Thursday, December 1
Shadow

படவெட்டு திரை விமர்சனம் (ரேட்டிங் 4/5)

லிஜு கிருஷ்ணா இயக்கத்தில், நிவின் பாலி நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் மலையாளப் படம் ‘படவெட்டு’ (Padavettu) படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.

விவசாயத்தை நம்பியிருக்கும் கிராமத்தில், கிராம மக்களின் தேவைகளை கிராம சபை நிர்வாகிகள் பூர்த்தி செய்து கொடுக்கிறார்கள். இதற்கிடையே, மக்களுக்கு இலவச திட்டங்களை அறிவித்து அந்த கிராமத்தில் காலூன்றும் அரசியல் கட்சியின் தலைவர், அந்த கிராமத்து விவசாய நிலங்களை அபகரிக்க திட்டம் போடுகிறார். அந்த அரசியல்வாதியின் திட்டத்தின் துவக்கமாக இருக்கும் நாயகன் நிவின் பாலி, ஒரு கட்டத்தில் பொருத்தது போதும் என்று பொங்கி எழ, அந்த அரசியல்வாதியும், அவருடைய திட்டமும் என்னவானது? என்பதை சொல்வது தான் ‘படவெட்டு’.

விபத்தினால் வாழ்க்கையை தொலைத்த தடகள வீரரகாக அமைதியான நடிப்பை வெளிப்படுத்திருக்கும் நிவின் பாலி, அரசியல்வாதிக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கையில் ஆக்ரோஷமாக நடித்திருக்கிறார். ஒரு விபத்து, என் வாழ்க்கை, காதலி என அனைத்து போய்விட்டது, என்று அவர் சொல்லும் இடத்தில் விரக்தியின் உச்சத்தில் இருக்கும் இளைஞர்களை பிரதிபலிக்கிறார். அதே சமயம், சும்மா உட்கார்ந்திருப்பதில் பயனில்லை என்று அவர் எடுக்கும் முயற்சிகளும், விவசாய நடவடிக்கைகளும் இளைஞர்களை உத்வேகப்படுத்துகிறது.

நாயகியாக நடித்திருக்கும் அதிதி பாலனுக்கு காதல் காட்சிகள் இல்லை, டூயட் பாடல்கள் இல்லை. ஆனால், அவர் திரையில் வரும்போதெல்லாம் நம் உள்மனதில் ரசாயண மாற்றம் நிகழ்கிறது. பார்வையிலேயே தனது ஒட்டு மொத்த காதலையும் வெளிப்படுத்தும் சக்தி படைத்தவராக இருக்கிறார் அதிதி பாலன்.

குய்யாலி என்ற அரசியல்வாதி கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்திருக்கும் ஷம்மி திலகன், இயல்பான நடிப்பு, மிரட்டலான வில்லத்தனம் என படம் பார்ப்பவர்களுக்கு கோபம் வரும்படி நடித்திருக்கிறார்.

நிவின் பாலியின் அத்தையாக நடித்திருக்கும் ரெம்யா சுரேஷ், ஷினே டாம் சக்கோ, மனோஜ் ஒமன் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் கவனம் பெறும் வகையில் நடித்திருக்கிறார்கள். ஒரே ஒரு காட்சியில் வரும் அதிதி பாலனின் முன்னாள் கணவராக நடித்திருக்கும் நடிகர் கூட தனது நடிப்பு மூலம் கவனம் ஈர்க்கிறார்.

தீபக் டி.மேனனின் ஒளிப்பதிவு கேரள கிராமத்தின் அழகை நம் கண்முன் நிறுத்துவதோடு, அவர்களின் வாழ்வியலை எந்தவித ஒப்பணையும் இல்லாமல் காட்சிப்படுத்தியிருப்பது படத்திற்கு கூடுதல் பலம்.

கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல் அனைத்தும் இனிமை. அதிலும் நிவின் பாலி – அதிதி பாலன் காதலை பறிமாறும் காட்சியில் ஒலிக்கும் அந்த மழை பாடல் திரும்ப திரும்ப கேட்கும் ரகம். பின்னணி இசை கதையோடு பயணிப்பதோடு மட்டும் அல்லாமல் காட்சிகளுக்குள் நம்மையும் அழைத்து செல்கிறது. ஷபிக் முகமது அலியின் படத்தொகுப்பு நேர்த்தி.

இலவச திட்டங்கள் மூலம் காலூன்ற நினைக்கும் அரசியல் கட்சி பிறகு அராஜகம், வன்முறை போன்றவற்றை கையில் எடுத்து எப்படி ஒரு கிராமத்தையே தன் வசப்படுத்த நினைக்கிறது, என்பதை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் லிஜு கிருஷ்ணா, பா.ஜ.க அரசை மறைமுகமாக விமர்சித்து இருந்தாலும், மிக கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

கட்சியின் பெயர்களையும், அவர்களின் அடையாளத்தையும் மறைமுகமாக காட்டி, மிக நாசுக்காக தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கும் இயக்குநர், மக்கள் யாரை எதிர்க்க வேண்டும், யாரை ஆதரிக்க வேண்டும் என்பதை மிக சாமர்த்தியமாக சொல்லியிருக்கிறார்.

”நம் மண், நம் வீடு, நம் நாடு” என்ற மக்கள் முழக்கத்தோடு முடிவடையும் படம், யாருக்கு எதிராக இந்த முழக்கத்தை நாம் எழுப்ப வேண்டும் என்பதை மிக அழகாக சொல்லு படம், இப்படிப்பட்ட போர்குனம் இல்லை என்றால், நாம் எதையெல்லாம், எப்படியெல்லாம் அவர்களால் இழக்க நேரிடும் என்பதை எச்சரிக்கையாகவும் சொல்லியிருக்கிறது.

படத்தின் பிளஸ்:
நிவின்பாலி, ஷம்மிதிலகன், அதிதிபாலன் ஆகியோரின் நடிப்பு, தீபக்மேனனின் ஒளிப்பதிவு, கோவிந்த்வசந்தாவின் இசை

படத்தின் மைன்ஸ்:
படத்தில் மைன்ஸ் என்று சொலும் படியாக எதுவும் இல்லை.

மொத்தத்தில் அரசியல் சதிகளை அப்பட்டமாகத் தோலுரிக்கும் வகையில் வெளியாகியுள்ள படவெட்டு அனைவரும் பார்க்க வேண்டிய படம்.