
இராவணனை தேடிய சீதையின் காதல் – ‘சீயானே’ புதிய ஆல்பம் விரைவில்.
‘பேட்ட’, ‘பீஸ்ட்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களில் பாடல்கள் எழுதி கவனம் ஈர்த்த பிரபல பாடலாசிரியர் கு. கார்த்திக் அவர்களின் வரிகளில், இசையமைப்பாளர் சுரேஷ் சர்மா இசையமைப்பில், இயக்குநர் பரணிசெல்வம் இயக்கத்தில், KM எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் புதிய ஆல்பம் பாடல் ‘சீயானே’ விரைவில் வெளியாகிறது.
“இராவணனை தேடிய சீதையின் காதல்” என்ற கவித்துவமான தலைப்பில் உருவாகியுள்ள இந்த பாடல், காதலையும் சமூக சிந்தனையையும் ஒருசேர பேசும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாடலில் நடிகர் வினோத் ‘ராவணன்’ கதாபாத்திரத்திலும், நடிகை சோனியா தாஸ் ‘சீதா’ கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இவர்களின் உணர்வுப்பூர்வமான நடிப்பு பாடலுக்கு கூடுதல் வலிமை சேர்த்துள்ளது.
குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள ரிஷ்விகாவின் இயல்பான நடிப்பு பார்வையாளர்களின் மனதை உருக வைக்கிறது. பாடலில் இடம்பெற்றுள்ள அனைத்து கலைஞர்களும் தங்களுடைய பாத்திரங்களை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளதால், இது ஒரு ஆல்பம் பாடல் என்பதைத் தாண்டி, ஒரு முழுநீள குறும்படத்தைப் போலவே காட்சியளிக்கிறது.
இந்த பாடலின் முக்கிய தனிச்சிறப்பு, சாதி என்பது மறக்கப்படவில்லை; மறைக்கப்பட்டு தான் இருக்கிறது என்ற சமூக யதார்த்தத்தை நேர்மையான பார்வையில் பதிவு செய்வதாகும். அடுத்த தலைமுறைக்கு “சாதி என்பது அவசியமற்ற ஒன்று” என்ற விழிப்புணர்வை விதைக்கும் நோக்குடன் இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.
காதல், சமூக பொறுப்பு, உணர்ச்சி ஆகியவற்றின் கலவையாக உருவாகியுள்ள ‘சீயானே’ ஆல்பம் பாடல், இம்மாதம் இறுதியில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. சமூக கருத்துடன் கூடிய தரமான காட்சி அனுபவத்தை வழங்கும் இந்த பாடல், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
