவனம் பற்றி  எனக்கு என் நண்பர் மூலம் தான் தெரியும். ஆலன் இதைப் பல வருடங்களாகச் செய்து வருகிறார் என்பது நண்பர் மூலம் தெரிய வந்தது. நான் அவரிடம் போனில் கூட பேசியது இல்லை, அவர் கேட்டவுடன் உதவி செய்தேன். என்னை நகரம் முழுக்க கூட்டிப்போய் எவ்வளவு பேர் உணவில்லாமல் தவிக்கிறார்கள் என்று காட்டியபோது, எனக்கு மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. நம்மால் முடிந்த 35 ரூபாய், ஒருவருக்கு உணவளிக்கும். இதற்கு நம்மால் முடிந்த அனைத்து உதவிகளையும் நாம் செய்ய வேண்டும். இதை முன்னெடுத்து நடத்தி வரும் ஆலனின் ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷனுக்கு வாழ்த்துக்கள். இதற்கு நான் எப்போதும் துணையாக இருப்பேன் நன்றி.

ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷன் நிறுவனர் ஆலன் பேசியதாவது..,

நண்பர்கள் சிரத்தையடுத்து இங்கு வந்து வாழ்த்தியதற்கு என் நன்றிகள். இந்த முயற்சி தொடர்ந்து நடப்பதற்கு என் நண்பர்கள் இந்த பிரபலங்கள் தான் காரணம். ஐஸ்வர்யா ராஜேஷ் என் நெருங்கிய நண்பர். இதை முதன் முதலில் நடத்திய போது, ஏன் என் முகத்தை அம்பாஸிடராக போட்டு, இன்னும் பெரிய அளவில் எடுத்துச்செல்லக்கூடாது எனக் கேட்டார். அது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. அதன் பின் இந்த முயற்சி இன்னும் பெரிதாக மாறியது. மஹத் அவர் வீட்டுக்கருகிலேயே இப்படியானவர்கள் இருப்பதைக் கேட்டு அதிர்ச்சியானர். உடனே உதவ முன் வந்தார். இதற்கு உறுதுணையாக இருக்கும் என் நண்பன் சமீருக்கு நன்றிகள். இது நடக்க முக்கிய காரணமாக இருக்கும் வாலண்டியர்ஸ்க்கு என் நன்றிகள்.  ஹோப் எனும் புது வெப்சைட் துவங்கியுள்ளோம், இதில் மாதம் நீங்கள் ஒரு முறை 35 ரூபாய் தந்தால் போதும், நீங்களும் இதில் பலருக்குப் பசியாற்றுவீர்கள். அனைவரும் இந்த ஆப் சப்ஸ்க்ரைப்சன் செய்து ஆதரவு தர வேண்டும். நன்றி.

நடிகர் மைம் கோபி பேசியதாவது..,

நம் நாட்டில் உணவில்லாமல் பலர் தவிக்கிறார்கள். அவர்களுக்கு உதவும், உணவளிக்கும் ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷன் உடைய இந்த முயற்சி மிகப்பெரியது. இதை முன்னெடுப்பதற்கு உறுதுணையாக இருக்கும் ஆலன்,  தோழி ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரை மனதார வாழ்த்துகிறேன். இந்நிகழ்விற்கு என்னை அழைத்ததற்கு மிக்க நன்றி. இம்முயற்சிக்கு நாம் அனைவரும் உறுதுணையாக இருப்போம். நன்றி.

நடிகர் ஆதி பேசியதாவது..,

என்னை அழைத்ததற்கு முதலில் மிக்க நன்றி. சகோதரி ஐஸ்வர்யா ராஜேஷ் தான் என்னை அழைத்தார். அவருக்காக என்றும் அழைக்க மாட்டார். வேறு ஒருவருக்கு உதவவே அழைப்பார்.  இந்நிகழ்வு குறித்து இப்போது தான் தெரிந்து கொண்டேன். மொய் விருந்தை 6 வருடங்களாக நடத்தி வருகிறார்கள். நம் நாட்டில் 18 மில்லியன் மக்கள் இன்றும் பசியால் வாடுகிறார்கள் என்பது சோகம். எளியோருக்கு உணவளிக்கும் இவர்களின் முயற்சி பெரும் பாராட்டுக்குரியது. இந்த நிகழ்வில் பங்கு கொண்டதைப் பெருமையாக நினைக்கிறேன். அனைவருக்கும் நன்றி.