Sunday, September 8
Shadow

சாலா – திரைவிமர்சனம் (Rank 3/5)

இயக்குனர் எஸ் டி மணிபால் இயக்கத்தில் தீரன் (அறிமுகம்), ரேஷ்மா வெங்கடேசன், ‘மெட்ராஸ்’ புகழ் சார்லஸ் வினோத், அருள்தாஸ், ஸ்ரீநாத், சம்பத் ராம், மற்றும் ஐடி அரசன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “சாலா”.

படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ரவீந்திரநாத் குரு. இசை தீசன் கவனித்திருக்கிறார். பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனம் படத்தினை தயாரித்திருக்கிறது.

சார்லஸ் வினோத் மற்றும் அருள்தாஸ் இருவரும் பகையாளிகள். அங்குள்ள பார்வதி என்ற மதுபானக் கூடத்தைக் கைப்பற்ற பல வருடங்களாக இருவரும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்கின்றனர்.

அருள்தாஸை தனது குருவாக நினைத்து அவருடன் இருப்பவர் தான் நம்ம ஹீரோ தீரன். ஆறடி உயரத்தில் ஆயிரம் பேரை அடிக்கும் அளவிற்கு உடல் வலிமையோடு அருள்தாஸுக்கு பக்க பலமாக நிற்கிறார் தீரன்.

தொடர்ந்து வட சென்னையில் நிறைய மதுபான கூடங்களை திறக்க திட்டமிடுகின்றனர். அதே சமயம், மதுவிற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்தும் பல சட்ட போராட்டங்களையும் நடத்தி வருகிறார் நாயகி ரேஷ்மா.

இதனால், ஊருக்குள் இவருக்கு எதிரிகள் அதிகம். ரேஷ்மா மீது தீரனுக்கு ஒரு காதல் பார்வை.

சார்லஸ் வினோத் அருள்தாஸை திட்டமிட்டு சிறைக்குள் தள்ள நினைக்கிறார். அதனைத் தொடர்ந்து மதுபான கூடத்தைக் கைப்பற்ற திட்டமிடுகிறார் சார்லஸ்.

அதன்பிறகு தீரனின் ஆட்டம் ஆரம்பமாகிறது. தீரன் என்னவானார்.? மதுவிற்கு எதிரான ரேஷ்மாவின் போராட்டம் என்னவானது.?? என்பதே படத்தின் மீதிக் கதை.

கதைக்கேற்ற ஹீரோவாக ஜொலித்திருக்கிறார் தீரன். எத்தனை பேரை தூக்கிப் போட்டு பந்தாடினாலும் நம்பலாம் என்பதற்கேற்ற உடற்கட்டோடு வருகிறார் தீரன்.

இந்த கதைக்கு என்ன தேவையோ அதை அளவோடு கொடுத்து அசத்தியிருக்கிறார் தீரன்.

நாயகி ரேஷ்மாவிற்கு அதிகப்படியான இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. மதுவிற்கு எதிரான இவரது வசனங்கள் ஒவ்வொன்றும் சாட்டையடி தான்.

சார்லஸ் மற்றும் அருள்தாஸ் இருவருக்கும் சரிசமமான காட்சிகள். இருவரும் தங்களது அனுபவ நடிப்பால் நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார்கள்.

மதுவிற்கு எதிரான ஒரு படம் எனக்கூறியிருக்கிறார்கள். இருந்தாலும் மதுவின் வாடை அதிகமாக வீசுகிறது.. அதை சற்று குறைத்திருக்கலாம்.

இசை மற்றும் ஒளிப்பதிவு இரண்டும் படத்திற்கு நன்றாகவே கைகொடுத்திருக்கிறது.

படத்தொகுப்பு ஷார்ப் தான்.

படக்குழுவின் முயற்சிக்கு பெரும் வாழ்த்துகள்.