Monday, May 20
Shadow

“பிச்சைக்காரன் 2” – திரை விமர்சனம்! (தரமான சம்பவம்) Rank 4/5

விஜய் ஆண்டனி நடித்துள்ள “பிச்சைக்காரன் 2” படத்தின் திரை விமர்சனம்!

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி நடிப்பில் பிச்சைக்காரன்-2 திரைப்படம் உருவாகி உள்ளது. விஜய் ஆண்டனி இயக்குநராக அறிமுகமாகியுள்ள ‘பிச்சைக்காரன்-2’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இதற்கு ‘பிச்சைக்காரன்’ படத்தின் வெற்றியும் ஒரு காரணமாக அமைந்திருக்கிறது.

இந்தியாவில் இருக்கும் டாப் 10 பணக்காரர்களில் ஒருவரான விஜய் குருமூர்த்தி (விஜய் ஆண்டனி) என்பவரின் சொத்துக்களை அபகரிக்க அவருடன் இருப்பவர்களே சதி செய்து, விஜய் குருமூர்த்தியை கொலை செய்து விடுகின்றனர். அதாவது அவருடைய மூளையை எடுத்து அவரைப்போலவே இருக்கும் பிச்சைக்காரன் விஜய் ஆண்டனிக்கு வைத்துவிடுகின்றனர்.

பிச்சைக்காரன் சத்யாவாக மற்றொரு விஜய் ஆண்டனி சிறுவயதிலேயே பெற்றோர்களை இழந்தவர். தனது தங்கையின் பசியை போக்க பிச்சை எடுக்கத் தொடங்குகிறான்‌. ஒரு கட்டத்தில் தன் தங்கை ராணியை தன்னிடம் இருந்து பிரித்த நபரை, கொலை செய்துவிட்டு சிறைக்கு சென்று தண்டனை அனுபவித்து 20 ஆண்டுகளுக்கு பிறகு வெளியே வந்து தனது தங்கையை தேடி அலைகிறான். அப்படி அலையும் போதுதான் வில்லன் கும்பல் இவரை கடத்திச் சென்று பணக்கார விஜய் ஆண்டனியின் மூளையை இவருக்கு பொருத்திவிடுகின்றனர்.

ஆனால் வில்லன் கும்பலின் பேச்சைக் கேக்காத விஜய் ஆண்டனி அவர்களுக்கு ஒத்துழைக்க மறுக்கிறார். அதன் பிறகு விஜய் ஆண்டனி நிலை என்ன? மூளை மாற்றிய பிறகு விஜய் ஆண்டனி என்ன செய்கிறார்? அவர் எடுக்கும் முடிவு என்ன? வில்லன் கும்பல் என்ன ஆனார்கள் என்பதே கதை.

விஜய் ஆண்டனி முதல் முறையாக இயக்கி இருந்தாலும் திரைக்கதையில் பக்கா கமர்ஷியல் ஃபார்முலாவை பின்பற்றி சிக்ஸர் அடித்துள்ளார். இருவேடங்களில் நடித்து அப்ளாஸ் அள்ளுகிறார். முதல் பாதி மூளை மாற்று அறுவை சிகிச்சை, தங்கை பாசம் என சிறப்பாக நகர்கிறது. இரண்டாம் பாதியில் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ஏழை மக்களுக்கு என்ன செய்கிறார் என்பதை விறுவிறுப்பாக சொல்லியுள்ளார்.

நாயகி காவ்யா தபார் ஆரம்பத்தில் கவர்ச்சியாக வந்தாலும் பின்னர் சில இடங்களில் வந்து கிளைமாக்ஸில் தனது வேலையை சிறப்பாக செய்துள்ளார். தேவ் கில், ஜான் விஜய், மன்சூர் அலி கான், யோகி பாபு ஆகியோர் தங்களது பணியை நிறைவாக செய்துள்ளனர்.

முதல் பாகத்தில் அம்மா பாசம் போல இதில் தங்கை பாசத்தை சொல்லி‌‌ கண்கலங்க வைத்துள்ளார். மூளை மாற்று சிகிச்சை பற்றிய விஷயங்களும் சமூகத்திற்கு தேவையான ஆன்டி பிகிலி விசயத்தையும் படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு எடுத்துக் கூறியுள்ளார் விஜய் ஆண்டனி. ஆன்டி பிகிலி என்றால் என்ன? இதனால் மக்களுக்கு எவ்வாறு நல்லது நடக்கும்? என்பதை இந்த படத்தின் மூலமாக விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். விஜய் ஆண்டனி இசையில் பாடல்கள் அருமை.‌‌ பின்னணி இசை படத்தின் விறுவிறுப்பை கூட்டியுள்ளது. அந்த பிச்சைக்காரன் தீம் சிறப்பு. எடிட்டிங் விஜய் ஆண்டனி தான். கச்சிதம். கடைசி 20 நிமிட காட்சிகள் காண்போர் கண்களை கலங்க செய்து விடுகிறது. இந்த கோடை விடுமுறைக்கு ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக இந்த பிச்சைக்காரன் 2 வந்துள்ளது.