Monday, May 20
Shadow

சஞ்சீவன் – திரைவிமர்சனம்!

மலர் மூவி மேக்கர்ஸ் தயாரித்து புதுமுக இயக்குனர் மணி சேகர் இயக்கத்தில் வினோத் லோகிதாஸ், திவ்யா துரைசாமி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து‌வெளியாகியுள்ள திரைப்படம் சஞ்சீவன். தென்னிந்தியாவின் முதல் ஸ்னூக்கர் திரைப்படம் என்று குறிப்பிடப்பட்டு இப்படம் வெளியாகியுள்ளது. இப்படத்தின் திரை விமர்சனத்தை இங்கு பார்க்கலாம்.

வினோத் லோகிதாஸ், சத்யா, ஷிவ் நிஷாந்த், விமல் ராஜா, யாசீன் அனைவரும் விமல் ராஜாவின் தந்தையின் ஐடி அலுவலகத்தில் வேலை பார்த்து வருகின்றனர். வினோத்துக்கு ஸ்னூக்கர் விளையாடுவதில் ஆர்வம். இவரது அலுவகத்தில் புதிதாக வேலைக்கு சேரும் திவ்யாவிற்கு வினோத்தை பார்த்ததும் காதல். வினோத்தும் காதலிக்கிறார். இந்நிலையில் ஸ்னூக்கர் ஆட்டத்தின் இறுதிப் போட்டியில் வினோத் வெற்றிபெற நண்பர்கள் சேர்ந்து ஏற்காடு சுற்றுலா செல்கின்றனர். அப்போது ஏற்படும் எதிர்பாராத நிகழ்ச்சியால் இவர்களுக்கு என்ன ஆனது என்பதே சஞ்சீவன்.

இயக்குனர் மணி சேகர் ஸ்னூக்கர் கிளப் வைத்திருந்தவராம். அதனாலேயே இதுவரை எவரும் சொல்லாத ஸ்னூக்கர் கதைக்களத்தை தேர்வு செய்து இயக்கியுள்ளார். முதல்பாதி முழுவதும் ஸ்னூக்கர், நண்பர்கள் கலாட்டா என விறுவிறுப்பாகவும் காமெடியாகவும் செல்கிறது. அதுவும் சத்யா, ஷிவ் நிஷாந்த், யாசீன் மூவரும் காமெடியில் கலக்கியுள்ளனர். புதுமுகமாகவே தெரியவில்லை. விமல் ராஜா பணக்கார நண்பனாக நடித்துள்ளார். அதற்கே உரிய சில மனோபாவத்துடன் நடித்துள்ளது இயல்பாக உள்ளது. முதல் பாதியில் நண்பர்கள் சேர்ந்து அடிக்கும் லூட்டிகள், ஸ்னூக்கர் விளையாட்டு, காதல் என சொல்லியவர் இரண்டாம் பாதியில் அப்படியே வேறு ஒரு கதையை சொன்ன மாதிரி தோன்றியது. இருந்தாலும் கிளைமாக்ஸ் நம்மை அழ வைக்கிறது. மொத்தத்தில் புதியவர்களின் புதிய முயற்சி வென்றுள்ளது.