Sunday, May 19
Shadow

செங்களம் வெப் சீரியஸ் – விமர்சனம்

சினிமாக்களை விட இணையதொடர்கள் ஏன் ரசிகர்கள் மத்தியில் அதிகவரவேற்பை பெறுகின்றன என்பதற்கு Zee5 OTT தளத்தில் வெளியாகியிருக்கும் செங்களமும் ஒரு உதாரணம் . தலைப்புக்கேற்றமாதிரியே அரசியல் என்பது கொள்கை, கோட்பாடு என்பதையெல்லாம் தாண்டி ரத்தக்களமும் கூட என்பதை உணர்த்துகிறது.

அதனை வெறுமனே ஒரு ரத்தசரித்திரமாக சொல்லிவிடாமல் பொறுப்புள்ள இயக்குநராக SR பிரபாகரன் சிறிது முதிர்ச்சியுடனே கையாண்டிருக்கிறார் எனலாம்.அவரால் முடிந்தளவு தமிழக அரசியல் அல்லது பொதுவான அரசியல் களம்.எப்படி இருக்கும் என்பதை இன்றைய தலைமுறைக்கு அழகாக எடுத்து சொல்லியிருக்கிறார். கொஞ்சம் அரசியல் பார்வை இருப்பவர்களுக்கு, ஆங்காஙகே கடந்த 30 ஆண்டுகளில் தமிழக அரசியல் களத்தில் நடந்த நிஜ சம்பவங்கள் கண்முன் வந்துபோகலாம்.

பேட்டைக்காளியில் ரசிகர்களின் பேராதரவு பெற்ற கலையரசன் இதில் ராயராக அப்படியே வாழ்ந்திருக்கிறார். வாணிபோஜன், ஷாலி, வேல ராமூர்த்தி, டேனியல் போப் உள்ளிட்டோரும் சிறப்பான பங்களிப்பை வழங்கி இருக்கிறார்கள். வேல ராமூர்த்தி இப்படிப்பட்ட கதாபாத்திரங்களுக்கு என்றே அவதரித்தவர் போல அட்டகாசபடுத்தியிருக்கிறார்.

பகவதி, விஜி சந்திரசேகர், அர்ஜய் என்று பெரிய நட்சத்திரப்பட்டாளமே இருக்கிறது. அயலியில் விஜி சந்திரசேகரின் மகள் கலக்கினார் என்றால் இதில் இவர். அம்மா அல்லது மகள் யாரேனும் ஒருவர் இருந்தால் போதும், அந்த படைப்பு வெற்றி தான் என்று நிரூபித்திருக்கிறார்கள்.

தொழில் நுட்பட ரீதியாக தரனின் இசை செங்களத்தின் பக்கபலம். எடிட்டர்கள் பைஜு, டான் போஸ்கோ வேலையை பிரித்துக்கொண்டார்கள் போல முதல் நான்கு எபிசோடுகளும் மீதமுள்ளவையும் ஒரே களம் தான் என்றாலும் வெவ்வேறு அனுபவங்களை கொடுக்கின்றன.

மர்டர், கிரைம், திரில்லர் என்று வழக்கமான ஜனரில் பயணிக்காமல் ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று நல்ல படைப்புகளை வழங்குவது என்று Zee5 தீர்மானமாக முடிவெடுத்துவிட்டார்கள் போல.

செங்களம், நம் மண்ணின் அரசியல்