Sunday, May 19
Shadow

“ராஜா மகள்” – திரை விமர்சனம்!

அப்பாவின் பிரசவ வலி “ராஜா மகள்” திரை விமர்சனம்!

தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து பிரபலமான ஆடுகளம் முருகதாஸ் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ராஜா மகள். ஹென்றி இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தின் கதை, ஆடுகளம் முருகதாஸ் செல்போன் கடை வைத்து அன்றாடம் வாழ்க்கையை ஓட்டி வருபவர். இவருக்கு மனைவி, ஒரு பெண் குழந்தை. தனது மகள் எது கேட்டாலும் மறுக்காமல் வாங்கி கொடுக்கும் அப்பா. இதனை மனைவி உள்பட யார் கண்டித்தாலும் கண்டுகொள்ளாத பாசமான தந்தை. ஒருநாள் மகள் தனது உடன் படிக்கும் மாணவனின் பிறந்தநாள் பார்ட்டிக்காக அவரது வீட்டிற்கு செல்கிறார்கள். அங்கு அவர்களது பிரம்மாண்டமான வீட்டை பார்த்து தனக்கும் இதுபோல் வீடு வேண்டும் என்று கேட்கிறாள் மகள். முருகதாஸும் வாங்கி வருவதாக சொல்கிறார். மகள் சும்மா விளையாட்டுக்கு கேட்கிறாள் சில தினங்களில் மறந்துவிடுவாள் என்று அவர் நினைக்கிறார். ஆனால் மகளோ வீட்டின் நினைப்பாகவே இருக்கிறாள்‌. அப்பாவும் ஒரு கட்டத்தில் வாங்கி தருகிறேன் என்று சொல்லிவிடுகிறார். வாடகை வீட்டில் வசிக்கும் ஏழை தொழிலாளி அப்பாவால் எப்படி அவ்வளவு பெரிய வீடு வாங்க முடியும். பொண்ணுகிட்ட பொய் சொல்லிவிட்டோமே என்று தினம் தினம் தவிக்கிறார். இறுதியில் வீடு வாங்கினார்களா? மகளுக்கு உண்மை தெரிந்ததா? என்பதே ராஜா மகள்.

பாசமுள்ள தந்தையாக ஆடுகளம் முருகதாஸ். இயல்பான நடிப்பால் கவர்கிறார். எல்லா குழந்தைகளுக்கும் தனது அப்பாதான் ஹீரோ. அதுபோன்ற சூப்பர்‌ஹீரோவாக திரையில் மிளிர்கிறார். மகள் கேட்பதை எல்லாம் வாங்கி தருவதாகட்டும் அவளுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று சவால் விடுவதாகட்டும் மிடில்கிளாஸ் அப்பாவாக மனதில் நிற்கிறார். தொடர்ந்து மகளிடம் பொய் சொல்லிக்கொண்டே இருந்து ஒரு கட்டத்தில் மகளை பார்க்கவே கூச்சப்பட்டு அவள் தூங்கிய பிறகு வீட்டிற்கு வந்து அதிகாலையிலேயே எழுந்து போய் குழந்தைகள் கேட்டதை வாங்கித் தர முடியாமல் போன ஒவ்வொரு தந்தையின் வலியை இயல்பாக கடத்தியுள்ளார். சில இடங்களில் எல்லாம் கண்களில் கண்ணீர் வழவழைக்கிறது. மகளாக பிரிக்க்ஷா இந்த சின்ன வயதில் எத்தனை கணமான கதாபாத்திரம் அசால்ட்டாக கையாண்டுள்ளார். அவர் வரும் காட்சிகளில் எல்லாம் கைதட்டல் வாங்குகிறார். பள்ளியில் தனது அப்பா வீடு வாங்கித் தருகிறார் என்று சக மாணவர்களிடம் பந்தா பண்ணும் காட்சியில் ரசிக்க வைக்கிறார். மனைவியாக வெலினா சராசரி மிடில்கிளாஸ் குடும்ப தலைவியாக தனது பணியை நன்றாக செய்துள்ளார். மகளை ரொம்ப செல்லம் கொடுத்து வளர்க்காத என்று அடிக்கடி இவர் சொல்லும்போது எல்லாம் நடக்கும் அதுவே தோன்றுகிறது. நண்பராக பக்ஸ் இயல்பாக வந்து போகிறார். சின்ன சின்ன கதாபாத்திரம்கூட தனது பங்களிப்பை செய்துள்ளனர். நிக்கி கண்ணனின் கேமரா தேவையான உதவிகளை செய்துள்ளது. சங்கர் ரங்கராஜனின் இசையில் பாடல்கள் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கலாம். பின்னணி இசை ஓகே. அளவுக்கதிகமான ஆசை மிகவும் ஆபத்து என்பதை ராஜா மகள் சொல்லியுள்ளது. ஹென்றி வரும் காலத்தில் சிறந்த இயக்குனராக வர வாய்ப்பு உள்ளது.